வியாழன், 19 ஏப்ரல், 2012

சட்டசபையில் அழகிரியை பற்றி விமர்சனம்; திமுக MLAக்கள்- 4 பேர் சஸ்பெண்ட்!

Azhagiri
 
சென்னை: சட்டசபையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அதிமுக எம்எல்ஏ விமர்சித்துப் பேசியதால் திமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டதால் 4 திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சட்டசபையில் இன்று வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது நடந்த விவாதம்,
தமிழரசன் (அதிமுக): கடந்த ஆட்சியின்போது மதுரையில் மு.க. அழகிரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரால் மதுரைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மதுரையில் வெட்டு குத்து போன்றவைதான் நடந்தது.இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சபாநாயகர் ஜெயக்குமார்: இது உறுப்பினரின் கன்னிப் பேச்சு. ஒரு உறுப்பினர் முதன் முதலாக பேசும்போது மற்றவர்கள் குறுக்கிடக்கூடாது. அடுத்து உங்கள் கட்சி சார்பில் உறுப்பினர் பேச இருக்கிறார். அவர் பேசும் போது இந்த கருத்துக்கு உங்கள் உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

ஆனாலும் தமிழரசனின் பேச்சுக்கு பதில் தர அனுமதி கோரி திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.

சபாநாயகர்: திமுக உறுப்பினர்கள் அனைவரும் உட்காருங்கள். உறுப்பினர் தமிழரசன் பேசி முடித்ததும் திமுக கொறடாவுக்கு வாய்ப்பு அளிக்கிறேன்.

(ஆனாலும் தொடர்ந்து திமுகவினர் குரல் கொடுத்தனர்)

சபாநாயகர்: அனைவரும் உட்காருங்கள். இல்லை என்றால் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இருப்பினும் திமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்பியதால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டபடியே வெளியே சென்றனர். மேலும் சட்டமன்ற வளாகத்திற்குள்ளும் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டனர்.

அப்போது சட்டமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் அவர்கள் மோசமாக நடந்து கொண்டனர். ஒழிக என்று கோஷமிட்டவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அவை நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து சில அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்ட திமுக எம்.எல்.ஏக்களின் பெயர்களை சபாநாயகரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானத்தில், கண்ணியமான இந்த சபையில் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் சபாநாயகரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கோஷமிட்ட திமுக உறுப்பினர்கள் எ.வ.வேலு, லால்குடி செளவுந்தர பாண்டியன், மைதீன் கான், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோரை அபை நடவடிக்கைகளில் இருந்து 10 நாள் நீக்கி வைக்க வேண்டும் என்று கோருகிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 4 திமுக எம்எல்ஏக்களையும் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

திமுக வெளியேற்றப்பட்டபோது அக் கட்சியின் சட்டமன்றத் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் அவையில் இல்லை.

துரைமுருகன் தலைமையில் திமுக இன்றும் வெளிநடப்பு:

முன்னதாக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் பேசுகையில், தமிழ்ப் புத்தாண்டை திமுக தலைவர் கருணாநிதி மாற்றியதை விமர்சித்துப் பேசினார்.

இதற்கு திமுக உறுப்பினர் சிவசங்கரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து பேசவே, அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் சிவசங்கரனை வெளியேற்றினர்.

இதன்பிறகு திமுக எம்எல்ஏ துரைமுருகன் விளக்கம் அளித்து பேச முற்பட்டார். ஆனால் அவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை: