வியாழன், 19 ஏப்ரல், 2012

திராவிட இயக்க பேராசிரியர் சுப. வீரபாண்டியன்: திராவிடத்தால் எழுந்தோம்

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு


திராவிட இயக்கம் தொடர்பாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான புரிதல்களை ஏற்படுத்தி வருபவர்களில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் முக்கியமானவர். அவருடைய பல புத்தகங்களைப் படித்திருந்தபோதும் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற புத்தகம் என்னைக் கவர்ந்த ஒன்று.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுப.வீ அவர்களை அவருடைய இல்லத்தில் வைத்து சந்தித்தேன். இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். ஒன்று, நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகங்களைக் கொடுப்பதற்காக. இரண்டு, கிழக்கு பதிப்பகத்தின் புதிய மாத இதழான ஆழம் இதழைக் கொடுத்து, கருத்து கேட்டு வருவதற்காக. மொபைலில் பேசியபோதே என்னுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகம் பற்றி விசாரித்தார்.
வீட்டுக்குள் நுழைந்தபோது சுப.வீ கட்டிலில் படுத்திருந்தார். முழங்காலில் கட்டு. மாடிப் படிக்கட்டுகளில் வழுக்கிவிழுந்ததன் காரணமாகக் காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார். எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுப்பது சவாலாக இருக்கிறது என்றார் சிரித்தபடியே. தினமும் பிசியோதெரபி செய்துவருவதால் விரைவில் குணமாகி, வெளியே புறப்படத் தொடங்கிவிடுவேன் என்றார்.
என்னுடைய புத்தகங்களைக் கொடுத்தேன். ஆர்வத்துடன் வாங்கியவர் நிதானமாகப் புரட்டத் தொடங்கினார். எந்த அடிப்படையில் பாகங்கள் பிரித்திருக்கிறீர்கள், எங்கிருந்து வரலாறு தொடங்குகிறது என்பன போன்ற அடிப்படை விவரங்களைக் கேட்டார். திராவிட இயக்கத்தின் தொடக்கமாக நான் குறிப்பிட்டிருப்பது 1912 அல்ல; பிராமணர் அல்லாதார் சங்கம் உருவான 1909 ஆம் ஆண்டைத்தான் குறிப்பிட்டுள்ளேன் என்றேன். ஆம். திராவிட இயக்க சித்தாந்தத்தின் விதை விழுந்த ஆண்டு அது என்றார் சுப.வீ. நூற்றாண்டு கொண்டாடப்பட்டுவரும் சூழலில் இப்படியான பதிவுகள் வருவது ஆரோக்யமானது என்றார்.
பிறகு ஆழம் இதழைக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர், ‘ஓ, இது உங்களுடைய இதழ்தானா? இந்த இதழை நான் ஏற்கெனவே படித்து விட்டேனே.. அஞ்சல் மூலமாக எனக்கு வந்தது. இதழ் நன்றாக இருக்கிறது’ என்றார். நன்றி கூறிவிட்டு, ஆழம் இதழில் என்னென்ன மாதிரியான செய்திகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது என்பது பற்றிச் சொன்னேன். உங்களுடைய பங்களிப்பும் அவ்வப்போது இருக்கவேண்டும் என்றேன். சிரித்துக் கொண்டே தலையசைத்தார்.
பிறகு கிழக்கு பதிப்பகம் பற்றிப் பேச்சு வந்தது. கிழக்கு பதிப்பகத்தின் மீதும் கிழக்கு வெளியிடும் புத்தகங்கள் மீதும் அவருக்குள்ள விமரிசனங்களை என்னிடம் கூறினார். விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஆங் சான் சூ கி உள்ளிட்ட சில புத்தகங்களைப் படித்திருப்பதாகச் சொன்னார். அவர் வைத்த விமரிசனங்களுக்கான விளக்கங்களை எடுத்துச் சொன்னேன். சிலவற்றைக் ஏற்றுக்கொண்டார். சிலவற்றைக் கேட்டுக்கொண்டார். கிழக்கு வெளியிட்டுள்ள முக்கியப் புத்தகங்கள் பற்றியும் அவை உருவான விதம் பற்றியும் பேசினேன். குறிப்பாக, இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு புத்தகம் பற்றி. ‘முதல் பாகம் படித்துவிட்டேன்; இரண்டாவது பாகம் வாங்கவேண்டும்’ என்றார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு முக்கியமான புத்தகங்களில் சிலவற்றைத் தருகிறேன். அவசியம் நீங்கள் படிக்கவேண்டும் என்றேன். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.
அவர் அமர்ந்திருந்த கட்டிலில் நிறைய புத்தகங்கள், எழுதப்பட்ட காகிதங்கள். என்னவென்று விசாரித்தேன். தனக்கு அறுபது வயது நிறைவடைவதை ஒட்டி வாழ்க்கைக்குறிப்புப் புத்தகம் ஒன்றை எழுதிவருவதாகச் சொன்னார். பால்ய காலத்தில் இருந்தே நாட்குறிப்பு எழுதிவரும் அவர், அவற்றில் இருக்கும் தகவல்களைக் கொண்டு புத்தககம் எழுதிவருவதாகச் சொன்னார். புத்தகத்துக்கு அவர் வைத்த தலைப்பு: வந்ததும் போவதும்.
அந்தத் தலைப்பை கலைஞரிடம் கூறியிருக்கிறார் சுப.வீ. அந்தத் தலைப்பை, ‘வந்ததும் வாழ்வதும்’ என்று திருத்திக் கொடுத்திருக்கிறார் கலைஞர். அந்தத் தலைப்பிலேயே தற்போது புத்தகம் வெளிவரவிருக்கிறது என்றார் சுப.வீ. புத்தகத்தை வெளியிடுபவர் கலைஞர். அந்தப் புத்தகத்தோடு சேர்த்து சுப.வீ எழுதிய திராவிடத்தால் எழுந்தோம் (32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) வேறு சில புத்தகங்களையும் கலைஞர் வெளியிட இருப்பதாகச் சொன்னார். விழாவுக்கு நீங்கள் வரவேண்டும் என்றார். அப்போது என்னுடைய கவனத்தை ஈர்த்தது அங்கிருந்த புத்தம் புதிய புத்தகம் ஒன்று. பெரியார் என் நண்பர் என்று தலைப்பு. டாக்டர். பி. வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு. அதைப்பற்றிக் கேட்பதற்குள் பிசியோதெரபிஸ்ட் வந்துவிட்டதால் விடைபெற்றுக் கொண்டேன்.
சந்திப்பு முடிந்த சில தினங்களில் சுப.வீ அவர்களிடம் இருந்து அழைப்பு. திராவிட இயக்க வரலாறு புத்தகத்தின் முதல் பாகத்தைப் படித்துமுடித்துவிட்டேன். சிறப்பான பணியைச் செய்திருக்கிறீர்கள். ஏராளமான செய்திகளைத் தகுந்த ஆதாரங்களோடு பதிவுசெய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் என்றார். நன்றி தெரிவித்தேன். இரண்டாவது பாகத்தை விரைவில் படித்துமுடித்துவேன். முடித்ததும் அழைக்கிறேன் என்றார்.
பிறகு இன்னொரு விஷயத்தையும் சொன்னார். கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் காலை ஒன்பது மணிக்கு “ஒன்றே சொல் நன்றே சொல்’ என்ற நிகழ்ச்சியில் நான் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். வரும் புதன் கிழமை காலை உங்களுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைப் பற்றிப் பேசவிருக்கிறேன். குறிப்பாக, டி.எம். நாயர் என்ற அத்தியாயம் பற்றி என்றார்.
புதன் கிழமையன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் பேசினார் சுப.வீ. ‘திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில் அதைப் பற்றி வந்திருக்கும் புதிய புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு.. இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது. அண்ணாவின் காலம் வரைக்குமானது முதல் பாகம், அண்ணாவுக்குப் பிறகான வரலாறு இரண்டாம் பாகம்.. கிழக்கு பதிப்பக வெளியீடு’ என்று அறிமுகம் செய்துவிட்டு, டி.எம். நாயர் பற்றிப் பேசினார்.
மாண்டேகு – செம்ஸ்போர்டு குழுவினருடன் பேசுவதற்கு டி.எம். நாயர் மேற்கொண்ட முயற்சிகள், அளித்த சாட்சியங்கள், லண்டன் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை, லண்டனில் அரசியல் பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடை, அவற்றை நாயர் முறியடித்த விதம், எதிர்பாராத சமயத்தில் நடந்த நாயரின் மரணம் என்று டி.எம். நாயர் என்ற அத்தியாயத்தில் இடம்பெற்ற செய்திகளைப் பற்றிப் பேசினார் சுப.வீ. என்னுடைய புத்தகத்துக்குக் கிடைத்த முக்கியமான மதிப்புரையாக சுப.வீயின் பேச்சு அமைந்தது. நன்றிகள் பல!
0
ஆர். முத்துக்குமார்

கருத்துகள் இல்லை: