வெள்ளி, 20 ஏப்ரல், 2012

கல்வி : கொலை, கொள்ளை மற்றும் அபத்தங்கள்



ஒரு சென்னை மாணவர் தமது ஆசிரியரை கொலை செய்தபோது எழுத ஆரம்பித்த கட்டுரை இது. வேலை அழுத்தத்தில் நின்றுபோன அதனை அதன் பிறகு நடந்த மற்றொரு ஆசிரியர் கொலை தொடர வைத்திருக்கிறது.
தஞ்சாவூரில் உள்ள டி.கே.சுப்பையா நாயிடு ஆரம்பப்பள்ளியில் நான் படித்தபோது நடந்த சம்பவம் இது. சீனிவாசபுரம் அகழிக்கு அருகே இருக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவரை ஒரு சிறுவன் கல்லால் அடித்துவிட்டான். சற்றே புடைத்த நெற்றியுடன் அவர் அருகே இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்து அது குறித்து குற்றம்சாட்டினார். அன்றைய காலைநேர அணிவகுப்புக்கு அவரை கூட்டிவந்து கல்லால் அடித்த மாணவனை அடையாளம் காட்டச்சொன்னார்கள். டிராயர் போட்டிருந்த பையன் என்பதைத் தவிர அவரால் வேறு அடையாளம் சொல்ல முடியவில்லை, அந்த கூட்டத்தில் தேடவும் அவர் முன்வரவில்லை. அதன்பிறகு எங்கள் பள்ளியின் ஐந்தாம்வகுப்பு ஆசிரியர் ஒருவர். அவரைப் போல (மன வளர்ச்சி குன்றியோரிடம்) இருப்பவர்களிடம் சண்டைக்கு போக்க்கூடாது என அறிவுரை சொன்னார். வேறொரு ஆசிரியர் அவரை பள்ளி வாயிற்கதவு வரை கொண்டுவிட்டு வந்தார்.

நானூற்றுக்கு குறையாத மாணவர்கள், கிட்டத்தட்ட இருபது ஆசிரியர்கள் கொண்ட ஒரு பள்ளி, மனவளர்ச்சி குன்றிய ஒரு இளைஞரின் குற்றச்சாட்டை செவிமடுத்து அதற்கு பத்து நிமிடத்தை செலவிட்டது. விவரம் தெரிந்த பிறகு என் பள்ளி குறித்து நான் பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்வு இது. சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெறும் மாணவனாகவே அந்த பள்ளியிலிருந்து நான் வெளியே வந்தேன் (இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதற்கும் லாயக்கற்றவனாக வெளியே வந்தேன் என்று சொல்லலாம்). ஆனால் சக மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கும் அடிப்படை மனிதப்பண்பை நான் கற்றுக்கொண்டதற்குப் பின்னால் என் பள்ளியும் இருக்கிறது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய பள்ளிகளின் சூழலை ஒப்பிட்டு பார்க்கையில் அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. தலையைச் சுற்றி கையால் காதைத் தொடும் ஒற்றை தேர்வு முறை மட்டும் இருந்த நிலை மாறி இப்போது பள்ளிகளின் அட்மிஷன் என்பது பெற்றோரின் வருமானம், படிப்பு மற்றும் அவர்களது முந்திச்செல்லும் திறமை (ஆறுமாதம் முன்பே இரவெல்லாம் கண்விழித்து விண்ணப்பம் வாங்குவது போன்ற முயற்சிகள்) என ஏராளமான விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு காரை சர்வீஸ் செய்யும் பணியைப்போல கற்பித்தலையும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து அனுப்பும் சேவையாக மாற்றியிருக்கின்றன நம் சமகாலப் பள்ளிகள்.
ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத்தரவேண்டிய பள்ளிகளே அரசு விதிகளை சர்வசாதாரணமாக புறந்தள்ளுகின்றன. சமூகத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையை காலி செய்ததில் பெரும் பங்கு தனியார் பள்ளிகளுக்கு உண்டு. அறுநூறு ரூபாய்க்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எனும் அரிய உண்மையை அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். வீட்டில் சும்மாயிருப்பதற்கு பதிலாக ஏதேனும் நர்சரி பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கலாம் எனும் நிலை வந்த பிறகுதான் ஆசிரியர் பணியின் மரியாதை முற்றாக குறைந்தது.
இந்த வருடத்து மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே அடுத்த ஆண்டுக்கான வருவாய்க்கான ஆதாரம் என்பதால் தனியார் பள்ளிகள் எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் பெற வைக்க துடிக்கின்றன. சில சுமாரான தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 480 வாங்கிய மாணவர்களை பதினொன்றாம் வகுப்பில் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றன. அவர்கள் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்வாங்கி பள்ளி ஊர் முக்கில் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்க உதவுவார்கள்.  தனியார் பள்ளிகள் புண்ணியத்தில். இப்போது மதிப்பெண் என்பது ஒரு சரக்காக உருமாற்றம் பெற்றிருக்கிறது. ஒரு இரும்பு பட்டறைக்கும் பள்ளிக்கும் ஒரேவிதமான வியாபார நியாயங்கள் வந்த காலகட்டம்தான் நமது சமூகத்தின் அபாயகரமான அத்தியாயத்தின் துவக்கம் என கருதுகிறேன்.
தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தரப்பு மிகவும் பரிதாபகரமானது. எப்படியாவது எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் வாங்கவைத்தால் போதும் எனும் ஒற்றை இலக்கு மட்டுமே ஒரு ஆசிரியருக்கு தரப்படுகிறது. இன்றைய நிலையில் ஆசிரியர் மாணவர் உறவென்பது ஒரு கஸ்டமர் கேர் ஊழியருக்கும் நுகர்வோருக்குமான உறவைப்போல ஆகியிருக்கிறது.. மிகக் குறைவான ஊதியம் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆகவே உள்ளூரை விட்டு போக விரும்பாதவர்கள், வேறு வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர் பணியை தெரிவுசெய்கிறார்கள். இவர்கள் வசம்தான் அனேக நடுத்தர வர்க குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நான் ஒரு வருடம் எங்கள் கிராமத்து பள்ளியில் படித்தபோது உடன் படித்தவர்கள் பலரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள். அறுவடை மற்றும் நடவு காலங்களில் பதினைந்து இருபது நாட்கள் மாணவர்கள் விடுப்பு எடுப்பது சர்வ சாதாரணம். மூன்று ஆண்டுகள் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லா வகுப்பிலும் உண்டு (அடுத்து ஆசிரியர் சொல்லப்போகும் ஜோக்கைக்கூட சரியாக கணிக்கும் திறமைசாலிகள் அவர்கள்). அங்கே பல பெற்றோருக்கு தமது பிள்ளைகளை கலெக்டராக்கும் டாக்டராக்கும் கனவெல்லாம் இல்லை. மகனை மகனாக பார்க்கும் குணம் மட்டுமே உண்டு. நாலு எழுத்து படிச்சா நல்லதுதானே எனும் எண்ணத்தினால் மட்டுமே அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள்.
இப்போது அதே கிராமத்தின் பல குடும்பங்கள் மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன, முதன்மை காரணமாக குழந்தைகள் படிப்புதான் சொல்லப்படுகிறது. எனது சக ஊழியர்கள் பலர் தங்கள் வருமானத்தில் பெருந்தொகையை தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுகிறார்கள். எங்கள் அலுவலகத்தில் இரண்டு உயரதிகாரிகள் தங்கள் மகள்களது பொதுத்தேர்வுக்காக ஒரு மாத மற்றும் இரண்டு மாத விடுப்பிலிருக்கிறார்கள். கசப்பானதொரு உண்மை என்னவென்றால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்தான் தங்கள் எதிர்காலம் என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் படிப்புதான் தமது எதிர்காலம் என முடிவு செய்து செயல்படுகிறார்கள். (ஒன்றுபோல தோன்றினாலும் இது முற்றிலும் வேறானது).
இப்படி மூன்று முக்கிய குழுவும் தங்கள் ஆசை, லட்சியம், கோபம் என சகலத்தையும் இறக்கிவைக்கும் தளமாக குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் மாணவர்களது வாழ்வு பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது. அவர்கள் எதிகொள்ளும் பிரச்னைகள் கண்டுகொள்ள நாதியற்று இருக்கின்றன. ஆனால் இந்த சூழலால் பாதிக்கப்படும் மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடும்போதோ அல்லது அதிகப்பிரசங்கித்தனமாக ஏதேனும் செய்யும்போதோ நாமெல்லோரும் விழித்துக்கொள்கிறோம்.
சென்னையில் ஆசிரியரை கொலை செய்த மாணவர் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கொலைகாரனை விருந்தாளி மாதிரி உபசரிக்கிறார்களே என ஆசிரியர் சமூகம் அங்கலாய்க்கிறது, எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என அரசை வலியுறுத்துகிறது. ஒரு குற்றவாளிக்கும் குற்றமிழைத்த சிறுவனுக்குமான வேறுபாடு ஆசிரியர்களுக்கே புரியாத சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு கொலை என்பதன் நிஜமான அர்த்தம் தெரியாது. அது ஒரு நபரை காணாமல் போகவைக்கும் வழியாக மட்டுமே தெரியும். நாம் இவ்விடயத்தில் யோசிக்க வேண்டியது ஒரு மாணவன் ஏன் ஆசிரியை காணாமல் போக்ச்செய்ய விரும்பினான் என்பதையும் கொல்வதை கோபத்தின் வெளிப்பாடாக்கும் கற்றலையும்தான்.
ஒருவேளை அந்த மாணவன் வன்முறையில் ஈடுபடும் இயல்புடையவனாக இருந்திருப்பானேயானால் அதை கண்டறிந்து எச்சரித்திருக்க வேண்டியது பள்ளியின் பொறுப்பு. அப்படியெதுவும் நடந்திருக்கவில்லை. அவன் ஒரு சாதாரண மாணவன் எனில் அவன் கையில் கத்தியை கொடுத்ததற்கான பொறுப்பு பள்ளிக்கும் பெற்றோருக்கும்தான் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராயில்லை.
இன்றைய மாணவர்கள் தங்கள் வயது மற்றும் சக்திக்கு மீறி பணியாற்ற வைக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அது நல்லதற்கா கெட்டதற்கா என்பதில்தான் கருத்து முரண்பாடு வரும். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் தங்கள் மதிப்பெண்னுக்காவே உழைக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களது வயதுக்கான விருப்பங்கள் பெரும்பாலும் புறந்தள்ளப்படுகின்றன. குழந்தைகள் வாழ்வே அவர்கள் வாங்கும் மதிப்பெண்னில்தான் இருக்கிறது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனை செய்ய முடியாதபோதோ அல்லது செய்ய விரும்பாதபோதோ அவர்கள் கோபம் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அல்லது தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக கருதிக்கொள்கிறார்கள். இது அனேக சந்தர்பங்களில் தற்கொலையில் முடிகிறது. இரண்டொரு சந்தர்பங்களில் கத்தி எதிர்புறமாகா திரும்பியிருக்கிறது.
இதற்கு நேரெதிரான சம்பவம் ஒரு மாணவனும் ஆசிரியரும் ஊரைவிட்டு ஓடியது. கோபப்படாமல் ஆராய்ந்தால் இதிலும் குற்றவாளிகளாக நாம்தான் இருப்போம். பெருநகரங்களில் வளரும் சிறார்கள் மிகக் குறைவான அளவு சமூக உறவுகளை கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட உறவுகள் மற்றும் நட்பினை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் அன்பு என்பது பெற்றோரிடம் மட்டுமே கிடைப்பதாக இருக்கிறது. நல்லது கெட்டது மற்றும் நியாயம் ஆகியவை பெரும்பாலும் சுற்றத்தினை பார்ப்பதன் வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அந்த கற்றல் இல்லாதபோது நியாயத்தை தேவைகள் தீர்மானிக்கத் துவங்குகின்றன.
இருபது வயது மூத்தவரை காதலிக்காதே எனும் பாடத்தை பெற்றோரால் சொல்லித்தர முடியாது. ஆனால் ஒருவனது சுற்றம் பரந்ததாக இருக்கையில் அந்த பாடம் அவனுக்கு தன்னியல்பாக கிடைக்கிறது. வெவ்வேறு துறைகளை தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களது சிற்றின்பத் தேடல்களுக்கான தேவையும் அவகாசமும் குறைகிறது. அந்த கதவு அடைக்கப்படுகையில் மனிதர்களின் இயல்பான உந்துதல்களில் ஒன்றான காமம் அவ்விடத்தை நிரப்புகிறது. தவறுகளை நாம் கற்றுத்தருவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கான சினிமாவும் டி.வியும் எதை சொல்லித்தருகிறது? டிசைன் டிசைனாக காதலிப்பதையும், சங்கை அறுப்பதையும்தானே?
குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய அறிவுடனும் ஆற்றலுடனும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் பெரிய மனுசத்தனமாக டிவியில் நடந்துகொண்டால் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீரோடு அதை ரசிக்கிறார்கள். அதே டிவியில், பெரியவர்கள் பைசாவுக்கு பிரயோசனமில்லாத விசயத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டு அழுது சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள். பிறகு ஒரு சிறுவன் பெரிய ஆளைப்போலவும் மூத்த ஆசிரியர் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்ளும்போதுமட்டும் குய்யோ முய்யோவென கத்துவது என்ன நியாயம்?
ஒரு சமூகத்தில் குழந்தைகள் அதிகமாக தவறு செய்கிறார்கள் எனில் அங்கு அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் குற்றவாளிகள் என பொருள். எனக்கு சொந்தக்காரர்களை பிடிக்காது, காரணம் அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஒரு பதின் வயது மாணவன் சொல்லக் கேட்டபோது எனக்கு அவனது பெற்றோர்கள் மீதுதான் ஆத்திரம் வந்தது. எதையும் தராத சொந்தக்காரன் கெட்டவன் என வேறு யார் அவனுக்கு கற்றுத்தந்திருக்க முடியும்? லஞ்சம் வாங்கி சுகபோகமாக இருக்கும் அப்பா இருக்கையில் மகனுக்கு எந்த நீதிபோதனை வகுப்பும் நேர்மையை கற்றுத்தர முடியாது. நம் குழந்தைகளுக்கு நாம் நடத்தும் மிகப்பெரிய பாடம் நம் வாழ்க்கைதான். அது மோசமானதாக இருக்கையில் மற்ற எந்த சிறப்பு பயிற்சிகளும் நீண்டகால அடிப்படையில் பலன் தராது.
உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து என்னை பெரிய பள்ளியில் படிக்க வை என எந்தக் குழந்தையும் கேட்பதில்லை. குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன் எனும் வாக்கியத்தைப்போல ஒரு அபத்தமான வாசகம் ஒன்றிருக்க முடியாது. உங்களை எவன் குழந்தைகளுக்காவே வாழுங்கள் என கட்டாயப்படுத்தியது? அந்த முட்டாள்தனத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்காக உங்கள் குழந்தைகள் உங்களுக்காக தியாகம் செய்யவேண்டுமா? ஒழுங்காக நமக்காக வாழலாம், குழந்தைப் பருவ வாழ்வை அவர்கள் வாழட்டும் என விட்டுவிடலாம். இதுதான் இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உருப்படியான சகாயம்.
ஒரு மாணவனை அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து மதிப்பிடுவதுதான் அவர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய வன்முறை. பள்ளி என்பது ஒருவன் தனக்கு எந்த துறை சரியாக இருக்கும் என முடிவு செய்வதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கும் இடம் அவ்வளவுதான். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளாமல் குழந்தைகள் நாம் மூர்கமாக கையாண்டதன் விளைவுதான் ஆங்காங்கே நடக்கும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள். நல்வாய்ப்பாக மாணவர்களால் நடக்கும் மோசமான சம்பவங்களின் எண்ணிக்கை அவர்கள் மீதான வன்முறையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. ஆனால் பெற்றோர் தரப்பு தங்களை இனியும் மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்த ஆறுதலுக்கும் வழியில்லாது போய்விடும்.
கொத்தனார் சம்பளமே இப்போ அறுநூறு ரூபாயாயிடுச்சு, வீடு கட்டுறதெல்லாம் இனி சாமானியமில்லைங்க.. என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர். 25 டிகிரி வெப்பநிலையில் வேலைசெய்து வாரம் தவறாது சொந்த ஊர் செல்ல வாய்ப்பிருக்கும் அவருடைய வேலைக்கு என்பதாயிரம் கிடைக்கையில் உடலை வருத்தி வேலை செய்யும் கொத்தனாருக்கு கிடைக்கும் (அதிகபட்சம்)  பதினெட்டாயிரம் அநியாயமாகப்படுவதை வெறும் சுயநலம் என வரையறுக்க முடியாது. மனிதர்களிடையே பாரபட்சம் பார்க்கும் இழிவான பழக்கத்தின் நீட்சி இது. இன்றைய கல்வித்துறையை பீடித்திருக்கும் தரித்திரத்துக்கான கதவை இந்த பழக்கம்தான் திறந்துவைத்தது.
தனியார் பள்ளிகள் முளைத்தபோது அவர்கள் சிறப்பான கல்வியை தருவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருந்திருக்கவில்லை. மற்றவனைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள மட்டுமே இந்த பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டார்கள். பிறகு இந்த பழக்கம் உன்னைவிட நானொன்னும் குறைந்தவனில்லை எனக் காட்ட பயன்பட்டது. இதுதான் வாய்ப்பென்று தனியார் பள்ளிகள் ஊரெங்கும் முளைத்தன, வாய்ப்பை தவறவிடாது அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டது. அரசுப்பள்ளிகள் வக்கற்றவர்களுக்கு மட்டுமே என்றாகிப்போன இன்றைய சூழலை உருவாக்கியதில் நடுத்தர வர்கத்தின் வெற்று கௌரவம், முதலாளிகளின் லாபவெறி மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகிய மூன்றின் பங்கும் சமமாக இருக்கிறது.  இதில் இழக்கும் தரப்பு என்று என்று பார்த்தால் அது பெற்றோர் மட்டுமே.
ஒரு அடிமுட்டாள்தனமான நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தனியார்பள்ளிகள் நம் வருமானத்தை சுரண்டிக் கொழுக்கின்றன. நில அபகரிப்பு, ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எனும் வரிசையில் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் செய்யும் பிரதான தொழிலாக கல்வி இருக்கிறது. பின்னாளில் பிள்ளைகள் நமக்கு நிறைய சம்பாதித்து கொடுக்கவேண்டும் எனும் ஆசையை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். கல்வி தொழிலாக நீடிக்கும்வரை குழந்தைகள் எந்திரங்களாகவே நடத்தப்படுவார்கள். எந்திரமாக நடத்தப்படும் குழந்தைகளிடம் குற்ற நடத்தையும் பிறழ்நடத்தைகளும் உருவாகியே தீரும்.
பெருகிவரும் சிறார் குற்றங்களுக்கு கல்வி வணிகமயமானது மட்டும் காரணமல்ல. ஆனால் சிறார் குற்றங்களை தடுப்பதற்கு செய்யவேண்டிய முதல் நடவடிக்கை கல்வியை வணிகர்களிடமிருந்து பறிப்பதுதான். நம் அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துக்கு இது மட்டும் போதாது என்பது நிஜம்தான். ஆயினும் எல்லா நீண்ட பயணங்களும் முதல் அடியிலிருந்தே தொடங்குகின்றன.
0
வில்லவன் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: