திங்கள், 16 ஜூலை, 2012

விலையில்லா ஆடு, மாடு, மிக்ஸிக்கெல்லாம் ஜெய்ராம் ரமேஷா பணம் கொடுப்பார்?

ஜெயலலிதா ஆவேசம்: பன்னீர்செல்வத்தை ஃபாலோ பண்ணினாரா ஜெய்ராம் ரமேஷ்?

Viruvirupu,
“தமிழக குடிநீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவு செய்யவில்லை என்பதால், அடுத்த கட்ட நிதி ஒதுக்க முடியாது” என மத்திய அரசு கை விரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா, கொடநாட்டில் இருந்து டில்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி ஏற்கனவே ரூ.236 கோடியே 59 லட்சத்தை தமிழக அரசு செலவிடவில்லை. எனவே தற்போது ஒதுக்க வேண்டிய தவணைத் தொகை ரூ.138.58 கோடியை ஒதுக்க இயலாது. செலவிடப்படாமல் உள்ள தொகையை செலவிட்ட பின்னரே அடுத்த கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு கொடநாட்டில் இருந்து ஆட்சி புரியும் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், “தமிழகத்துக்கு 2012 மார்ச் மற்றும் ஏப்ரல் வரை ஒதுக்கப்பட்ட தொகை ரூ.168.77 கோடி. தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.87.45 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளது. அதாவது, கிடைத்த நிதியில் பாதியளவுக்கு மேலாக செலவு செய்திருக்கிறோம்.

எம்மைவிட குறைவாக செலவு செய்த மற்றைய மாநிலங்களும் உள்ளன. அவர்களுக்கு அடுத்த தவணை நிதி கொடுக்கும்போது, எமக்கு பாரபட்சம் காட்டுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு, தமிழகத்தை அலட்சியப் படுத்துவது, முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பது எதிர்பார்க்கப்படக் கூடியதே. தமிழக அரசின் நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள்.
குடிநீர் திட்டத்துக்காக வழங்கப்பட்ட 168.77 கோடியில், 87.45 கோடி செலவிடப்பட்டுள்ளது. மீதி 81.32 கோடியை முதலில் செலவு பண்ணுங்கள் என்கிறது மத்திய அரசு. குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக குடிநீருக்கே செலவு செய்தால், விலையில்லா ஆடு, மாடு, மிக்ஸிக்கெல்லாம் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷா பணம் கொடுப்பார்?
அதில் எடுத்துதானே, இதில் கொடுக்க வேண்டும். இதைக்கூட புரியாத மத்திய அரசு, எப்படி நாட்டை ஆள முடியும்?
அதைவிட முக்கிய விஷயம், இந்த டில்லிக்காரர்களுக்கு மனிதாபிமானமே கிடையாது என்பதுதான். டில்லி பணம் அனுப்பிய நாட்களில், தமிழக அமைச்சர்கள் சும்மாவா உட்கார்ந்திருந்தார்கள்? 32 அமைச்சர்களும், 32 பற்களும் தெரியும்படி புதுக்கோட்டையில் அல்லவா வளைய வந்து கொண்டிருந்தார்கள். அதுவும் 30 நாட்களுக்கு மேலாக!
ஒட்டுமொத்த அமைச்சர்களே தலைநகரில் இல்லாத நேரமாக, தலைமைச் செயலகமே இயங்காத நேரமாக பார்த்து சென்னைக்கு பணத்தை அனுப்பினால் எப்படி செலவு செய்வது என்பதை மத்திய அரசு ஏன் புரிந்து கொள்ளவில்லை?
புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பின்னரும், அமைச்சர்கள் உடனே வந்து சீட்டில் அமர்ந்து அலுவல் பார்க்கவா முடியும்? விஜயகாந்த் கட்சிக்கு டெபாசிட் கிடைத்தது எப்படி என்ற கேள்விக்கு மன்மோகன் சிங்கா பதில் சொல்லுவார்? அதன்பின் அம்மா கொடநாடு போனபோது வரவேற்பு ஏற்பாடுகளை கவனிக்க சோனியா காந்தியா ஆளனுப்புவார்?
கொடநாட்டு வரவேற்பு நிகழ்ச்சியை மத்திய அரசு வீடியோவிலாவது பார்த்ததா? தாரை தப்பட்டையென்ன.. ஒயிலாட்டம் கரகாட்டமென்ன.. என்ன.. என்ன..
வெறும் 32 அமைச்சர்கள் எத்தனை அலுவல்களை பார்ப்பது? அவர்கள் மனிதர்கள் இல்லையா? இதற்கு மேலும் அவர்களது பணி சுமையை உயர்த்தினால், சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் முறையிட வேண்டிய நிலை ஏற்படும்!
மந்திரிகளை மனிதர்களாக மதிக்கத் தெரியாத மனிதாபிமானமற்ற மத்திய அரசு.
“தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அடுத்த கட்ட தவணைத் தொகை ரூ.138.58 கோடியை தாமதப்படுத்தாமல் உடனே ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

கருத்துகள் இல்லை: