புதன், 16 நவம்பர், 2011

அம்பேத்காரை இந்துவாக்காதீர்கள் மனிதனுக்காகத்தான் மதம். மதத்துக்காக மனிதன்அல்ல


அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு முன்பைக்காட்டிலும் அதிகரித்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த மதத்தைவிட்டு வெளியேறி வந்தாரோ, அந்த மதத்தின் அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றக் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வதுதான்.

‘மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது பொழுதுபோக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்… உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.’
பம்பாயில் 1936ம் ஆண்டு, மே மாதம் 30,31 இரு தினங்களிலும் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை இப்படித்தான் தொடங்குகிறது. இந்த உரையின் நோக்கம் இரண்டு. முதலாவதாக, தீண்டத்தகாத மக்களிடம் அவர்கள் நித்தம் நித்தம் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான மூலக்காரணத்தை விளக்குவது. இரண்டாவது, அந்த மூலக்காரணத்தைத் தகர்த்து எறிவதற்கான வழிமுறையைச் சொல்லித் தருவது.
இந்து மதம், அதைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றால், இந்துக்களில் ஒரு பிரிவினர் ஏன் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் மேல்சாதி இந்துக்களால் ஆளப்படுகிறார்கள்? மேல், கீழ் என்னும் பிரிவுகள் எப்படி, ஏன் தோன்றின? கால ஓட்டத்தில், இந்நிலைகள் ஏன் மாறாமல் அப்படியே நீடிக்கின்றன?
‘சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதம் என்றுமே மாற்றமுடியாத ஒன்றாகும். காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்கமுடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.’
ஒரு போராட்டத்தைச் சந்திக்க மூன்று பலம் தேவை. மனித ஆற்றல், நிதிபலம் மற்றும் அறிவு வலிமை. பம்பாய் மாகாணத்தில் தீண்டத்தகாதவர்கள் மொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கே இருந்த நிலையில், அவர்கள் ஓரணியாகத் திரண்டு, அதாவது மனித ஆற்றலைக் கொண்டு போராட முடியாது. பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில் அவர்களால் நிதிபலத்தையும் திரட்டமுடியாது. நீதிமன்றங்களை அணுகி, வாதாடி நீதி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. ‘ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதவர்கள், தங்கள்மீது இழைக்கப்படும் அவமானங்களைச் சகித்துக் கொள்பவர்களாகவும் சாதி இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறையையும் துளியளவும் எதிர்த்துப் பேச முடியாத நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.’
மூன்றாவது பலத்தையும் அம்பேத்கர் பரிசீலித்தார். ‘அறிவாற்றலைப் பொருத்தவரை, நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சாதி இந்துக்களின் இழிவையும் கொடுமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு, வன்கொடுமைகளால் ஏற்பட்ட சகிப்புத்தன்மை, அவர்களிடையே கிளர்ந்தெழும் போர்க்குணத்தை மழுங்கடித்துவிட்டது. தன்னம்பிக்கை, உற்சாகம், இலக்கு முற்றிலுமாக உங்களிடமிருந்து மறைந்துவிட்டது. நீங்கள் எல்லாம் ஆதரவற்றோராக, வலிமையிழந்து காணப்படுகின்றீர்கள்.’
மூன்று அத்தியாவசிய பலங்களையும் இழந்துவிட்ட நிலையில் தீண்டத்தகாதவர்களின் கதி என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன், அம்பேத்கர் இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். தீண்டத்தகாத இந்துக்கள்சிறுபான்மையினராகவும் பலமற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், மகர், மாங் மக்களைப் போலவே முஸ்லிம்களும்தானே சிறுபான்மையினர்? அவர்கள் ஏன் இந்துக்களால் தாக்கப்படுவதில்லை?‘ஒரு கிராமத்தில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தாலும், அவர்களைத் தாக்க எவரும் துணிவதில்லை. ஆனால், உங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், மொத்த கிராமமே உங்கள்மீது வன்மையான தாக்குதலைத் தொடுக்கிறதே. ஏன் இந்த நிலை?’
இந்துக்களுக்குத் துணிவில்லை என்றார் அம்பேத்கர். ‘இந்த இரு முஸ்லிம் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன், அச்சமற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். ஏனென்றால், இந்துக்கள் அவர்களைத் தாக்கினால், பஞ்சாப் முதல் சென்னைவரை வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எப்பாடுபட்டாவது தங்களைப் பாதுகாக்க அணிதிரளுவார்கள் என்று உறுதியாக அவர்கள் நம்புகின்றனர். ஆனால், உங்கள்மீது தாக்குதல் நடத்தினால் உங்களைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளனர்.’
இந்த இடத்தில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை நினைவுபடுத்திக்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் தலித் மக்கள் சாதி இந்துக்களால் தாக்கப்படுவது ஏன்? அவர்களைக் காக்க ஏன் யாரும் முன்வரவில்லை? ‘காரணம், தாசில்தாரும் போலிசும் சாதி இந்துக்களாகவே இருக்கின்றனர். இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே பிரச்னை என்றால், அவர்கள் தாங்கள் பணிசெய்யும் வேலைக்கு நேர்மையாக இருப்பதைவிட, தங்கள் சாதிக்கே விசுவாசமாக இருப்பர். நீங்கள் ஆதரவற்று இருப்பதால்தான், இந்துக்கள் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். உங்களைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.’
இதிலிருந்து தப்பவேண்டுமானால், பலமற்றவர்கள் ‘வெளியில் இருந்து பலத்தைப் பெற்றாகவேண்டும்’ என்கிறார் அம்பேத்கர். ‘வேறு சமூகத்துடன் நீங்கள் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளாமல், வேறு மதங்களில் நீங்கள் உங்களை இணைத்துக்கொள்ளாமல், வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெறமுடியாது… உங்களுக்கு வலிமை இல்லாதவரை, நீங்களும் உங்கள் எதிர்காலத் தலைமுறையும் இதே போன்ற துன்பகரமான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’
அம்பேத்கர் தொடர்கிறார். ‘இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் கீழான மக்கள் அல்ல. இந்துக்கள் நம்மை நடத்தும் நிலை, நம்மை இந்தியா முழுவதும் கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையில் இருந்து நாம் விடுபடவேண்டும் எனில், இந்தக் கசடுகளை அகற்றி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது என்ன? இந்து மதத்தாலும் இந்து சமூகத்தாலும் பூட்டப்பட்டுள்ள இரும்பு வேலிகளைத் தகர்த்தெறிய வேண்டும்.’
ஏன் தகர்க்கவேண்டும்? சீர்திருத்த முடியாதா? தீண்டாமையை அகற்றிவிட்டு, சாதிகளை ஒழித்துவிட்டு, ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்துவிட்டு, இந்து மதத்திலேயே தொடர்ந்து நீடிக்கமுடியாதா? காந்தி சொன்னது போல் சாதி இந்துக்களின் மனத்தை மாற்றமுடியாதா? ‘இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது, நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்தரம் பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம் சுதந்தரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும் பொறுப்பை ஏன் சுமக்கவேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன் இதற்காகத் தியாகம் செய்யவேண்டும்?… நம் நோக்கம் தீண்டத்தகாத மக்களுக்கு சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த விடுதலையைப் பெறவே முடியாது.’
ஒரு பேச்சுக்கு, இந்து மதத்தில் இருந்துகொண்டே அதனைச் சீர்திருத்துவோம் என்று வைத்துக்கொண்டாலும், முதலில் சதுர்வர்ணத்தை ஒழித்தாகவேண்டும். பிறகு, பார்ப்பன மதம் வேரறுக்கப்படவேண்டும். இதெல்லாம் சாத்தியமா? ‘இல்லை எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறுமா?’
எந்த மதத்துக்கு மாறுவது? கிறிஸ்தவமா? இஸ்லாமா? அவற்றில் சாதிகள் இல்லையா? ஏற்றத்தாழ்வுகள் இல்லையா? ‘இருக்கிறது என்றாலும் அது இந்துக்களிடையே கடைபிடிக்கப்படுவது போலுள்ளது என்று சொல்வது சிறுபிள்ளைத் தனமானது… இந்துக்களின் சாதி அமைப்புக்கு மத அங்கீகாரம் உள்ளது. பிற மதங்களில் இருக்கும் சாதிகளுக்கு அந்த மதங்களின் அங்கீகாரம் கிடையாது. மதத்தை ஒழிக்காமல் இந்துக்களால் சாதியை ஒழிக்கவே முடியாது. சாதியை ஒழிக்க முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மாறாக, சாதிகளை ஒழிக்க இவர்களின் மதங்களே பெரிதும் துணை நிற்கும்.’
தன் உரையை அம்பேத்கர் இப்படி நிறைவு செய்கிறார். ‘இந்து மதம் என் மனசாட்சியை ஈர்ப்பதாக இல்லை. என்னுடைய சுயமரியாதைக்கு மதிப்பளிப்பதாக இல்லை… மனிதனுக்காகத்தான் மதம். மதத்துக்காக மனிதன் என்பதல்ல. மனிதத் தன்மை கிடைக்க வேண்டும் எனில், மதம் மாறுங்கள். ஒருங்கிணைவதற்கு மதம் மாறுங்கள். வலிமையாகத் திகழ மதம் மாறுங்கள். சமத்துவத்தை அடைய மதம் மாறுங்கள். விடுதலைக்காக மதம் மாறுங்கள். வீட்டில் மனமகிழ்வுடன் இருக்க மதம் மாறுங்கள்… உங்களுக்கு எது நல்லது என்று சொல்வது என் கடமையாகும். என் கடமையை நான் செய்யவேண்டும். இப்பொழுது அதை நான் செய்து விட்டேன். இனி, முடிவெடுத்து கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு.’
0
நந்தன் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை: