ஞாயிறு, 15 ஜூலை, 2012

தமிழக காங்கிரசில் சிதம்பரம் அணி கரைகிறது

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது.
நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில்  மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.
அரசியலில் கவனம்: வாசன் அணிக்கு இணையாக, தமிழகம் முழுவதும் சிதம்பரத்தின் அணியை பலப்படுத்தும் வகையில், அவரது ஆதரவாளர்கள் ஒரு சிலர், மூளையாகச் செயல்பட்டனர்.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கட்சிப் பணியில் தீவிரமாக இறங்கியதும், அந்த அணிக்கு பலம் ஏற்பட்டது. தேசிய அரசியலில் சிதம்பரமும், மாநில அரசியலில் அவரது மகன் கார்த்தியும் கவனம் செலுத்தினர். இதனால், கடந்த முறை நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் தேர்தலில் இரண்டாவது இடத்திலும், மாணவர் காங்கிரஸ் தேர்தலில் முதலிடத்திலும், சிதம்பரம் அணி வாகைச் சூடியது.

ஓட்டம் ஆரம்பம்: ஆனால், தமிழக காங்கிரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு தொடரவில்லை. அவரது ஆதரவாளர்களாக மாவட்ட வாரியாக இருந்த பிரமுகர்கள் அவிழ்த்துவிட்ட மூட்டையிலிருந்து, சிதறி ஓடும் நெல்லிக்கனிகளை போல வரிசையாக ஓட்டம் பிடித்து வருகின்றனர். இதனால், சிதம்பரம் அணி கலகலத்து வருவதாக கூறுகிறது, கதர் வட்டாரம்.

கோஷ்டிக்குள் கோஷ்டி: இதுகுறித்து, காங்கிரஸ் பிரமுகர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: சிதம்பரம் அணிக்குள்ளே இரண்டு அணி செயல்படுகிறது. ஒரு அணி முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் தலைமையிலும், இன்னொரு அணி கார்த்தி சிதம்பரம் தலைமையிலும் செயல்படுகிறது. சிவகங்கை தொகுதியில், மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகள் மற்றும் டில்லியில் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதில், முன்னாள் எம்.எல்.ஏ., ஈடுபடுகிறார். கட்சி விழாக்களுக்கும், திருமண விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில், சிதம்பரம் பங்கேற்பதற்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,விடம் அனுமதி பெற வேண்டும். எனவே அவரை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் காணப்படுகிறது.

விளையாட்டில் ஆர்வம்: சிதம்பரம் அணியை வலுவாக்குவதில் ஆர்வம் காட்டிய அவரின் மகன் கார்த்தி சிதம்பரமும், சமீப காலமாக, "டல்' அடித்து வருகிறார். துவக்கத்தில், தந்தை அணியிலே தனக்கும் ஒரு அணியை உருவாக்கியதால், ஒரு ஜூனியர் எம்.பி.,க்கும், கார்த்திக்குக்கும் கருத்து வேறுபாடு உருவாகியது. இதனால், அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி, டென்னிஸ் களத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரை நம்பி இந்த கோஷ்டிக்கு வந்தவர்கள், இதனால் "அப்செட்' ஆகியுள்ளனர்.

பட்டியல் நீளுது: முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிரஞ்சீவி, முன்னாள் கவுன்சிலர் ருக்மாங்கதன், செங்கம் குமார் என, சிதம்பரம் அணியிலிருந்து வெளியேறும் பிரமுகர்கள் பட்டியல் நீண்டு வருகிறது. இதில், ருக்மாங்கதன் மட்டும் விரைவில், தி.மு.க.,வில் சேர முடிவு செய்துள்ளார். சென்னையில், சமீபத்தில் நடந்த மாணவர் காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தில், சிதம்பரம் பங்கேற்றுள்ளார். அவருக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில், வழி நெடுகிலும் விளக்குகளை அமைத்துள்ளார், வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம் ஆதரவாளர் ஒருவர். இதை விரும்பாத சிதம்பரம், அந்த பிரமுகரை கண்டித்ததோடு, அவர் கொடுத்த பூங்கொத்தை கூட வாங்க மறுத்துவிட்டராம். இது போன்ற கண்டிப்பான நடவடிக்கைகளால், அதிருப்தியடையும் ஆதரவாளர்களும், அவரை விட்டு விலகி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொகுதி மாறுகிறாரா? தமிழக காங்கிரசில் சிதம்பரம் கவனம் செலுத்தாதது குறித்து பேசிய, அவரது ஆதரவாளர் ஒருவர், ""வரும் பார்லிமென்ட் தேர்தலில், மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட சிதம்பரம் விரும்பவில்லை. அவர், புதுச்சேரியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்; அதனால் தான் அம்மாநிலம் மீது, தனிக் கவனம் செலுத்தி வருகிறார்,'' என்றார்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: