திங்கள், 25 அக்டோபர், 2010

கலைஞரின் ‘தமிழகக்கீதம்’ பாடும் ஸ்ருதி

லகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான மைய நோக்கப் பாடலான ‘செம்மொழியான தமிழ் மொழியே’ பாடலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. தமிழின் புகழ் பாடிய அந்தப் பாடலை எழுதிய தமிழக முதல்வர் கலைஞர் மீண்டும் அதேபோன்ற ஒரு பாடலை எழுதியுள்ளார்.
 

இந்தப் பாடலை தமிழகத்தின் பழம்பெருமையான சிறப்புகளை எல்லாம் உலகிற்கு எடுத்துக்கூறும் வகையில் ‘தமிழ்நாட்டு மாநிலப் பண்’ணாக அமைத்துள்ளார் கலைஞர். இதையும் ஏ.ஆர். ரகுமானே இசையமைக்கவுள்ளார்.

இந்தப் பாடலின் சுவாரசியமான தகவல்,  பாடலை பாடவிருப்பவர் ஸ்ருதி ஹாசனாம். இந்தப் பாடலை ஸ்ருதி பாடினால் மிகவும் நன்றாக இருக்கும் என ‘தமிழகத் தரச் சான்று’ அளித்திருப்பவர் முதல்வர் கலைஞர்தான்.

“செம்மொழியான தமிழ் மொழியே” பாடல் ‘தீதும் நன்றும் பிறர்தர வாராதென்னும்’ என்று டி.எம்.சௌந்தராஜனின் தங்கக்குரலில் மென்மையாக தொடங்கி செம்மொழியே...ஏ... என ஸ்ருதியின் உச்சத் தொணியில் முடிந்திருக்கும்.  

அப்படியான ஸ்ருதியின் கம்பீரக் குரல் கலைஞரை கவர்ந்துவிட்டதாம்.  அதனாலதான் ‘இந்தப் பாடலை கமல் பொண்ணே பாடட்டும்’, என கூறிவிட்டாராம் கலைஞர்.

பிரபல அமெரிக்க வெர்லெட் ரிவால்வர் ராக் இசைக் குழுவில் பாடும் முதல் இந்தியப் பெண் என்றப் பெருமையை ஏற்கனவே பெற்றுள்ளார் ஸ்ருதி. இப்போது முதல்வர் கலைஞரின் பாராட்டுடன் கூடிய இந்தப் பாடல் அங்கிகாரம் அவருக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

விரைவில் ‘தமிழ்நாட்டு மாநிலப்பண்’ கலைஞரின் செந்தமிழ்க் கவிதையில், ரகுமானின் உலகைமயக்கும் இசையில், ஸ்ருதியின் கணீர் குரலில் எங்கும் ஒலிக்கப்போகிறது...

கருத்துகள் இல்லை: