வியாழன், 17 நவம்பர், 2011

மாநிலத்தின் தேவைக்கு ஒருசில ஊர்கள் அழிந்தாலும் பரவாயில்லை?

இடிந்தகரை : இடியாத மனங்கள்


இடிந்தகரைக்குப் போயிருந்தேன். நான் செல்வதற்கு முந்தைய நாள் கூடங்குளத்துக்கு அருகிலிருக்கும் செட்டிகுளம் என்கிற ஊரில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட ஒரு பெரும் போராட்டம் நடந்து முடிந்திருந்தது. இதில் பலதரப்பினரும், பல அறிவியல் வல்லுனர்களும் கலந்துகொண்டனர். இதனால் அன்று இடிந்தகரை போராட்டப்பந்தலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அறுப‌து, எழுப‌து பெண்க‌ளும் சுமார் முப்ப‌து ஆண்க‌ளும் இருந்த‌ன‌ர். சீமான் முன்பு ஆற்றியிருந்த‌ உரை ஒன்றின் ஒலிநாடா ஒலித்துக்கொண்டிருந்த‌து. அர‌ங்கைச் சுற்றி த‌மிழிலும் ஆங்கில‌த்திலும் அணு ச‌க்திக்கு எதிரான‌ பிர‌சார அறிவிப்புகள் மாட்டிவிடப்பட்டிருந்தன.
சிறிது நேர‌த்தில் ப‌க்க‌த்து விவசாய கிராம‌மொன்றிலிருந்து ஒரு வாக‌ன‌த்தில் சில‌ர் வ‌ந்து சேர்ந்த‌ன‌ர். இதிலும் பெண்க‌ளே அதிக‌மிருந்த‌ன‌ர். அதைத் தொட‌ர்ந்து  கோட்டாறிலிருந்து சில‌ இளைஞ‌‌ர்க‌ளும் வ‌ந்து சேர்ந்துகொண்ட‌ன‌ர்.
ஒரு பாதிரியார் முத‌லில் எல்லோரையும் வ‌ர‌வேற்று பேசினார். அடுத்து ஒருவ‌ர் மிக‌ விரிவாக‌ அணு உலைக‌ளினால் வ‌ரும் ஆப‌த்துக‌ளை அறிமுக‌ப்ப‌டுத்தியும், அணு உலை விப‌த்துக்க‌ளின் வரலாறு குறித்தும் விள‌க்கி பேசினார். ’1979ல் மூன்று மைல் தீவில் விப‌த்து நிக‌ழ்ந்த‌போது இதை சரி செய்துவிட்டோம். இனிமேல் இப்ப‌டி ந‌ட‌க்க‌வே ந‌ட‌க்காது என்றார்க‌ள்.
அடுத்து 1986ல் செர்னோபில் ந‌ட‌ந்த‌போதும் இதை சரி செய்துவிட்டோம் இனிமேல் இப்ப‌டி ந‌ட‌க்க‌வே ந‌ட‌க்காது என்று சொன்னார்க‌ள். அடுத்து ஃபுக்குஷிமாவுக்குப் பிற‌கும் இதையே சொல்கிறார்க‌ள்.’ எல்லோருக்கும் புரியும்ப‌டியும் ச‌ரியான‌ த‌ர‌வுக‌ளோடும் இவ‌ர் பேசியதைக் கேட்கையில் மொத்த‌ போராட்ட‌மும் ப‌ல‌ க‌வ‌னிக்க‌த்த‌க்க‌ உரையாட‌ல்க‌ளையும் சிந்த‌னைக‌ளையும் உருவாக்கியிருக்க‌க்கூடும் என்ப‌தையும் அதை ப‌திவு செய்ய பரவலாக ந‌ம் ஊட‌க‌ங்க‌ள் த‌வ‌றியிருக்கின்றன என்ப‌தையும் புரிந்துகொள்ள முடிந்தது.
ம‌க்க‌ள் க‌வ‌லை மிகுந்த‌ முக‌ங்க‌ளுட‌ன் கேட்டுக்கொண்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ரும் அவ்வ‌ப்போது கூட்ட‌த்திலிருந்து ப‌திலுரைப்ப‌தும் ஊக்குவிப்ப‌துமாக இருந்த‌ன‌ர். போராட்ட‌ப் ப‌ந்த‌லில் த‌ண்ணீர் குடுவை வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அவ்வ‌ப்போது சில‌ர் த‌ண்ணீர் ம‌ட்டும் குடித்துக்கொண்டிருந்த‌ன‌ர். அடுத்த‌ பேச்சாள‌ர் கொஞ்ச‌ம் கிராமத்து ந‌கைச்சுவை சேர்த்து அப்துல் கலாமைச் சாடிக்கொண்டிருந்தார்.  அப்துல் க‌லாம் போராடிக்கொண்டிருக்கும் ம‌க்க‌ளை ச‌ந்திக்காத‌து அவ‌ர்க‌ளுக்குப் பெருத்த‌ ஏமாற்ற‌த்தைத் த‌ந்திருந்த‌து. அடுத்து ஒரு ஓய்வுபெற்ற‌ பேராசிரிய‌ர் மிக‌ நீண்ட‌ உரை ஒன்றை நிக‌ழ்த்தினார். அதை அடுத்து இரு பெண்க‌ள் சினிமாப் பாட‌ல் மெட்டில‌மைந்த‌ போராட்ட‌ப் பாட‌ல் ஒன்றை பாடினார்க‌ள். கொஞ்ச‌ம் அணு, கொஞ்ச‌ம் அர‌சிய‌ல் க‌ல‌ந்த‌ பாட‌ல‌து. அந்த நேரம் பள்ளி விட்டு குழந்தைகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
பின்பு என்னைப் பேச‌ச் சொன்னார்க‌ள். அணு ஆபத்து குறித்து முத‌லில் பேசிய‌வ‌ர் சொன்ன‌ சில‌வ‌ற்றை அழுத்திச் சொன்னேன். கடந்த பல மாதங்களாக பலதரப்பட்ட கருத்துகளை அவர்கள் கேட்டிருக்கக்கூடும். இருந்தும் அவர்கள் ஈடுபாட்டோடு கவனித்துக்கொண்டிருந்தது வியப்பாயிருந்தது. எவனாவது ஒருவன் நல்ல செய்தியைச் சொல்லமாட்டானா என்கிற ஏக்கம் காரணமாக இருக்கக்கூடும்!
டிஎன்ஏ என்பது கடவுளின் கையெழுத்து அல்லது வரைபடம் என்றும் அதை சிதைக்கும் கதிரியக்க ஆபத்து குறித்தும் ஓரிரு வரிகள் சொன்னேன். உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றபோது கூட்டத்திலிருந்த ஒரு வயதான பெண்மணி வானம் நோக்கி கடவுளை வணங்கி வேண்டிக்கொண்டார்.
அடுத்து இரு சிறுமிகள் திரைப்பாடல் மெட்டில் அணு உலை எதிர்ப்புப் பாடல் பாடினார்கள். தொடர்ந்து அந்தச் சிறுமிகளே சத்தமாக கோஷங்களை எழுப்ப கூட்டம் பதிலுரைத்தது. குஜராத்திலிருந்து சில‌ ஓய்வுபெற்ற‌ நீதிப‌திக‌ள் ம‌க்க‌ளைச் ச‌ந்திக்க‌ வ‌ருவ‌தாக‌வும் ஊர் ம‌க்க‌ள் அதில் க‌ல‌ந்துகொள்ள‌ வ‌ர‌வேண்டும் என்றும் அறிவிப்பு செய்ய‌ப்ப‌ட்ட‌து. ம‌க்க‌ள் ஒருவ‌ர் ஒருவ‌ராக‌ கோயிலை நோக்கி வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். கொஞ்சம் கழித்து நான் விடைபெற்றுக்கொண்டேன்.
அது பெண்களின் போராட்டம் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆண்க‌ள் வயிற்றுப்பிழைப்புக்காக‌ க‌ட‌லுக்கும் வ‌ய‌ல்க‌ளுக்கும் கூலி வேலைக‌ளுக்கும் சென்றுவிட‌ பெண்க‌ள் தினமும் வ‌ந்து போராட்ட‌ப் ப‌ந்த‌லில் உண்ணாவிர‌த‌ம் இருந்தார்கள். விம‌ரிச‌க‌ர் வேத‌ச‌காய‌ குமாரை ச‌ந்தித்த‌போது அவரும் அதையே குறிப்பிட்டார்.  போராட்ட‌த்தில் பெண்க‌ளின் ப‌ங்கு அவ‌ரை விய‌க்க‌ச் செய்திருந்தது. அது தாய்மையின்  போராட்ட‌ம் என்று அவர் குறிப்பிட்டார். த‌ன் பிள்ளை ஊன‌மாகப் பிற‌ப்பதை எந்தவொரு தாயால்தான் தாங்கிக்கொள்ளமுடியும்? மீண்டும் மீண்டும் அவர் இதையேச் சொல்லிக்கொண்டிருந்தார்.
என்னைப் பொறுத்தவரை, இது இந்தியர்கள் எல்லோருக்குமான போராட்டம். அண்மையில் நட‌ந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போன்றது இது. மக்களை அசட்டை செய்துவிட்டு, திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கும் அரசின் எதேச்சதிகாரத்துக்கு எதிரான போராட்டம் இது.  இந்த எளிய மக்களை நோக்கி ஆயிரம் கேள்விகளைக் கேட்கும் பலதரப்பட்ட மக்களும் பதில் சொல்ல வேண்டிய கேள்வி ஒன்றிருக்கிறது. இந்தத் திட்டம் மக்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டதா? இல்லை எனில் ஏன்?
ஒரு மாநிலத்தின் தேவைக்கு ஒருசில ஊர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என நினைப்பவர்கள் தாராள‌மாக அணு உலைகளை ஆதரிக்கலாம். நாளை அரசாங்கம் உங்கள் வீட்டுக் கதவையும் இரும்புக் கரத்தால் தட்டும். தட்டத்தான் போகிறது. அதுவரை இவர்கள் வலி புரியப்போவதில்லை.

கருத்துகள் இல்லை: