செவ்வாய், 17 ஏப்ரல், 2012

டி.வி. நடன நடிகை உயிருக்கு போராட்டம்: சித்ரவதை செய்த கணவர் கைது

வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (27). நடன நடிகையான இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பரிசும் பெற்றார். உமாமகேஸ்வரிக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் பெயர் அருண் (32). கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கோயம்பேடு ஜெயின் நகரில் வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த உமாமகேஸ்வரி பிரசவத்துக்காக வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து மனைவியை மீண்டும் வீட்டுக்கு குடும்பம் நடத்த வருமாறு அருண் அழைத்தார்.
இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது. 5 மாதம் கழித்து வருகிறேன் என்றார். இதனால் ஏமாற்றம் அடைந்த அருண் தனக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்து வீட்டில் இருப்பதாக உமாமகேஸ்வரிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உமா மகேஸ்வரி கணவரை பார்க்க கோயம்பேட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற பின்புதான் அவருக்கு விபத்து இல்லை, தன்னை ஏமாற்ற நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதனால் கணவன்  மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அருண் மனைவியை அடித்து உதைத்தார். இதில் மனம் உடைந்த உமாமகேஸ்வரி வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண் அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவியுடன் மனைவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
டாக்டர்களின் சிகிச்சைக்குப்பின் உமாமகேஸ்வரி உயிர் பிழைத்தார். கழுத்து எழும்பில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சம்பத் விசாரணை நடத்தினார். அதில் அருண் மனைவியிடம் 40 பவுன் நகை மற்றும் வீட்டை எழுதித் தருமாறு கேட்டு வற்புறுத்தி வந்தார் என்றம், நடத்தையில் சந்தேகப்பட்டார் என்றும், இதனால் நகை, வீடு தராவிட்டால் நடத்தை பற்றி வெளியில் சொல்வேன் என்று மிரட்டி தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக உமாமகேஸ்வரி குடும்பம் நடத்த வர மறுத்துவிட்டார். இந்த புகாரின் பேரில் கணவர் அருண் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை: