ஞாயிறு, 13 நவம்பர், 2011

தியேட்டர் கொள்ளை 1000 ரூவா இல்லாம தியேட்டர் பக்கம் போக முடியாது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி வேதாளத்தைத் தேடிப் போகையில் செல்போன் ஒலித்தது. விக்கி போனை எடுக்க, எதிர் முனையில் பேசிய வேதாளம், "உலகத் தமிழர்களை எல்லாம் தலை நிமிர வெக்கிற படத்தைப் பாக்கலாம்ன்னு தியேட்டருக்கு வந்தேன். ஆனா, உள்ளூர் தமிழனெல்லாம் அதைப் பார்க்க முடியாத மாதிரி கொள்ளைக் காசுக்கு டிக்கெட்டு விக்குறாங்க நண்பா. கையில காசு கம்மியா இருக்கு; காசோட தியேட்டருக்கு வா... கதை சொல்றேன்'' என்றது.
விக்கியின் இன்னோவா தியேட்டருக்குப் பறந்தது; தியேட்டர் வாசலில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த வேதாளத்தைக் கேவலமாகப் பார்த்தான் விக்கி. "என்ன நண்பா அப்படிப் பாக்குற? இப்படி ஓ.சியில படம் பாக்குறதுக்கு பதிலா ஓடுற ரயில்ல விழலாம்ன்னு யோசிக்கறயா? நீ யோசிப்ப... ஆனா, நாங்க எல்லாம் அடுத்த முதல்வரை, அரை இருட்டுல தேடியே பழகீட்டோம். சினிமா பாக்கலேன்னா அடுத்த சி.எம்., யாருன்னு "டிசைட்' பண்ண முடியாதே.
அதனாலதான், "பிச்சைப் புகிணும் பிலிமுக்கு போவது நன்றே'ங்கற முடிவோட படம் பாக்குறோம்.
இதைப் புரிஞ்சுட்டுதான் நம்ம ஊரு கவிஞப் பசங்க எல்லாம்,
"நல்ல தமிழ் நாட்டின்
நாற்காலிகள் எல்லாம்
நடிகர்களுக்காகவே
நட்டு வைக்கப்பட்டதாம்.
முதல்வராக இங்கே
மூத்த தகுதி எதுவென்றால்
அது முன்னாள் நடிகனாய்
இருப்பதுதானாம்''
அப்புடின்னு கவிதை எழுதிட்டுத் திரியுறாங்க. ஜனங்களுக்கு சினிமா மேல இருக்கற "கிரேஸை' புரிஞ்சுகிட்டுதான் புதுப்படத்துக்கு "புல்' ரேட்டு; 50 நாள் ஓடுனா "ஆப்' ரேட்டுன்னு ஒரு "ரேட் பிக்ஸ்' பண்ணியிருக்காங்க.
ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூவான்னு போட்டா கூட 2 குழந்தைங்க உள்ள குடும்பத்துல 4 டிக்கெட்டுக்கு 400 ரூவா ஆச்சு. இது போக, பாப்கார்ன் 80, "பார்க்கிங்' 20, தண்ணி பாட்டில் 50, தயிர் வடை 80ன்னு சொளையா 1000 ரூவா இல்லாம தியேட்டர் பக்கம் போக முடியாது. நாம்மாளுக வாங்குற அஞ்சாயிரம் சம்பளத்துல ஆயிரத்தை சினிமாவுக்கே குடுத்துட்டா, அப்பறம் புள்ள குட்டிகளோட எதாவது புளியமரத்துலதான் தொங்கணும். அதனாலதான் இன்னைக்கு என்னை மாதிரி பலபேரு ஓசிலயோ, விசிடிலயோ மட்டுமே படம் பார்க்குறாங்க.
எங்களால சினிமா பாக்காம இருக்கவும் முடியல; கொள்ளை விலை குடுத்து டிக்கெட்டு வாங்கவும் வக்கில்லை. டிக்கெட்டு விலை ஏன் இப்படி ஏறுது? அது குறைய நாங்க என்ன பண்ணணும்? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சும் சொல்லலேன்னா உன் தலை வெடிக்கும்'' என்றது வேதாளம்.
"நமக்காகப் பாடுபடுறவங்களை நடு ரோட்டுல நிறுத்தீட்டு, அடுத்த முதல்வரை தியேட்டர்ல அரை இருட்டுல தேர்வு பண்ணுனா தேசம் எப்படி உருப்படும்? நம்மளை முட்டாளாக்கற விஷயத்துக்காக மூணு மணி நேரத்தை ஒதுக்குறதே தப்பு; வாழ்க்கை முழுசையும் ஒதுக்குவோம்ன்னு இப்படி அடம்புடிச்சா என்ன பண்ணுறது?
உங்களால படம் பாக்காம இருக்க முடியாதுங்கற தைரியத்துலதான் டிக்கெட்டு விலைய ஏத்துறாங்க. சினிமா பாக்குறதை நிறுத்துனாலே டிக்கெட்டு விலை தன்னால குறையும்; அது நடக்கப் போறதில்லை; ஸோ, அடுத்த "ஆப்ஷனை'ப் பாப்போம். படத்துக்கு பட்ஜெட் அதிகமானா டிக்கெட் விலை உயரும்ங்கறங்க; "பட்ஜெட்' உயர, ஹீரோக்கள் சம்பளம்தான் காரணமாம். பல கோடி சம்பளம் வாங்குற உங்க ஹீரோக்கள் அதுல கொஞ்சம் குறைக்கத் தயாரா இல்லை; "பட்' மாசம் முச்சூடும் மாடா உழைச்சு 5,000 ரூபாய் சம்பாதிக்கறவன், ஆயிரத்தை சினிமா பாக்கக் குடுக்கணும்ன்னு சினிமாக்காறங்க எதிர்பார்க்கறாங்க.
உங்களோட "ஹீரோ வொர்ஷிப்'தான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். "ஹீரோ வொர்ஷிப்' குறையாம சம்பளம் குறையாது; சம்பளம் குறையாம பட்ஜெட் குறையாது; பட்ஜெட் குறையாம டிக்கெட் விலை குறையாது. பத்து வட்டிக்கு வாங்கி "கட்டவுட்' வெக்குறது; அதுக்கு பாலாபிஷேகம் பண்ணுறது; புடிச்ச ஹீரோவோட படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தா முக்தி கிடைச்சுரும்ன்னு நம்புறது; இதை எல்லாம் விடுங்க. டிக்கெட்டு விலை தானா குறையும்; அப்படியும் குறையுலேன்னா தியேட்டருக்கு போறதை விட்டுருங்க'', என்றான்.
விக்கியின் இந்த பதிலால் அவன் மவுனம் கலைந்தது வேதாளம் பறந்தது.

கருத்துகள் இல்லை: