திங்கள், 27 பிப்ரவரி, 2012

மாறன் பிரதர்ஸ் வளர்ந்த கதை! Part one

 கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்கள் எப்படி மிகப் பெரிய தீய சக்தியாக ஆக முடியும் ?
யார் இந்த கலாநிதி மாறன். சென்னை டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, லயோலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அமேரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.
இந்திய டுடே நிறுவனம், அப்போது வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, ந்யூஸ் ட்ராக் என்ற வீடியோ பத்திரிக்கையை தொடங்கியது. இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட். இதில் தற்போது, இந்த வார உலகம் என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா ? அதைப் போலவே, தொடங்கப் பட்டது.
ஆனால், இந்த பூமாலைக்குப் பின்னால், கருணாநிதியின் பின்புலம் செயல்பட்டது.   இந்தியா டுடேவின் ந்யூஸ் ட்ராக் போல, சந்தாதாரர்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள அத்தனை வீடியோ கடைகளும், மிரட்டப் பட்டன.
அதன் பிறகு தாராளமய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, சன்டிவி தொடங்கப் படுகிறது.   1993ம் ஆண்டு சன் டிவி தொடங்கப் படுகிறது.   இந்த சன் டிவி தொடங்கப் பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. இப்போது போல, அப்போதெல்லாம், ட்ரான்ஸ்பாண்டர்கள் குறைந்த விலையில் கிடைக்காது. இப்போது ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிவி சேனல் தொடங்கி விடலாம்.   அத்தனை மலிவாகி விட்டது.   உடனே, ஆண்டிமுத்து ராசா நினைத்திருந்தால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி சேனல்களை தொடங்கியிருக்கலாமே என்று யோசிக்காதீர்கள்.   1993ல் சென்னையில் ப்ரூனே சுல்தானின் உறவினர் ஒருவர் இருந்தார். அவருக்கு சொந்தமான ட்ரான்ஸ்பாண்டர் ஒன்று இருந்தது. அவரோடு நட்பு ஏற்படுத்தி, அந்த ட்ரான்ஸ்பாண்டரை இலவசமாக பெறுகிறார் கலாநிதி மாறன். இப்படித் தான் சன்டிவி தொடங்கப் பட்டது.
சன்டிவி தொடங்கிய உடனேயே பிரபலமாக ஆனதன் காரணம், அப்போது வேறு டிவி சேனல்கள் இல்லை என்றாலும் கூட, தரமான நிகழ்ச்சிகளை வழங்கியது ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.   எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சேனலின் நம்பகத்தன்மையை போக்கும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப மாட்டேன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார்.   மற்ற சேனல்களில் வருவது போல், சன் டிவியில், டெலி ஷாப்பிங்கோ, சுவிசேஷக் கூட்டங்களோ, போலி மருத்துவர்களின் நேரடி நிகழ்ச்சியோ இடம் பெறாது. ஏனெனில், இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு முறை வந்தால் கூட, சேனலின் நம்பகத்தன்மை போய் விடும் என்று கலாநிதி நம்பினார்.
இது 1993 முதல் 1996 வரை தான். 1991 முதல் 1996 வரியிலான ஜெயலலிதாவின் ஆட்சி, அராஜகம் மற்றும் ஊழலின் மொத்த உருவமாக இருந்ததால், மாற்று ஊடகத்தில் வரும் செய்திகளுக்கு மக்கள் ஏங்கினார்கள். இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி, அன்றைய எதிர்க்கட்சி வேலையை சன்டிவி குழுமத்தினர் நன்றாகவே செய்தனர். தூர்தர்ஷன் செய்திகளுக்கு வேறு மாற்றே இல்லை என்பதால், மக்களும், இதை ரசிக்கவே செய்தார்கள்.
இப்போது ஜெயா டிவியில் இருக்கும், ரபி பெர்னார்ட் அப்போது சன்டிவியில் இருந்தார். ஜெயலலிதா அரசாங்கத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகளுக்கு குறையே இல்லை.   தினம் தினமும் செய்திகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும்.   அப்போது ஜெயலலிதாவின் அதிமுகவிலிருந்து, தினந்தோறும் ஒருவர் விலகி, ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றியும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்.   இவ்வாறு விலகி வந்தவர்களை வைத்து ரபி பெர்னார்ட் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி அப்போது அவ்வளவு பிரபலம்.

1995 செப்டம்பர் 7 அன்று ஜெயலலிதாவின் விருப்பத்திற்குறிய வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம் வெகு விமர்சையாக இருந்தது. அப்போது சன் டிவி வழங்கிய செய்திகள், மக்கள் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்தது.   வளர்ப்பு மகன் திருமணத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்களிடமிருந்து மின்சாரம் திருடியது, அதிகாரிகளை மிரட்டியது, போன்ற அத்தனை விஷயங்களையும் படம் பிடித்துக் காட்டியது. இன்றைய தலைமுறையினர் முன்னூறு சேனல்களோடு பிறந்ததால், அந்தச் செய்திகள் அப்படி சிறப்பாகத் தோன்றாவிட்டாலும், அப்போது தூர்தர்ஷன் செய்திகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போயிருந்த கண்களுக்கு, சன் டிவியின் செய்திகள் புத்துணர்வை தந்தது.   வளர்ப்பு மகள் திருமணத்தின் போது, அந்த மணமகன் வரவேற்பு ஊர்வலத்தில், பட்டாடையுடன், ஜெயலலிதாவும், சசிகலாவும், உடல் முழுக்க நகை ஜொலிக்க நடந்து வந்ததையும், ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் எடுத்து வரும் வண்டியில் பாதுகாப்புக்காக வரும் துப்பாக்கி ஏந்திய காவலர் போல, அவர்களுக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கியோடு, அப்போது நடந்து வந்த வால்டர் தேவாரமும் நடந்து வந்த கண்கொள்ளா காட்சியை மலர் மருத்துவமனை மாடியிலிருந்து சன்டிவியின் கேமரா மேன் கண்ணன் என்பவர், படமெடுத்தார்.
இப்போது எல்லைப் பாதுகாப்புப் படை டிஜிபியாக உள்ள விஜயகுமார், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகவே எஸ்எஸ்ஜி என்ற படையை உருவாக்கினார். அந்தப் படையைச் சேர்ந்தவர்கள், மலர் மருத்துவமனையின் மாடியிலிருந்து படமெடுத்த கண்ணனை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கைது செய்தனர். இந்த கைது சன்டிவியின் பரபரப்பை பெருமளவில் அதிகரித்தது. இந்தக் கைதை பெரிய செய்தியாக்கிய சன் டிவி, இது தொடர்பாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாண், ஆகியோருக்கு புகார் அனுப்பியது.
1996. இதற்குப் பிறகுதான், மாறன் சகோதரர்களின் அசல் முகம் தெரியத் தொடங்கியது.   கருணாநிதி ஆட்சியைப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், நெடுந்தொடர்களுக்கு திரைப்பட நடிக நடிகையரை மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்களை மிரட்டுவதில் தொடங்கி கேடி சகோதரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.   திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங்களும், திரைத் துறையினரும், வாய் மூடி மவுனிகளாக இருந்தனர்.
அறிவாலயத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்த சன் டிவி, மெல்ல மெல்ல, அறிவாலயத்தையே தன் வசம் கொண்டு வந்தது. அறிவாலயத்தில் ஒரு அலுவலகம் வைத்திருந்த, வேலூர் எம்எல்ஏ காந்தியை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலி செய்ய வைத்தார் கலாநிதி மாறன்.


அழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், கேடி சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.   கேடி சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை.
அப்போதெல்லாம், இப்போது போல கேபிள் யுத்தம் பெரிதாக இல்லை. சேனல்களும் குறைவாக இருந்ததால், கேபிள் தொழில் அவ்வளவு போட்டி நிறைந்ததாக இல்லை.   ஆனால், ஒரு ஆக்டோபஸ் போல கேபிள் தொழிலை கேடி சகோதரர்கள் வளைக்கத் தொடங்கினர். எஸ்.சி.வி என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்கியவர்கள் முதலில் சென்னை நகரில் மட்டும் கேபிள் விநியோகத்தை நடத்தி வந்தனர். எஸ்சிவிக்கு போட்டியாக சென்னையில் இருந்தது மும்பையைச் சேர்ந்த ஹாத்வே நிறுவனம். ஹாத்வே நிறுவனத்தின் முக்கிய சந்தாதாரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள்.  வசதி படைத்தவர்கள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் ஹாத்வே நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.   96-2001ல் ஹாத்வேயை விட்டு வைத்த கேடி சகோதரர்கள், 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கேபிள் தொலைக் காட்சியில் தங்கள் ஏகபோகத்தை நிலைநாட்டினர்.
2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தமிழகம் முழுக்க கேபிள் தொழிலை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் கேடி சகோதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்தை பிரயோகித்து, ஹாத்வே நிறுவனத்தை சென்னை நகரத்தை விட்டே துரத்தினர். தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழில், கேடி சகோதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது.   விஜய் டிவியில் முன்பு, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை.
இது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறனே… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரயோகம் பாருங்கள்.
www.ethiroligal.blogspot.com

கருத்துகள் இல்லை: