வியாழன், 19 ஏப்ரல், 2012

சென்னையில் ஒரு நிமிடத்திற்கு 3 கார்கள் தயாரிப்பு

ஜெர்மன் நாட்டின் டெய்ம்லர்-பென்ஸ் நிறுவனம் கார்கள் மற்றும் கனரக வாகனங்களை தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ரூ.4,400 கோடி செலவில் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் வர்த்தக வாகனங்கள் தயார் செய்யும் தொழிற்சாலையை 400 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளது.
இந்த தொழிற்சாலை, பாரத் பென்ஸ் டிரக்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை தயாரிக்க உள்ளது.
உலகில் டெய்ம்லர் டிரக் உற்பத்தி தொழிற்சாலைகள் 27 உள்ளன. அவற்றில் ஜெர்மனியில் உள்ள நிறுவனங்களை தவிர்த்து ஒரகடத்தில் அமைக்கப்பட்டிருப்பது தான் அதன் 3வது பெரிய தொழிற்சாலை ஆகும்.

இந்த தொழிற்சாலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் முந்தைய திமுக  அரசு தொழிற்சாலைக்கு தேவையான ஆதரவை தர உள்ளதால் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய இருந்ததை ரூ.4,400 கோடியாக உயர்த்தி உள்ளனர்.
உலக அளவில் உள்ள சிறந்த 500 நிறுவனங்களில் இந்த நிறுவனம் 24வது இடத்தில் உள்ளது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் வாகன சந்தையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மோட்டார் வாகன தொழில்துறையில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரேஸில் ஆகிய 5 நாடுகளுக்கு பிறகு இந்தியா 6வது உள்ளது.
தொழில் உற்பத்தி அதிகரிப்பு, நடுத்தர மக்களின் வாங்குதிறன் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக 2020ம் ஆண்டில் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனையில் இந்தியா முதல் 5 இடங்களில் இடம் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இந்தியாவிலேயே சென்னை நகரம் மிகப்பெரிய ஆட்டோமொபைல் மற்றும் அது சார்ந்த உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் கேந்திரமாக திகழ்கிறது. உலக அளவில் முதல் 10 ஆட்டோமொபைல் நகரகளின் பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது.
சென்னை நகரம் இன்றைய நிலையில் ஆண்டுக்கு 13 லட்சம் கார்களும், 3 லட்சம் வர்த்தக வாகனங்களையும் உற்பத்தி செய்யக்கூடிய திறனை பெற்றுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 3 கார்களும், 75 வினாடிகளில் ஒரு வர்த்தக வாகனமும் இங்கு தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த வாகனங்களில் 35 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் தொழிற்பயிற்சி பெற்ற பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் நல்ல துறைமுக வசதியும் உள்கட்டமைப்பு வசதியும் தொழில் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலையும் உள்ளது.

கருத்துகள் இல்லை: