ஞாயிறு, 13 நவம்பர், 2011

எல்லை தாண்டி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை

மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெகதாப்பட்டினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இந்திய கப்பல் படை கமாண்டர் பிஜ்ரானியா எச்சரிக்கை விடுத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி அருகில் உள்ள ஜெகதாப்பட்டினம் கப்பல் படை அலுவலகத்தில் புதுக் கோட்டை மாவட்ட மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்திய கப்பல் படை கமாண்டர் பிஜ்ரானியா தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மகேஸ் முன்னிலை வகித்தார்.
துணை கமாண்டர் அர்ஜுன்பிரசாத் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கமாண்டர் பிஜ்ரானியா பேசுகையில், இந்திய மீனவர்கள் சர்வ தேச கடல் எல்லையை தாண்டி மீன் பிடிப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய மீனவர்கள் சுமார் 150 தடவைக்கும் மேலாக இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடித்துள்ளனர். எனவே விசைப்படகு மீனவர்கள் இந்திய சர்வ தேச கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது. அவ்வாறு மீறினால் அவர் கள் மீது சட்ட ரீதியான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் கோட்டைப்பட்டினம் சின்னஅடைக்கலம், ஜெகதாப்பட்டினம் ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட மீன் வளத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி, கடலோர பாதுகாப்பு குழும சப் இன்ஸ்பெக்டர்கள் மருது, ரகுபதி மற்றும் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: