செவ்வாய், 17 ஏப்ரல், 2012

மதுரை அருகே மெக்சிகோ நாட்டு பெண் கொலை: சூட்கேசில் எரிந்த நிலையில் உடல்-கணவர் கைது


Ceule Denise Acosta
மதுரை அருகே மெக்சிகோ நாட்டு பெண்ணை கொலை செய்து எரித்து சூட்கேசில் வைத்து கண்மாயில் வீசிய அதே நாட்டைச் சேர்ந்த அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் மான்ரிக் (40) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பல்கலைக் கழகத்தில் கணிதத்துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார். இவரது 2வது மனைவி டென்சி அகோஸ்டா (35) கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கலா மண்டலம் பல்கலைக் கழகத்தில் நடனம் கற்று வருகிறார்.
இவர்களது மகள் அடிலா (5) தந்தையுடன் தங்கி இருந்து பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 4ம் தேதி டென்சி தனது கணவர், மகளை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். கணவர், குழந்தையுடன் தங்கி இருந்தார். 9ம் தேதி திருச்சூர் புறப்பட்டார். ஆனால், அவர் திருச்சூர் சென்று சேரவில்லை. திடீரென மாயமாகிவிட்டார்.
இதையடுத்து கிருஷ்ணன் கோவில் போலீசில் மார்ட்டின் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து டினேசியாவை தேடி வந்தனர். இந் நிலையில் 11ம் தேதி திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள கண்மாயில் சூட்கேசுக்குள் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஒரு கையும் வெட்டப்பட்டிருந்தது.

அது டென்சியின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரை கணவர் மார்ட்டினே அடித்துக் கொலை செய்து உடலை சூட்கேசுக்குள் அடைத்ததும், அதில் இடம் போதாதால் கையை தனியே வெட்டி அதில் திணித்ததும் தெரியவந்தது.

உடலை போர்ட் பியஸ்டா காரில் வைத்து எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சூட்கேசோடு எரித்து அதை கண்மாய் கரையில் வீசியது தெரியவந்தது.

குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு டென்சி வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் டென்சியை அடித்து கொலை செய்தாக மார்ட்டின் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கொலையை அவர் மட்டுமே செய்தாரா? அல்லது வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: