ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

1945-ல் புதைக்கப்பட்ட 20 புத்தம்புதிய விமானங்கள்! கிடைத்தது ஜாக்பாட்

Viruvirupu

Naypyidaw, Myanmar: Twenty brand-new RAF Spitfires could soon reach for the sky following a deal reached with Burma yesterday (Friday). Experts believe they have discovered the locations of around 20 of the Second World War fighters buried at airfields around the country.Historians say the Spitfires were shipped out to Burma in the summer of 1945, two weeks before atomic bombs were dropped on Japan which brought the war to a sudden end. The British campaign to push the Japanese out of Burma was the longest and bloodiest of the war, beginning after the Japanese invaded in late 1941.

65 ஆண்டுகளுக்குமுன் தரைக்கு அடியே புதைக்கப்பட்ட 20 புத்தம் புதிய விமானங்கள் பிரிட்டனுக்கு மீண்டும் கிடைக்கப் போகின்றன. இந்த 20 விமானங்களும் தமது கைகளுக்கு வரப்போவதில்லை என்றே பிரிட்டன் இவ்வளவு காலமும் நினைத்திருந்தது.
காரணம், இவை புதைக்கப்பட்ட இடம் பர்மா… தற்போதைய மயன்மார்.
இந்த வாரம் தமது ஆசியப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரொன், நேற்று (வெள்ளிக்கிழமை) மயன்மார் சென்றடைந்தார். அவரது விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று, வித்தியாசமானது. தமது பழைய பொருட்களை மீண்டும் உரிமைகோருவது.

“2-ம் உலக யுத்தம் நடைபெற்ற காலத்தில் பிரிட்டிஷ் ராயல் ஏர்போர்ஸ் ரகசியமான இடங்களில் புதைத்து வைத்த விமானங்களை பிரிட்டன் எடுத்துக் கொள்ளலாம்” என்ற ஒப்பந்தம் கையொப்பம் இடப்படும் நேரத்தில் மியன்மார் அதிகாரிகள், “இந்த நாட்டை ஆளும் அரசுக்கே நீங்கள் குறிப்பிடும் விமானங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தெரியாது. உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்கள்.
“எங்களுக்கு தெரியும் என்றுதான் நினைக்கிறோம்” என்றார்களாம் பிரிட்டிஷ் அதிகாரிகள்.
இந்த விமானங்கள் புதைக்கப்பட்ட விவகாரம் என்ன? இதோ அந்த பிளாஷ்-பேக்:
2-ம் உலக யுத்தத்தின்போது 1941-ன் இறுதியில் ஜப்பானியப் படைகள் பர்மாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காலத்தில், எதிர்த்துப் போரிட்டது பிரிட்டிஷ் ராணுவம். அப்போது பிரிட்டிஷ் படைகளின் நகர்வுகளுக்கு உறுதுணையாக இருந்தவை, RAF (Royal Air Force) வைத்திருந்த போர் விமானங்கள்தான்.
ஸ்பிட்ஃபயர்ஸ் (Spitfires) ரக விமானங்கள்தான் அப்போது மிகப் பிரபல்யம். ஜப்பானியப் படைகளை விரட்டியடிப்பதற்கு மேலதிகமாக விமானங்கள் தேவைப்பட்டன. இந்த விபரம் பிரிட்டனுக்கு அறிவிக்கப்பட்டது.
1945-ம் ஆண்டு கோடை காலத்தில் ஸ்பிட்ஃபயர்ஸ் (மார்க்-2) விமானங்கள் லண்டனில் இருந்து பர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை பர்மாவில் வந்திறங்கியபோது, அங்கு பிரிட்டிஷ் படைகளின் நிலை சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. எந்த நேரமும் தோல்வியைத் தழுவலாம் என்ற நிலை.
பிரிட்டிஷ் படைகள் தோல்வியடைந்தால், இந்த விமானங்கள் அனைத்தும் ஜப்பானியர்களின் கைகளில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து இருந்தது. அப்போது எர்ல் மவுண்ட்பர்டன் பிரபு ரகசிய உத்தரவு ஒன்றை பர்மாவில் இருந்த பிரிட்டிஷ் விமானப்படை தளபதிக்கு அனுப்பினார்.
“புதிதாக வந்திறங்கிய விமானங்கள் அனைத்தையும், மரப் பெட்டிகளில் போட்டு புதைத்து விடுங்கள். புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் வைத்திருங்கள். யுத்தத்தின் எமது கை மேலோங்கும்போது அவற்றை எடுத்துக் கொள்ளலாம்” என்பதே அந்த உத்தரவு. இதையடுத்து, விமானங்களின் விங்குகள் கழட்டப்பட்டு வேறாகவும், என்ஜின்கள் வேறாகவும், மிகுதி உடல் வேறாகவும் பெட்டிகளில் அடைக்கப்பட்டன.
இந்தப் பெட்டிகள் அனைத்தும் தரையில் இருந்து 4 முதல் 6 அடி ஆழத்துக்கு கீழே இருக்குமாறு புதைக்கப்பட்டன.
விமானங்கள் புதைக்கப்பட்டு 2 வாரங்களில் அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டை வீச, யுத்தம் சடுதியாக முடிவுக்கு வந்தது. ஆனால், அந்த 2 வாரங்களுக்குள் பர்மாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் செமையாக அடிவாங்கி விட்டது. ரங்கூனில் இருந்த அவர்களது பிரமாக விமானத்தளம் முழுமையாக அழிக்கப்பட்டது.
இவர்கள் விமானங்களை புதைத்து வைத்த இடங்கள் எங்கே உள்ளன என்ற வரைபடங்களும் அதில் சிக்கி அழிந்து போயின.
புதைக்கப்பட்ட விமானங்கள் புத்தம் புதிய விமானங்கள். தொழிற்சாலையில் இருந்து அப்படியே கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டவை. அப்படியான 20 விமானங்களை தரைக்கு அடியே விட்டுவிட்டு, பிரிட்டிஷ் ராணுவம் நாடு திரும்பிவிட்டது.
பல ஆண்டுகளின் பின், பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழக (University of Leeds) ஆராய்ச்சியாளர்கள் இந்த விமானங்கள் எந்த இடத்தில் இருக்கலாம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினர். விமானங்களை புதைத்த ஆட்களில் உயிருடன் இருந்த ஒருவரை தேடிப் பிடித்து சில விபரங்களைப் பெற்றனர். அதன்பின் மீதி ஆராய்ச்சியை, விமானங்கள் புதைக்கப்பட்ட பர்மாவில் தொடர வேண்டும்.
இதற்கிடையே பர்மாவில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, நாட்டின் பெயரையே மியன்மார் என்று மாற்றிக் கொண்டனர். அங்கு அமைந்த அரசு, மேற்கு நாடுகளுடன் மோதலை வளர்த்துக் கொண்டது. இவர்கள் ஆராய்ச்சி செய்து விமானங்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டினால், மியன்மார் அரசு, விமானங்களை தாமே எடுத்துக் கொள்ளும் என்று புரிந்தது.
இதனால், ஆராய்ச்சி முடிவுகளை ரகசியமாக வைத்துக் கொண்டது பிரிட்டன்.
பிரிட்டிஷ் உளவுத்துறையின் ஆட்கள் சிலர் மியன்மாருக்கு உல்லாசப் பயணிகள் போல சென்று, ground penetrating radar technology மூலம், விமானங்கள் புதைக்கப்பட்ட இடத்தை ஓரளவுக்கு கண்டு பிடித்து விட்டார்கள்.
ஆனால், மியன்மார் அரசின் அனுமதி இல்லாமல் விமானங்களை வெளியே கொண்டுவர முடியாது என்பதால், பிரிட்டன் அடக்கி வாசித்தது. நேற்று பிரிட்டிஷ் பிரதமர் செய்துகொண்ட ஒப்பந்தம்தான், முதல் தடவையாக பிரிட்டனை அந்த நிலப் பகுதிக்கு அதிகாரபூர்வமாக செல்ல அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்ட 1940களில், ஒரு விமானத்தின் விலை வெறும் 12,600 பவுன்ட்ஸ் மட்டுமே. இந்த விமானங்கள் தரைக்கு அடியேயிருந்து எடுக்கப்பட்டால், இன்று ஒவ்வொரு விமானமும் குறைந்தபட்சம் 1 மில்லியன் பவுன்ட்ஸ் விலைக்கு விற்கப்படலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: