வினவு,
ஒரு ஒடிசா, ஜார்க்கண்ட் அல்லது சத்தீஸ்கர் பழங்குடித் தொழிலாளி
தமிழச்சியை மணந்து கொண்டு “கலப்பின”க் குழந்தை பெற்றுக் கொண்டால் ஏன் இந்த
தமிழ்த் தேசிய பாஸிஸ்டுகளின் இரத்தம் கொதிக்கிறது?
t;மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்.
t;மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்.
“வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்ற த.தே.பொ.க. முழக்கம் ம.க.இ.க.விற்கு
எட்டிக் காயாய் கசக்கிறது. அம்முழக்கத்தைத்தான் பாசிசம் என்று
பழிதூற்றுகிறது” என்கிறது மணியரசனின் கும்பல்.
உண்மைதான். ‘இச்சிக்கலில்’ மணியரசன் கும்பலின் நிலைப்பாடு, ம.க.இ.க.
மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு மட்டுமல்ல; எல்லாப் பாட்டாளி வர்க்க
சர்வதேசிய இயக்கங்களுக்கும் ‘எட்டிக் காயாய்’ கசக்கிறது. மணியரசன்
கும்பலைப் போன்ற குட்டி முதலாளிய குறுகிய இனவெறியர்களைத் தவிர, எத்தனை
தேசிய இனவாதக் குழுக்கள் இந்த நிலைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்?
“இது பாசிசமா? இல்லை. தற்காப்பு!” என்றும்
“இது பாசிசமா? இல்லை. இது சனநாயகம்!” என்றும் வாதாடுகிறது மணியரசன்
கும்பல்; அதேசமயம், இது பாசிசம்தான் என்கிற வகையில் ஒப்புதல் வாக்குமூலமும்
கொடுத்திருக்கிறது.
“இட்லர் செயல்படுத்திய பாசிசம் என்பது
என்ன? பல நூறு ஆண்டுகளாக, ஜெர்மனியில் வாழ்ந்து வந்த யூதர்களை
வெளியேற்றுதல், கூட்டம்கூட்டமாகக் கொலைசெய்தல் போன்ற கொடுஞ்செயல்களைக்
கொண்டது இட்லரின் பாசிசம்” என்று இட்லரின் பாசிசத்துக்கு விளக்கமளிக்கிறது.
அதற்கு முன்பாக, தமிழர்கள் தாயகத்தைப் பாதுகாத்துக் கொள்ள ஏன் வெளியாரை
வெளியேற்ற வேண்டும் என்பதற்கு பின்வரும் காரணத்தையும் கூறுகிறது.
“தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்க வேண்டும். வரைமுறையின்றி மிகை எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் குடியேறினால், பிறகு, தமிழகம் தமிழர்களின் தாயகமாக நீடிக்காது. கலப்பினங்களின் தாயகமாக மாறிவிடும். கலப்பினத் தாயகமாக மாறி விட்டால், சொந்த மண்ணிலேயே, தமிழர்கள் இரண்டாந்தர, மூன்றாந்தரக் குடிமக்களாக மாற்றப்படுவர்.”
ஆம். மணியரசன் முன்வைக்கும் இத்தகைய காரணத்துக்காகத்தான் இட்லரின்
பாசிசம் யூதர்களை நரவேட்டையாடும் கொடுஞ்செயலை நடத்தியது. ஆரிய இனத்தின்
இரத்தத் தூய்மையைப் பாதுகாக்கவேண்டும், தமது ஆரிய இன இரத்தம் யூதர்களின்
செமட்டிக் இன இரத்தத்துடன் கலந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஐந்து
இலட்சம் யூதர்களை ஆஷ்விட்ஸ் வதை முகாமில் பிடித்து வைத்து இரத்த ஆராய்ச்சி
செய்து கொன்றதோடு, நாடு முழுவதும் மேலும் பல இலட்சம் யூதர்களைப் படுகொலை
செய்தது, இட்லரின் பாசிச நாஜிப் படை. நல் வாய்ப்பாக மணியரசன் கும்பல்
அதிகாரத்திலும் இல்லை; விடுதலைப் புலி பிரபாகரனைப் போல தனிப்படையையும்
கொண்டிருக்கவில்லை. அவ்வாறிருந்தால், இசுலாமியர்கள் அனைவரும் ஈழத்தைவிட்டு
வெளியேற வேண்டும் என்று கெடு வைத்து, மன்னாரில் தொழுகை நடத்திக்
கொண்டிருந்த வழிபாட்டுத் தலத்துக்குள் புகுந்து பலரைச் சுட்டுக் கொன்ற
புலிகளைப் போல, மணியரசன் கும்பலும் பாசிசக் கொடுஞ்செயலில்
ஈடுபட்டிருக்கும். அதனால்தான் இப்போதைக்கு, தமிழ் மக்கள் சிறுபான்மையினர்
ஆகிவிடுவார்கள், தேசம் கலப்பினத் தாயமாக மாறிவிடும் என்று பூச்சாண்டி
காட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறது.
தமிழின மக்களின் இரத்தத் தூய்மையைத் காத்துக் கொள்ளத் துடிக்கிறது
மணியரசன் கும்பல். ஒரு ஒடிசா, ஜார்க்கண்ட் அல்லது சத்தீஸ்கர் பழங்குடித்
தொழிலாளி தமிழச்சியை மணந்து கொண்டு “கலப்பின”க் குழந்தை பெற்றுக் கொண்டால்
மணியரசனுக்கு என்ன? ஏன் மணியரசனின் இரத்தம் கொதிக்கிறது? மணியரசன்
முன்வைக்கும் இதே காரணங்களைக் கூறித்தான், அமெரிக்காவின் குகிளக்ஸ்கிளான்,
ஐரோப்பாவின் புதிய நாஜிக்கள் போன்ற வெள்ளை நிறவெறி பாசிசக் குழுக்கள் ஆசிய,
ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து, மேலை நாடுகளில்
குடியேறும் உழைக்கும் மக்களைத் தாக்குகின்றனர். இசுலாமிய மக்கட்தொகைப்
பெருக்கம், கலப்பு மணங்களால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவர் என்ற
பீதியைப் பரப்பித்தான் பார்ப்பன இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பல்
மதவெறிப் படுகொலைகளை நடத்துகிறது.
கிரிமினல் குற்றங்கள் பெருமளவாகி விட்டன என்பதற்காக சில ஆண்டுகளுக்கு
முன்பு அப்பாவி இளைஞர்களைப் பிடித்து, கோணி ஊசியால் கண்களைக் குத்தி
குருடாக்கியது பீகார் போலீசு; அதைப் போலவே, அப்பாவி இளைஞர்களின் கைகால்களை
முறித்துப் போட்டது உ.பி. போலீசு. அதேபாணியில் போலி மோதல்களை
அரங்கேற்றுகிறது, பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் போலீசு. மேலும்,
வடமாநிலத்தவர் கணக்கெடுப்பு, அவர்களை போலீசு நிலையங்களில் பிடித்து வைத்து
வதை செய்வது, வாடகைக் குடித்தனக்காரர்கள் பற்றிய விவரங்களை, அடையாள
ஆதாரங்களைப் போலீசுக்குத் தராத வீட்டு உடைமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தண்டனை நடவடிக்கைகளைப் போலீசு மேற்கொள்கிறது.
மணியரசன் கும்பலோ, போலீசின் போலி என்கவுண்டரைக் கண்டிப்பதாகக் கூறும்
அதேசமயம், வடமாநிலத்தவர் என்றாலே கிரிமினல் குற்றவாளிகள் என்ற
கருத்துருவாக்கம் செய்யும் முதலாளிய ஊடகங்களோடு சேர்ந்து கொண்டு,
“வடமாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி, படிப்புத் தேடி தமிழகம்
புகுந்தவர்களில் பலர் கொள்ளைக்காரர்களாக, கூலிக்குக் கொலை செய்வோராக,
குழந்தைகளை வல்லறவு கொள்வோராகச் சீரழிந்தனர். அண்மைக்காலங்களில்
தமிழ்நாட்டில் நடந்த இவ்வகையான குற்றங்களில் அதிக விகிதத்தில் ஈடுபட்டோர்
வடநாட்டவரே! எனவே, தமிழ்நாட்டில் குடிபுகுந்த வடநாட்டவர் பற்றிய
கணக்கெடுப்பையும் பதிவையும் காவல்துறை செய்து வருகிறது” என்று கூறி
போலீசின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. போலீசின் இத்தகைய நடவடிக்கைகளை
எதிர்க்கும் மனித உரிமை அமைப்பினரை இனத்துரோகிகள் என்று வசைபாடுகிறது.
போலீசின் மேற்படி நடவடிக்கைகள் வடமாநிலத்தவர்க்கு எதிராகவோ, மணியரசன்
கும்பல் கோருவதைப் போல அனைத்து வெளிமாநிலத்தவர்க்கு எதிராகவோ மட்டும்
நின்றுவிடாது. பயங்கரவாத, தீவிரவாத முத்திரைக் குத்தி போலீசு வேட்டையாடும்
மதச் சிறுபான்மையினர், கம்யூனிசப் புரட்சியாளர்கள் மட்டுமல்ல;
பிரிவினைவாதிகள் என்று கூறி தமிழினக் குழுவினருக்கும் எதிராக
ஏவிவிடப்படும். ஏற்கெனவே இத்தகைய நடவடிக்கைகள் புலம் பெயர்ந்து இங்கே
வந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போலீசின்
இத்தகைய நடவடிக்கைகள் வீட்டுச் சொந்தக்காரர்களைப் போலீசு உளவாளிகளாக
மாற்றும்; இல்லையென்றால், அவர்கள் மீது கிரிமினல் குற்றஞ்சாட்டித்
தண்டிக்கவும் செய்யும். இவையெல்லாம் மணியரசன்களின் மூளைக்கு ஏன்
உறைக்கவில்லை?
“புதிதாக வந்த வெளிமாநிலத்தவர்களுக்குக்
குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை வழங்கக் கூடாது. த.தே.பொ.க.வின்
இந்நிலைப்பாடு உலகெங்குமுள்ள ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளை
ஒட்டியதுதான்!” என்று சாதிக்கிறது, மணியரசன் கும்பல்.
வலிய அழைத்து, மாபெரும் மணியரசனின் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளும்
புலம்பெயர்ந்து மேலை நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் சொல்ல வேண்டும்,
இந்தக் கூற்று உண்மைதானா என்று! தமது சொந்த நாட்டு மக்கள் அனைவரையும்
கண்காணிப்பில் வைத்திருக்கும் மேலைநாட்டு அரசுகள், புலம் பெயர்ந்த
குடியேற்றக்காரர்களையும் அப்படித்தான் வைத்திருக்கின்றன என்பது உண்மைதான்.
ஆனால், குடியேற்றக்காரர்களின் அடிப்படைத் தேவைகளையும், வாழ்வுரிமைகளையும்
மறுக்கவில்லை. அவர்களுக்கு வேலை உரிமை, கல்விமருத்துவ உரிமை அளிப்பதோடு,
வாழ்விடம் மற்றும் உணவுத் தேவைகளை உறுதி செய்கிறது. ஆனால், இங்கே
குடியேறியவர்களுக்கு இவற்றை மறுக்கச் சொல்லும் “த.தே.பொ.க.வின் நிலைப்பாடு
உலகெங்குமுள்ள ஒவ்வொரு நாடும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளை ஒட்டியதுதான்!”
என்று கூசாமல் புளுகுகிறது, மணியரசன் கும்பல்.
“தமிழ்த் தேசியக் கொள்கைப்படி தமிழ்நாடு
ஒரு தனிநாடாக இருக்கத் தகுதி உடையது. ஒரு தனிநாட்டில் அந்நாட்டின்
தேவைக்கேற்ப விசா வழங்கி, வெளிநாட்டினரை அனுமதிக்கின்றனர். யார்
வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், நுழையலாம், குடியிருக்கலாம்
என்று எந்த நாடும் அனுமதிப்பதில்லை. அதே நடைமுறை தமிழ் நாட்டிற்கும்
வேண்டும் என்கிறோம்”; “ஈழம், காசுமீரம், வடகிழக்கு மாநிலங்களில் அந்நியர்
குடியேற்றத்தை ம.க.இ,க எதிர்க்கிறது, ஆனால், தமிழ்நாட்டில் ஆதரிக்கிறது”
என்கிறது, மணியரசன் கும்பல்
மேலும் சொல்கிறது, “இதில் ம.க.இ.க.வின்
உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித் திசைதிருப்புவதற்காக வெவ்வேறு
நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம் ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின்
தன் முரண்பாடற்ற கொள்கை.”
“தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத் தகுதி உடையது” என்பதாலேயே ஒரு
தனிநாடாக இருப்பதாகக் கொள்ள முடியாது. இது இன்னமும் இந்திய நாட்டின்
மாநிலங்களில் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவின் ஒரு மாநில மக்கள் வேறு
மாநிலங்களில் குடியேறவும் சொத்துக்களை வாங்கவும் தொழில் புரியவும்
உரிமைதரும் பொதுச் சட்டம்தான் உள்ளது. ஆனால், காசுமீர், வடகிழக்கு
மாநிலங்கள் மற்றும் பழங்குடி மக்கள் வாழும் பிரதேசங்கள் தனிச்சிறப்பான
வரலாற்று, அரசியல் சூழல்கள் காரணமாக தனிச்சிறப்பான சட்டங்களையும்
தடைகளையும் கொண்டுள்ளன.
குறிப்பாக, காசுமீரமும் வடகிழக்கு மாநிலங்களும் இந்திய ஒன்றியத்துக்குள்
வலுக்கட்டாயமாகவும் அரசியல் சூழ்ச்சியாலும் இணைக்கப்பட்டவை. அப்போதிருந்தே
இந்திய ஒன்றியத்துக்கும் அதன் இராணுவ ஆதிக்கத்துக்கும் அடிபணிய மறத்து
அங்குள்ள மக்கள் எழுச்சியுற்றுப் போராடுகின்றனர். அவர்களுடைய எழுச்சிக்கு
முகங்கொடுக்க முடியாமல்தான் இந்திய அரசு, இந்தியாவின் பல சட்டங்களுக்கும்
அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தே நிறைவேற்றுகிறது. இதனாலேயே இந்தியாவின் பல
சட்டங்களும் காசுமீரத்துக்குப் பொருந்தாது. வடகிழக்கில் அரைநூற்றாண்டுக்கு
மேலாகத் தொடரும் மக்கள் எழுச்சி மற்றும் ஆயுதப் போராட்டங்களால்தான் இந்திய
அரசு அவற்றின் தலைமையுடன் இந்தியாவுக்கு வெளியே இரகசியப் பேச்சுவார்த்தை
நடத்தி வருகிறது.
காசுமீரச் சிறுவர்களின் கல்லெறிப் போராட்டங்களும், மணிப்பூரில் ஆயுதப் படை முகாமின் வாசலில் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டமும்
உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கின. அதற்கு இணையான தமிழ் மக்களின்
போராட்டம் எதையாவது திராவிட இயக்கத்தாலும் தமிழினக் குழுக்களாலும்
கட்டமைக்க முடிந்ததா? “பாகிஸ்தான்காரன் வந்துவிடுவான், சீனாக்காரன் வந்து
விடுவான்; இந்தியாவின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால்,
ஈழத்துக்கு ஆதரவு தெரிவியுங்கள்” என்று கெஞ்சிக் கொண்டு தானே இருக்க
முடிகிறது! இதையெல்லாம் மறந்து மறைத்து தமிழ்நாடு ஒரு தனிநாடாக இருக்கத்
தகுதியுடையது என்பதாலேயே தனிநாடாக ஆகிவிட்டதாகப் பாவித்து வாதங்கள்
புரிகிறது, மணியரசன் கும்பல்.
“ஈழத் தமிழினப் பிரதேசங்களில் சிங்களக்
குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் எதிர்க்கும் ம.க.இ.க.
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குடியேற்றத்தை எதிர்க்கவில்லை, வெளியாரை
வெளியேற்றும் த.தே.பொ.க.வின் நிலைப்பாட்டை பாசிசம் என்று சாடுகிறது. இதில்
ம.க.இ.க.வின் உண்மை முகம் எது? இன உணர்வாளர்களை ஏமாற்றித்
திசைதிருப்புவதற்காக வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகத்துடன் கபட நாடகம்
ஆடுவது மட்டுமே ம.க.இ.க.வின் தன் முரண்பாடற்ற கொள்கை” என்கிறது மணியரசன்
கும்பல்.
ஈழம், காசுமீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றமும்,
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் குடியேற்றமும் வேறு வேறு
காரணங்களால், வேறு வேறு சூழலில் எழும் பிரச்சினைகள். எல்லாமும் ஒரே
வகையானவை அல்ல. அதனால்தான் நமது நிலைப்பாடுகளும் வேறு வேறானவைகளாக உள்ளன.
மணியரசன் கும்பலின் குறுகிய இனவெறி பாசிசப் பார்வை இந்த வேறுபாடுகளைக் காண
மறுக்கின்றது.
ஈழத் தமிழினத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் குடியேற்றங்களையும்
ஆக்கிரமிப்புகளையும் ஒரு பேரினத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தாலும் அதன்
அரசாலும் ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு முன்னும் பின்னும் திட்டமிட்டுச்
செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தற்போது
பெருமளவு நடக்கும் உழைக்கும் மக்களின் புலம் பெயர்வும் குடியேற்றமும்
அவ்வாறானது அல்ல. சிங்களர்களைப் போல நிரந்தர நிலம் மற்றும் வாழ்விடக்
குடியேற்றத்திலும் பிரதேச ஆக்கிரமிப்பிலும் இம்மக்கள் ஈடுபடவில்லை.
தற்காலிகத் தகரக் கொட்டகைகளிலும் குடிசைகளிலும் வாழும் கொத்தடிமைகளாகவே
உள்ளனர். மேலும், இவர்கள் சிங்கள இனத்தைப் போல ஆளும் வர்க்கங்களால்
பிரதிநிதித்துவப்படுத்தப்படும் எந்தவொரு பேரினத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல.
இவர்களே முழுமையான தேசிய இனமாக உருவாகிவிட்டவர்கள் அல்ல. ஜார்கண்ட்,
சத்தீஸ்கர் மாநிலங்களின் பழங்குடியினர் மற்றும் வடகிழக்கு இந்தியா, ஒடிசா,
வங்கம், பீகாரி மக்கள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும்
மக்கள். இவர்கள் எவரும் இந்திய தேசியத்தை சேர்ந்தவர்களும் இல்லை. மேலும்,
இந்திய தேசியம் என்பதே இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது ஒடுக்குமுறைக்கும்
சுரண்டலுக்கும் வேண்டி உருவாக்கிக் காத்துவரும் ஒரு கற்பிதம்தானே தவிர,
எந்த சமூக, இன அடிப்படையிலான மக்களையும் கொண்டதில்லை. ஆகவே,
தமிழகத்துக்குப் பிழைப்பு தேடிவரும் உழைக்கும் மக்களின் இடப்பெயர்வையும்
சிங்கள அரசு நடத்தும் சிங்களக் குடியேற்றம் மற்றும் பிரதேச ஆக்கிரமிப்பும்
ஒரே அடிப்படையையும் விளைவையும் கொண்டதாகச் சித்தரிப்பது மணியரசன் கும்பலின்
வழக்கமான அரசியல் பித்தலாட்டங்களில் ஒன்றுதான்!
“தொழிலாளர்கள் அனைவரையும் புரட்சியாளர்கள்
முற்போக்கானவர்கள் என்று கருதக்கூடாது; காலனியாதிக்கக் கொள்ளையில் பங்கு
பெறும் தொழிலாளிகள் ‘தொழிலாளர் பிரபு’க்களாகி, வர்க்க உணர்ச்சி இன்றி ஆளும்
வர்க்கத்தை ஆதரிக்கும் தொழிலாளர் பிரபுத்துவத்துடன் புரட்சிக்கு
எதிரானவர்களாவது பற்றி மார்க்ஸ் கூறியிருக்கிறார்” என்பதைச் சுட்டி,
அதைப்போல வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தொழிலாளர் இயக்கத்தை
பலவீனப்படுத்தி, முடக்கி, சீர்குலைத்து வருகிறார்கள் என்று மணியரசன்
கும்பல் குற்றஞ்சாட்டுகிறது.
தமிழகத்திலுள்ள தொழிற்சங்க இயக்கங்கள்அமைப்புகள் எதுவும் வெளிமாநிலத்
தொழிலாளர்களால் பலவீனப்படுத்தப்படுவதாகவும், சீர்குலைக்கப்படுவதாகவும்
ஒருபோதும் கூறியதே இல்லை. தொழிலாளர் இயக்கத்தோடு எவ்வித ஒட்டும் உறவும்
இல்லாத, தமிழக உழைக்கும் மக்களிடையே வேரும் விழுதும் இல்லாத அனாமதேய குட்டி
முதலாளிக் குழுக்களைக் கொண்டு அடையாளப் ‘போராட்டங்களை’ மட்டும் நடத்திக்
கொண்டுள்ள மணியரசன் கும்பல்தான் இவ்வாறான புனைகதைகள் எழுதுகின்றன.
சி.ஐ.டி.யு; தொ.மு.ச. போன்ற பெரிய தொழிற்சங்கங்களுடன் போட்டி போட்டு
பிரதிநிதித்துவம் பெருமளவு வேகமாகவும், போர்க்குணத்துடனும் வளரும் நமது தொழிலாளர் அமைப்பு
அம்பத்தூரில் நடத்திய முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் ஒடிசா
தொழிலாளி ஆற்றிய நேருரை தொழிலாளர்களிடையே எத்தகைய எழுச்சியை ஏற்படுத்தியது;
தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நமது அமைப்பு நடத்திய மே தினப் பேரணியில்
போலி கம்யூனிஸ்டுகள் இணைந்து நடத்தியவற்றை விடப் பலமடங்கு அதிகமாகத்
தொழிலாளர்கள் திரண்டதும் மணியரசன் கும்பலுக்கு தெரியுமோ, தெரியாதோ!
இருந்தாலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நமது அமைப்பில் சேர்ந்து நமது
“சீர்குலைவுப் பணிக்குப் பயன்படுவார்கள். தொழிலாளர் இயக்க வளர்ச்சிக்குப்
பயன்பட மாட்டார்கள்” என்று சாபமிடுகிறார்கள்.
“வெளிமாநிலங்களில் நிலவும் வறுமையாலும்
வேலையின்மையாலும் பிழைப்புத் தேடி வருகிறார்கள். அவற்றுக்கெதிராக
அங்கெல்லாம் போராடாதவர்கள், இங்கு உரிமைகோரும் உளவியலை இழந்துள்ளார்கள்.
அதாவது மனத்துணிச்சலை இழந்துள்ளார்கள்” என்றவாறான விளக்கங்கள் கொடுத்து
அவர்கள் தமிழகத் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானவர்கள் என்று மணியரசன்
கும்பல் சித்தரிக்கிறது.
“வறுமை, வேலையின்மை காரணமாக பிழைப்புத் தேடி இடம் பெரும் உழைக்கும்
மக்கள்” என்று அரதப் பழைய வழமையான வாதங்களை உச்சாடனம் செய்யும் மணியரசன்
கும்பல், இன்றைய யதார்த்தத்தைக் காண மறுத்துக் கண்களை இறுக
மூடிக்கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாகப் புகுத்தப்படும் உலகமயமாக்கக்
கொள்கைகள்; அதன் விளைவாக மூலதனம், உற்பத்தி, சந்தை, உழைப்புப் பிரிவினை
ஆகியவை உலகமயமாகி வருவதோடு, அதன் விளைவாக ஏற்றத்தாழ்வான வளர்ச்சி
நிகழ்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட,
பின்தங்கிய பிரதேசங்கள், தேசங்கள், நாடுகளில் இருந்து முன்னெப்போதும்
கண்டிராதவாறு உழைப்பாளிகளின் இடம் பெயர்வு மிகப் பெருமளவு இப்போது
நடக்கிறது.
தமிழ்நாட்டிலேயே தெற்கு, கிழக்கு மாவட்டங்களில் இருந்து மேற்கு மாவட்ட
நகரங்களுக்கும், வடக்கு மாவட்டங்களில் இருந்து சென்னை புறநகரங்களுக்கும்,
தருமபுரி கிருட்டிணகிரி மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கும்
உழைப்பாளர் இடம் பெயர்வதும், இந்தியாவில் வளர்ச்சி குன்றிய, வாழ்வாதாரங்கள்
பிடுங்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களின் உழைக்கும் மக்கள்
தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்வதும் நிகழ்கிறது.
எல்லாவற்றையும் தேசிய இன முரண்பாடாகவும், தேசிய இனச் சிக்கலாகவும் ஒற்றைச்
சட்டகப் பார்வையில் காணும் மணியரசன் கும்பலால் ஏகாதிபத்திய
உலகமயமாக்கலையும் அதன் விளைவுகளையும் காணமுடியவில்லை. ஏகாதிபத்திய
உலகமயமாக்கத்திற்கு மாற்றாக, பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம் என்ற
மாற்றுத்தீர்வையும் ஏற்க முடியவில்லை. பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான்
பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பாக இருக்க
முடியும் என்பதையும் குட்டி முதலாளிய, முதலாளிய தேசிய இனவாதிகளால் ஏற்க
முடியாதுதான்.
ஏகாதிபத்திய உலகமயாக்கத்தின் விளைவாக, வெவ்வேறு தேசிய இனங்கள்
நாடுகளின் உழைக்கும் மக்கள் பிழைப்புக்காகத்தான் என்றாலும் பெருமளவு இடம்
பெயர்வதும் உழைப்புச் சந்தையில் ஒன்றுகுவிக்கப்படுவதும் எதிர்மறையில்
பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமையைத் துரிதப்படுத்துகிறது. ஏகாதிபத்திய
உலகமயமாக்கத்தின் கீழ் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் உலகமயமாகியுள்ள
நிலையில், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு (பன்னாட்டு தொழிற்கழகங்களுக்கு)
எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும் தேசிய அடையாளங்களையும் கடந்த
பாட்டாளிவர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய
அவசியம் எழுந்துள்ள நிலையில், அந்தப் போக்குக்கு எதிரான நிலையை மணியரசன்
கும்பல் போன்ற இனவாதக் குழுக்கள் எடுக்கின்றன.
ஆகவே, வெளிமாநில உழைக்கும் மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் பகையைத்
தூண்டிவிடுவதும், இந்திய தேசியத்தால் ஒடுக்கப்படும் பிற அண்டை தேசிய
இனங்களுக்கும் தமிழினத்திற்கும் இடையிலான முரண்பாட்டை பகை முரண்பாடாகக்
கொள்வதும் ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்குத் துணை போவது; அதுமட்டுமல்ல,
தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கும் எதிரானது.
“விடுதலை கோரும் ஒரு தேசிய இனத்திற்கு ஒரே
ஒரு பகை முரண்பாடுதான் இருக்கும் என்று கருதக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட
பகை முரண்பாடுகள் இருக்கலாம். அவ்வகையில் தமிழ்த் தேசிய இனத்திற்குள்ள பகை
முரண்பாடுகளில் முதன்மையானது இந்திய அரசுடன் உள்ள முரண்பாடுதான். முதன்மைப்
பகை முரண்பாடு தவிர்த்த மற்ற பகை முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துப்
போராடக் கூடாது என்று மார்க்சிய லெனினியம் கூறவில்லை. மாசே துங்கும்
அவ்வாறு கூறவில்லை. முதன்மை முரண்பாடு தவிர்த்த பிற முரண்பாடெல்லாம்
பகையற்ற முரண்பாடாக இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. கன்னடர்கள்,
மலையாளிகள் ஆகியோர் இன அடிப்படையில் தமிழர்களுடன் பகை கொண்டு
மோதுகிறார்கள். இந்தப் பகை முரண்பாட்டையும் தமிழர்கள் எதிர்கொள்ள
வேண்டும்.”
முரண்பாடு பற்றிய மணியரசனின் மேற்படி கூற்றுஅதன் முட்டாள்தனத்தைத்தான்
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ‘முதன்மைப் பகை முரண்பாடு தவிர்த்த மற்ற
பகை முரண்பாடுகளுக்கு முகம் கொடுத்துப் போராடக் கூடாது என்று மார்க்சிய
லெனினியமும் மாசே துங்கும் கூறவில்லை’, ‘ஒரு தேசிய இனத்திற்கு ஒன்றுக்கு
மேற்பட்ட பகை முரண்பாடுகள் இருக்கலாம்’ என்பவற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்,
தரவுகள், காரணங்கள் எதையும் முன்வைக்காமல் பகை முரண்பாடுகளைக்
கண்டுபிடிக்கிறது, மணியரசன் கும்பல். ஓட்டுப் பொறுக்கிக் கும்பல்கள்,
மொழிஇனவெறிக் கும்பல்களின் சுயநலக் குறுகிய நலன்களுக்காக உருவாக்கப்படும்
மோதல்களைக் காரணமாகக் கொண்டு, இனங்களிடையே நிலவும் முரண்பாடுகளைப் பகை
முரண்பாடுகளாகக் கருதமுடியுமா? இன்று தமிழர்க்கும் மலையாளிகள்,
கன்னடர்க்கும் பகை முரண்பாடுகள்; நாளை பாலாறு பிரச்சினையை வைத்து
தமிழர்க்கும் தெலுங்கருக்கும் இடையே பகை முரண்பாடு என்று சுற்றிலும் பகை
கொள்வதுதான் இந்திய தேசியத்துடனான முதன்மைப் பகை முரண்பாட்டைத்
தீர்ப்பதற்கான வழியா? நன்று! பாராட்டுக்குரியதுதான், மணியரசனின் உலகச்
சிந்தனையின் ஊற்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக