வெள்ளி, 20 ஜூலை, 2012

சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் 1000 இறைச்சி கடைகள்

சென்னை மாநகராட்சி அனுமதி பெற்ற இறைச்சி கூடங்கள் பெரம்பூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய 3 இடங்களில் உள்ளது. இங்குதான் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சி விற்பனை கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த இறைச்சி கூடங்களில் வெட்டப்படும் ஆடு மற்றும் மாடு இறைச்சியில் மாநகராட்சி “சீல்” பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு வெட்டும் இறைச்சி கூடங்கள் அனுமதியின்றி செயல்படுவதாக விலங்குகள் நலவாரிய துணை தலைவர் சின்னிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்த இறைச்சி கூடங்கள் நெரிசல் மிகுந்த குடியிருப்பு பகுதிகளில் செயல்படுகிறது. உடனுக்குடன் வெட்டி சப்ளை செய்வதால் இந்த மாதிரி இறைச்சி கூடங்களில் இறைச்சி வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இறைச்சி உடனுக்குடன் கிடைப்பதால் பிரபல ஓட்டல் நிர்வாகங்களும் இவர்களிடம் இறைச்சி வாங்குகிறது. பெரும்பாலான இறைச்சி கடைகளில் இறைச்சியை பக்குவப்படுத்தி வைப்பதற்கான குளிர்சாதன பெட்டி வசதி இல்லை. அனுமதியின்றி செயல்படும் இறைச்சி வெட்டும் இடங்களில் சுகாதார மற்ற முறையில் ஆடு, மாடுகள் வெட்டப்படுகிறது. இதனால் நோய் உருவாகும் அபாயம் உள்ளது.

மாநகராட்சி இறைச்சி கூடங்களில் மாதந்தோறும் 62 ஆயிரம் ஆடுகளும், 3,500 மாடுகளும் வெட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2000-2001-ம் ஆண்டில் 183 இறைச்சி கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 19.69 லட்சம் ஆடு, மாடுகள் கொல்லப்பட்டு சுமார் 390.40 லட்சம் கிலோ இறைச்சி பயன்படுத்தப்பட்டது. ஆனால் 2003-04-ல் அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களின் எண்ணிக்கை 119 ஆக குறைந்தது. ஆனால் இறைச்சி பயன்பாடு 466.70 லட்சம் கிலோவாக உயர்ந்தது.

2010-11-ல் 116 கடைகள் அனுமதி பெற்றது. ஆனால் இறைச்சி பயன்பாடு 635.6 லட்சம் கிலோவாக உயர்ந்தது. இதன்மூலம் அனுமதி இல்லாத இறைச்சி கூடங்கள் அதிகரித்து வருவது உறுதிப்படுத்தப்பட்டது. அனுமதி இல்லாத இறைச்சி கூடங்களில் சுகாதார மற்ற முறையில் ஆடு, மாடுகள் வெட்டப்படுவதால் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே இதை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: