செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

அழகிரி:ஆருயிர் தம்பி ஸ்டாலின் அவர்களே


Azhagiri
சங்கரன்கோவில்: பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தி விட்டு, மின்தடையை மாநிலம் முழுக்க பரவி விட்டு மமதையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலை சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு சரியான பாடம் கற்பிப்போம் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சங்கரன்கோவிலில் வைஷ்ணவி திருமண மண்டபத்தில் இன்று திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அழகிரி பேசுகையில், இடைத் தேர்தல் நாயகன் என்று என்னைக் குறிப்பிட்டு ஒரு பெண்மணி பேசி வருகிறார் (பிரேமலதா விஜயகாந்த்தைக் குறிப்பிட்டு). அங்கேயே ஒரு நாயகன் இருக்கும்போது இந்த நாயகன் குறித்து அவர் ஏன் பேசுகிறார்?.தேர்தலைச் சந்திக்கும் அனைத்து கட்சிகளுமே தங்கள் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பார்கள். ஆனால் இங்கே சோதனையைச் சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். பால் விலை ஏற்றம், பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை மீறி, சங்கரன் கோவிலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஆளும் தரப்பு சவால் விடுகிறது. எனவே இது எதிர்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட சவால் அல்ல. மக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட சவால்.

பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தி விட்டு வெற்றி பெற்றுக் காட்டுகிறோம் என்று மமதையில் பேசி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவரது மமதையை அடக்கும் வகையில் இங்கு வெற்றி பெற்றாக வேண்டும். அனைவரும் சோர்வடையாமல், கடுமையாக உழைத்து வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும்.

உள்ளூர், வெளியூர் என்று யாரும் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். வேலை பார்க்காதவர்கள் யாரும் என்னிடமிருந்து தப்ப முடியாது.

நான் தொகுதியை சுற்றி சுற்றி வருவேன். யாரும் என்னை ஏமாற்ற முடியாது. யாரும் லீவு போட்டுவிட்டு போகக் கூடாது. இந்த தேர்தல்தான், நமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்றார் அழகிரி.

மு.க.ஸ்டாலின் பேசுகையில், இது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை. ஆனால், விலை ஏற்றத்தை கடுமையாக மக்கள் மீதுசுமத்தி விட்டு அதை நியாயப்படுத்தும் விதமாகப் பேசுகிறவர்களுக்கு பாடம் புகட்டும் தேர்தல். மார்ச் 2ம் தேதி முதல் இங்கு தீவிரத் தேர்தல் பணியாற்றுவோம். யாரும் சோர்ந்து விடக் கூடாது. தீவிரமாக உழைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட சரியான சந்தர்ப்பம் இது. இந்த தேர்தல் சரியான நேரத்தில்தான் வந்துள்ளது. அதிமுகவினர் மீதான எதிர்ப்பலையை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் சிறப்பாக பாடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்றார் ஸ்டாலின்.

என்னுடைய ஆருயிர் தம்பி ஸ்டாலின் அவர்களே:

முன்னதாக தனது பேச்சை ஆரம்பித்த அழகிரி, இந்த இடைத்தேர்தலுக்காக ஆலோசனை வழங்க வந்த, என்னுடைய ஆருயிர் தம்பி ஸ்டாலின் அவர்களே என்றபோது அரங்கத்தில் கைத்தட்டல் பறந்தது.

கருத்துகள் இல்லை: