ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நாஞ்சில் சம்பத் மீதிப் பணத்தில் எஸ்டேட்​டும் வாங்கிப் போட்டார்.

நாஞ்சில் சம்பத்தை விரட்டும் மறுமலர்ச்சி பஞ்சாயத்து! புதுக் கட்சி, புதுப் பதவி, புது காரு, கலக்குற சம்பத்!’ என்று சொந்தங்கள் தட்டிக்​கொடுக்க, அ.தி.மு.க. சாதனை விளக்கக் கூட் டங்களில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பயணிக்​கிறார் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்! இந்த நிலையில், நாகர்கோவிலில் நடந்த மாவட்ட ம.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில், நாஞ்சில் சம்பத்துக்கு ஒரு செக் வைத்துள்ளனர் அந்தக் கட் சியினர். இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லை செல்வம், ''ம.தி.மு.க-வை வீதி எல்லாம் சென்று விதைத்ததாக நாஞ்சில் சம்பத் மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறார். இவருக்காகக் கூட்டம் கூடியது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், ஒரு பேச்சாளர் என்ற முறை​யில் கறாராகப் பணம் வாங்கிக்கொண்டுதான் கூட்டங்​களுக்கு வருவார். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், எங்காவது இலவசமாகப் பேசி இருக்கிறாரா? ஒரு பேச்சாளர் என்ற தளத்தையும் தாண்டி, மேடை அமைப்பு மற்றும் கூட்டம் நடத்தும் இடம் என்றெல்லாம் சகல விஷயங்களிலும் மூக்கை நுழைப்பார். கட்சிக்கு உழைத்ததால் இவர் மீது 48 வழக்குகள் இருப்பதாக அனுதாபம் தேடுகிறார். ஆனால், அத்தனையும் இவரது அவதூறுப் பேச்சுக்குக் கிடைத்த பரிசுதான். குருவாயூர் கோயி​லுக்கு யானை கொடுத்த சமயத்தில் ஜெயலலிதாவையும் சசிகலா​வையும் பற்றி இவர் கேலியாகப் பேசியதும், கனிமொழி, ஸ்டாலின் போன்றவர்​களைத் தரக்குறைவாக விமர்சித்ததும் வைகோ சொல்லிக்கொடுத்தா பேசினார்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரம். அப்போதைய தி.மு.க. அரசு தேசியப் பாது​காப்புச் சட்டத்தில் சம்பத்தைக் கைது செய்தது. துடித்துப்​போன வைகோ, விருதுநகரில் சில கிராமங்களுக்கு ஓட்டு கேட்டுக்கூட போகாமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் போராடி சம்பத்தை வெளியே கொண்டு வந்தார். அதனால், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வைகோ தோல்வி அடைந் தார். அந்த அளவுக்கு நாஞ்சில் சம்பத்துக்காகத் துடித் தவர் எங்கள் பொதுச் செயலாளர்.
ஆரம்பத்திலேயே எங்கள் இயக்கத்தின் சார்பில் சம்பத்துக்கு டெம்போ ட்ராக்ஸ் கார் வாங்கிக் கொடுத்தோம். ஆனால், நாஞ்சில் சம்பத் அதைக் கட்சி செயல்பாடுகளுக்காகப் பயன்படுத்தியதே கிடையாது. கீரிப்பாறையில் உள்ள அவரது எஸ் டேட் பணியாளர்களை அழைத்துச் செல்வதற்கு மட்டும்தான் அந்த வண்டியைப் பயன்படுத்தினார். இரண்டு மாதங்களுக்கு முன் இவருக்கு ம.தி.மு.க. சார்பில் இரண்டு தவணைகளாகப் பணம் கொடுத்து புது இனோவா கார் வாங்கிக் கொடுத்தோம். அப்போதுகூட பழைய டெம்போ ட்ராக்ஸ் காரை நான்கரை லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு, நான்கு லட்ச ரூபாய்க்கு விற்றதாகக் கட்சிக்குக் கணக்குக் காட்டியவர்தான் நாஞ்சில் சம்பத். அந்த இனோவா காரையும் இன்னமும் சம்பத் திருப்பிக் கொடுக்க வில்லை.
மணக்காவிளையில் உள்ள இவரது வீட்டின் முன் பகுதி புறம்போக்கு நிலத்தில் இருந்தது. அப்போதைய அ.தி.மு.க. அரசு, சாலையை விரிவுபடுத்துவதாகச் சொல்லி இவரது வீட்டின் முன்பகுதியை இடித்து விட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சங் கொலி’யில் வந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி குமரி வரையுள்ள ம.தி.மு.க. தொண்டர்கள் அவர்களால் முடிந்த அளவுக்குப் பணமாக அனுப்பினர். அதன் முழு விவரமும் சங்கொலியில் வந்தது. அந்த வகையில் மட்டும் 48 லட்ச ரூபாய் வசூலானது. இதுபோக, வெளியில் தெரியாமல் கிடைத்த சலுகைகளும் ஏராளம். அந்தப் பணத்தில்தான் சொந்தமாக நிலம் வாங்கி, புது வீடும் கட்டினார். மீதிப் பணத்தில் கீரிப்பாறையில் எஸ்டேட்​டும் வாங்கிப் போட்டார்.
மணக்காவிளையில் சாதாரண பெட்டிக் கடை நடத்தி வந்த சம்பத்தின் குடும்பம் இன்று வளமாக இருப்பதற்குக் காரணமே ம.தி.மு.க-தான். வளர்த்த இயக்கத்தை விட்டுவிட்டு வேறு இயக்கத்துக்குச் சென் றவர், எங்களது காரையும் வீட்டையும் திருப்பிக் கொடுப்பதுதானே முறை? அப்படிக் கொடுக்கா​விட்டால், பொதுச் செயலாளரிடம் முறையிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்'' என்றார் ஆவேசமாக.
இந்த விவகாரம் குறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். ''அது ம.தி.மு.க. கட்டிக் கொடுத்த வீடு என்பதே தவறு. என்னிடம் அன்புகொண்ட என் தம்பிமார்கள் கட்டிக்கொடுத்த வீடு. இனோவா காரும் அப்படித்தான். நான் எதையாவது திருப்பித் தர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தால், நான் அந்த இயக்கத்துக்காக உழைத்து இழந்த என்னுடைய 19 ஆண்டு கால வாழ்க்கையைத் திருப்பித் தரட்டும். அதன்பிறகு பார்க்கலாம். டெம்போ ட்ரக்ஸை நான் விற்று விட்டேன் என்று சொல்வதே தவறு. அதை வைகோவின் டிரைவர் துரையின் மூலமாக, வைகோ வீட்டிலேயே ஒப்படைத்து விட்டேன்'' என்றார்.
குமரி ம.தி.மு.க-வினர் கொந்தளிப்பில் இருக்கிறார்​கள்!
- என்.சுவாமிநாதன், படங்கள்: ரா.ராம்குமார்  vikatan.com

கருத்துகள் இல்லை: