சனி, 19 நவம்பர், 2011

போலீசுக்கும் இனி 'கேன்டீன்' - சலுகை விலையில் அனைத்தும் கிடைக்கும்!


சென்னை: ராணுவ வீரர்களைப்போல போலீசாரும் குறைந்த விலையில் பொருட்களை வாங்க சலுகை அங்காடிகளை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக சென்னை, மதுரை, திருச்சியில் 3 அங்காடிகள் திறக்கப்பட உள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வெளிநாட்டு பகைவர்களிடமிருந்து நாட்டையும், மக்களையும் காப்பது ராணுவம். உள்நாட்டில் வாழும் சமூக விரோதிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பது காவல்துறை.
இரவு பகல் பாராமல் நம் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் அயராது உழைக்கின்ற காவல்துறைக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வரும் முதல்வர் ஜெயலலிதா, குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கு ராணுவத்தினருக்கு என தனியாக அங்காடிகள் இருப்பதைப் போல தமிழக காவல்துறைக்கும் குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் கிடைக்கக்கூடிய அங்காடிகளை அமைப்பதற்கு உத்தர விட்டுள்ளார்கள்.
இந்த அங்காடிகளால் வாங்கப்படும் பொருட்களுக்கும், அவற்றின் விற்பனைக்கும் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கவும், முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மூன்று இடங்களில் தொடங்க முடிவு
முதற்கட்டமாக இந்த அங்காடிகள், சென்னை, ஆவடியிலுள்ள படைக்கல மையம், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-வது பட்டாலியன், மற்றும் மதுரையிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6 வது பட்டாலியன், ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்படுகிறது. இந்த அங்காடிகள் அமைக்கவும், பொருட்கள் வாங்கவும், மானியமாக 1 கோடி ரூபாய் வழங்கிட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், இவர்களின் குடும்பத்தினர் மற்றும் இறந்து போன காவல்துறை பணியாளர்களின் குடும்பத்தினர் ஆகியோர் இந்த விற்பனை அங்காடிகள் மூலம் பயன் பெறுவர்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: