வியாழன், 19 ஜூலை, 2012

பார் வாசலில் இளம்பெண்: டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் கொடுத்த அடி!

Viruvirupu
“பார் ஒன்றின் வாசலில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை அசாம் போலீஸ் நேர்மையாக மேற்கொள்ளாது” என்று குற்றம் சாட்டி, இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த தனியார் டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் ராஜினாமா செய்திருப்பது மீடியா வட்டாரங்களில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி ஆசிரியரின் ராஜினாமாவையடுத்து, இந்த விவகாரத்துக்கு வெளிநாட்டு மீடியாக்களும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளன.
கவுகாத்தி நகரில் கடந்த வாரம் பார் வாசலில் இளம்பெண் ஒருவரை 20 பேர் மானபங்கம் செய்த காட்சியை தனியார் தொலைகாட்சி சேனல் படம்பிடித்து ஒளிபரப்பியது. அந்த வீடியோவின் அடிப்படையிலேயே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.


அசாம் அரசுக்கு அடுத்த சிக்கல்
அசாம் போலீஸ் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான அமர்ஜோதி கலிதா என்பவரை இன்னமும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த விவகாரம் பெரியளவில் வெடிக்கவே அசாம் முதல்வர் தருண் கோகய், “குற்றத்தை பார்த்த உடனே முதலில் அதை தடுக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அடுத்து போலீசுக்கும் தகவல் தந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அதை வீடியோ எடுத்து டி.வி.யில் ஒளிபரப்பியது தவறு” என்று டி.வி சேனல் மீதுதான் குற்றம் என்றார்.
“குறிப்பிட்ட பெண்ணை மானபங்கப்படுத்த தூண்டி விட்டதே அந்த டி.வி.யின் நிருபர் கவுரவ் ஜோதி நியோக்” என்று ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு எழுந்ததில், நிருபர் நியோக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இப்போது, அந்த டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் அதானு புயான் ராஜினாமா செய்துள்ளார். “மாநில முதல்வர் டி.வி. சேனல்மீதே குற்றம் சாட்டியுள்ளார். அதையடுத்து, நிருபர் நியோக் 4 மணி நேர போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதையெல்லாம் பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் நேர்மையான முறையில் விசாரணை நடக்காது என்று அஞ்சுகிறேன். எனவே, டி.வி சேனலின் செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று பேட்டியும் அளித்திருக்கிறார்.
பார் வாசலில் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்டதைவிட, ஒரு மீடியாக்காரரின் நேரடிக் குற்றச்சாட்டு, மாநில அரசுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தப் போகிறது. இப்போது மனித உரிமை அமைப்புகள் பல காட்சிக்குள் வரப் போகின்றன.
அதானு புயான் ஒளிபரப்பிய வீடியோ கிளிப்பிங்கைவிட, இதுதான் அரசுக்கு விழுந்துள்ள பெரிய அடி!

கருத்துகள் இல்லை: