செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நடராஜன் ஆவேசம் இதை நான் சும்மா விட மாட்டேன்

சசிகலாவின் கணவர் நடராஜன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது பாதுகாப்பு கருதி தீவிரவாதிகள், தூக்கு தண்டனை கைதிகள் போன்ற பெரிய அளவிலான குற்றம் புரிந்தோரை அடைத்து வைக்கும் உயர் பாதுகாப்பு தொகுதி&1வது கட்டிடத்தின் 7வது அறையில் நடராஜனை சிறை நிர்வாகத்தினர் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி சிறை சூப்பிரண்ட் சுந்தர்ராஜ், மற்றும் எஸ்பிசிஐடி எஸ்.ஐ.டேனியல் என்பவரும் உயர் பாதுகாப்பு தொகுதி 1ல் ரோந்து சென்றனர்.
நடராஜன் அடைக்கப்பட்டுள்ள அறையை, இருவரும் வெளியில் நின்றபடி பார்வையிட்டுள்ளார். அப்போது சூப்பிரண்ட் சுந்தர்ராஜ் நடராஜனிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது அருகில் வெள்ளை பேண்ட், சட்டை அணிந்திருந்த எஸ்.ஐ.யை பார்த்து ‘இவர் யார்?‘ என சிறை அதிகாரியிடம் நடராஜன் கேட்டுள்ளார். அதற்கு ‘எஸ்பிசிஐடி எஸ்ஐ‘ என பதில் சிறை அதிகாரி கூறியுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த நடராஜன், ‘எஸ்பிசிஐடி போலீசை சிறைக்குள் எப்படி அனுமதித்தீர்கள். ஏடிஜிபி அனுமதியின்றி அந்நியர் யாரும் உள்ளே வரக்கூடாது என்பது தானே சிறை விதி. என்னை உளவு பார்க்க சிறைக்குள்ளேயே தனி ஆளை நியமித்துள்ளார்களா? இதை நான் சும்மா விட மாட்டேன்.
ஐகோர்ட்டில் வழக்கு தொடர போகிறேன்‘ என ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் பயந்துபோன சிறை அதிகாரி, ‘நாங்கள் உளவு பார்க்கவோ, ஆய்வு செய்யவோ வரவில்லை. வழக்கம்போல ரோந்துக்கு தான் வந்தோம்.
இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்‘ என நடராஜனிடம் நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்தபின் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நடராஜனை பார்க்க வந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் மகேந்திரவர்மனிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்பிசிஐடி எஸ்.ஐ என குறிப்பிடப்பட்ட அந்த நபர் குறித்து வக்கீல் விசாரித்தபோது தான், அந்த எஸ்.ஐ கரூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருவதும், கடந்த சில மாதங்களாக சிறை வளாகத்தில் எஸ்பிசிஐடிக்கு உளவு பார்க்கும் சிறப்பு பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிறை நிர்வாகத்தின் மீது வழக்கு தொடரும் முயற்சியில் நடராஜன் தரப்பினர் இறங்கியுள்ள சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: