வியாழன், 19 ஜூலை, 2012

நேரமாகி விட்டது, கிளம்ப வேண்டியதுதான்... ராஜேஷ் கன்னா குறித்து அமிதாப் உருக்கம்!

Amitabh Bachchan On Rajesh Khanna
சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவுடனான தனது நட்பு குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் மிக உருக்கமாக எழுதியுள்ளார்.
அதிலிருந்து சில பகுதிகள்:
ராஜேஷ் கன்னாவை நான் பிலிம்பேர் பத்திரிக்கையில்தான் முதலில் பார்த்தேன். பிலிம்பேர்-மாதுரி திறமைப் போட்டியில் வென்றிருந்தார் கன்னா. நானும் கூட அதில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நிராகரிக்கப்பட்டேன்.
அவரது ஆராதனா படத்தை டெல்லி, கன்னாட் பிளேஸில் உள்ள ரிவோலி தியேட்டரில் பார்த்தேன். எனது அம்மாதான் அப்படத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றிருந்தார். தியேட்டரில் பெரும் கூட்டம், ராஜேஷ் கன்னாவுக்குக் கூடிய அந்தக் கூட்டம், குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் எப்போதும் மறக்க முடியாதது.

பின்னர் நான் கொல்கத்தாவுக்குப் போய் விட்டேன். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க மும்பை வந்தேன். ஆனால் ராஜேஷ் கன்னாவின் முகத்தையும், அவருக்கு இருந்த ரசிகர் கூட்டத்தையும் பார்த்த எனக்கு, எங்கே எனக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்றுதான் தோன்றியது.
அப்போதுதான் எனக்கு சாத் இந்துஸ்தானி பட வாய்ப்பு கிடைத்தது. உடனே ஓடினேன். எனக்கும் ரோல் கிடைத்தது. படப்பிடிப்புக்குப் போனேன். அப்போதுதான் படப்பிடிப்பின்போது ராஜேஷ் கன்னாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கஷ்டப்பட்டுத்தான் அந்த வாய்ப்பை பிடித்தேன். என்னுடன் கை குலுக்கினார் கன்னா. அதை என்னால் மறக்க முடியாது.
அதன் பின்னர் ஆனந்த் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு பெரிய அற்புதம். கடவுளின் ஆசிர்வாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ராஜேஷன் கன்னாவுடன் இணைந்து நடிப்பது என்பதே ஒரு பெரிய ஆச்சரியம்தானே. அது எனக்கு நடந்தது.
மிகவும் அமைதியாக, அடக்கமாக, எளிமையாக இருந்தார் ராஜேஷ் கன்னா. அவரைப் பார்க்க எப்போதும் ரசிகர் கூட்டம் அலைமோதியபடி இருக்கும். யாருக்குமே அப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்தது இல்லை. ஸ்பெயினிலிருந்து கூட அவரது ரசிகர்கள் வந்ததைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அப்போதெல்லாம் ஒரு நடிகருக்கு இப்படி கூட்டம் கூடுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று.
அவருடைய ஆசிர்வாத் வீட்டுக்கு நான் ஒருமுறைதான் போயுள்ளேன். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற போயிருந்தேன். ஆனால் நான் ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டேன் என்பது வீட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது. இருந்தாலும் எனது தர்மசங்கடத்தைக் கண்டு கேலி செய்யாமல், பெருத்த சிரிப்புடன் வரவேற்று என்னை உபசரித்தார் ராஜேஷ். பின்னர் சக்தி சமந்தாவின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு டின்னரில் கலந்து கொள்ளச் செய்தார்.
பின்னர் அடுத்த நாள் மீண்டும் சென்றேன், வாழ்த்தினேன். அன்றும் என்னை சிறப்பாக உபசரித்தார் ராஜேஷ்.
ஆனந்த் படப்பிடிப்பின்போது எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. அது இப்போது நினைத்தாலும் கண்ணீரை வரவழைப்பதாகும்.
மோகன் ஸ்டுடியோஸில் படப்பிடிப்பு. படத்தில் அதுதான் கடைசி சீன். ராஜேஷ் கன்னா அக்காட்சியில் இறப்பது போலவும், நான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போலவும் காட்சி. ஆனால் எனக்கு அப்போது சரியாக பேச வரவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இதனால் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு மஹமூ்தின் உதவியை நாடினேன். அவர் சொன்னார்.. ராஜேஷ் கன்னா நிஜமாகவே இறந்து விட்டதாக நினைத்துக் கொள், தானாகவே எல்லாம் வரும் என்றார்.
அதன் பிறகு நான் நடித்தேன். நான்தானா என்று எனக்கே ஆச்சரியம் அளித்த காட்சி அது.
காலம் மாறி விட்டது, ஆட்கள் மாறி விட்டனர், சூழல்கள் மாறி விட்டன, ராஜேஷ் கன்னா மட்டும் அதே அமைதியுடன், அதே கம்பீரத்துடன், சிங்கம் போல இருந்தார்.
இறுதி மரியாதையை செலுத்த ராஜேஷ் கன்னா வீட்டில் இருந்தபோது, எனக்கு நெருக்கமான ஒருவர் வந்து என்னிடம், நேரமாகி விட்டது, கிளம்பலாம் என்றார்.
உண்மைதான்...!

கருத்துகள் இல்லை: