நெருப்புக்கு வந்த மடல்:கொண்டாட்டம் திருவிழா – இதுவரை யாரும் சொல்ல மறந்த கதை!
அண்ணன் தம்பிக்கு இடையில் போட்டி ஏற்படுவது சகஜம் ஆனால் தம்பி கோபித்துக் கொண்டு செல்வதும் மீண்டும் வருவதும் வழமை தானே என்று ரி.வி.ஐ நிறுவனத்தை தம்பி என்று கூறிவருவதாக கடை உரிமையாளர்கள் எங்களிற்குத் தெரிவித்தனர். ரி.வி.ஐ நிறுவனம் 2000 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ரி.வி.ஐ நிறுவனவே நிதி, ஆலோசனை, முதலீடு மனிதவளம் என்பவற்றைப் போட்டு 2003ம் ஆண்டு சி.எம்.ஆர் நிறுவனத்தைத் தொடக்கியது. எனவே சி.எம்.ஆர் என்பது ரி.வி.ஐயின் நிறுவனம், ரி.வி.ஐ.யின் பிள்ளையே என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏன் இந்தப் போட்டி ஏற்பட்டது என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அண்ணன் தம்பிக் கதை கூறித் திரிபவர்கள் இதுவரையில் விடுதலைப் புலிகளின் தலைவரைப் பற்றி நக்கல் கதைத்துத் திரிந்தவர்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் உயிரோடு இல்லை. தப்பித் தவறி அவர் இருந்திருந்தாலும், இவங்கள் (உலகத்தமிழர்) செய்கிற கூத்தைப்பார்த்து நாலு, ஐந்து சயனைட்டை ஒரேயடியாக விழுங்கி எப்போதோ அவர் செத்திருப்பார் என்று எங்களிற்குக் கூறிய சி.எம்.ஆர் போலி நிறுவனர்கள் இன்று ரி.வி.ஐ நிறுவனத்தை விடுதலைப்புலிகளிற்கு எதிரான நிறுவனமாகச் சித்தரித்து உண்மைகளை மறைக்கப் பார்க்கிறார்கள்.
நாங்கள் இன்னமும் சகோதர நிறுவனங்கள் என்பதை விட சி.எம்.ஆர் எங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதனை மக்களின் முன் கொண்டு வருகிறோம்.
2003ம் ஆண்டு சி.எம்.ஆர் ஆரம்பிக்கப்பட்ட போது 21,000 கையெழுத்து மக்களிடம் இருந்து பெறப்பட்டது. 350க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ஆதரவுக் கடிதம் பெறப்பட்டது. 15க்கு மேற்பட்ட இனங்களிடமிருந்து கடிதம் பெறப்பட்டது. ஆரம்பிப்பதற்கான சகல செலவுகளும் ரி.வி.ஐ.யாலே செலவிடப்பட்டது. இதற்கான செலவு மாத்திரம் 8 லட்சம் டொலர்கள். பலரும் சி.எம்.ஆரிற்கு எதிராக செய்த முறைப்பாடுகளையடுத்து சி.எம்.ஆர் ஆரம்பிப்பதற்கு முன்னரே அதன் அனுமதி கனடிய அமைச்சரவையின் மீளாய்வுப் போனது. இதனை வெல்லவும் பெருந்தொகையான பணம் செலவளிக்கப்பட்டது. இவை எதுவுமே இப்போதைய பொறுப்பாளர் ஸ்ரான் அன்ரணிக்குத் தெரியாது.
ஆனால் 2006ம் ஆண்டு வன்னியின் உத்தரவின் பேரில் இங்கேயுள்ள நிறுவனத்தின் பொறுப்பாளரை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டபோது தற்போது சி.எம்.ஆருக்கு பொறுப்பாளராக உள்ள ஸ்ரான் அன்ரணியை அவரது அண்ணரான அமெரிக்காவிலிருந்த மாம்பழம் சாமி என அழைக்கப்படும் தேவதாசன் அன்ரணி வன்னிக்குப் பரிந்துரைத்தார். மாம்பழம் சாமி மரணமாகியபோது நாட்டுப்பற்றாளர் விருது கொடுக்கப்பட்டு புலிக் கொடி போர்க்கப்பட்டே கனடாவில் செத்தவீடு நடத்தியது அவர் எந்தளவு புலிகளிற்கு நெருக்கமானவர் என்பதைக் காட்டும்.
ஸ்ரான் அன்ரணயை உரிமையாளர் ஆக்குவதற்காக ஸ்ரானிற்கு 250,000 டொலர்களை உலகத்தமிழர் கொடுத்து சி.எம்.ஆரில் முதலீடு செய்வது போல போடப்பட்டு 10 மில்லியன் பெறுமதியான நிறுவனத்தின் பெரும்பகுதி சொத்துக்கள் ஸ்ரானின் பெயரிற்கு மாற்றப்பட்டு சட்டரீதியாக மாற்றப்பட்டு அவர் சி.எம்.ஆரின் உரிமையாளர் ஆக்கப்பட்டார். 2009ம் ஆண்டு மே மாதம் வரை பூனையாக இருந்த ஸ்ரான் புலிகளின் கதை முடிந்து விட்டது என்றவுடன் இது தனது சொத்து என இந்த பொது நிறுவனத்தைக் கையாடப் பார்க்கிறார். இவரை இவர் போகும் போக்கிற்கு எல்லாம் விட்டு வைத்த உலகத்தமிழர் இயக்கம் ரி.வி.ஐயுடன் இவர் நடத்திய விளையாட்டையடுத்து இவரைப் புரிந்து கொண்டது.
உலகத்தமிழர் இயக்கமும் இவரிடமிருந்து சொத்துக்களை பெறுவதற்கு பலமுறை முயன்றும் முடியாமல் போக இந்தப் பிரச்சினை கனடாவிற்கான தமிழ்த் தேசிய மக்களவையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஒப்படைத்தது. தமிழ்த் தேசிய சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தலைவரான ரோபொ ராம் இந்தச் சொத்துக்களை மீளப்பெற பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் போலிப் பொறுப்பாளரான ஸ்ரான் அன்ரணியும் அவரது முகாமையாளரான ராகவனும் இணக்கத்திற்கு வர மறுத்து புதிதாக சி.எம்.ஆர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொலைக்காட்சியையும் ஆரம்பித்துள்ளனர். புலிகள் இல்லையென்ற துணிவில் அப்பட்டமாக ஏமாற்றுகின்றனர்.
மக்களின் பணத்தில் மக்களிற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனமே சி.எம்.ஆர். இதனை ஆரம்பிப்பதற்காக முழுமூச்சாகச் செயற்பட்டது ரி.வி.ஐ. நாங்கள் ஆரம்பித்த போது அதில் இல்லாமல் இருந்தவரை மாம்பழம் சாமி சொன்னார் என்பதற்காக அவரது தம்பியைப் பொறுப்பாளராக நியமித்ததற்கான பலனை இன்று கனடாவிலுள்ள சகல தமிழ் மக்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களின் சொத்தை தனது என சூறையாட முயலும் ஸ்ரான் அன்ரணியை கனடாவிலுள்ள தமிழ் அமைப்புக்கள் விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால் இந்த விவகாரம் கனடாவின் நீதித் துறைக்கும் பாதுகாப்புத் துறைக்கும் செல்வது தான் இருக்கிற ஒரேயொரு வழி.
உலகத்தமிழர் கொடுத்த 250,000 டொலர்களை தனது முதலீடு போலப்போட்ட ஸ்ரான் பெறுகிற சம்பளம் வருடத்திற்கு 2 லட்சம். உலகத்திலேயே 250,000 டொலர்களைக் கொடுத்து ஒரு நிறுவனத்தின் அதிபராக சும்மா இருந்த ஒருவரை மாற்றி அதன்பலனாக இருந்த சொத்தையும் இழந்த ஒரு நிறுவனம் என்றால் அது உலகத்தமிழர் இயக்கமாகவே இருக்கும். ஆனால் இதனால் இப்போது பாதிக்கபபடுபவர்கள் இரண்டு நிறுவனங்களிலும் வேலை செய்யும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள். இவர்களின் வாழ்வு பாதிக்கப்படுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
கொண்டாட்டம் நிகழ்ச்சியை ஆரம்பித்தவர்களே ரி.வி.ஐ நிறுவனத்தினரே. இது ஸ்ரானைப் பொறுப்பாளராகப் போடுவதற்கு முதலே 2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அதனை இப்போது தங்கள் நிகழ்ச்சி போல நடத்த முற்படும் சி.எம்.ஆர் நிறுவனம் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். இல்லையே இந்த நிறுவன ஊழல்களை கவனத்திற்குக் கொண்டுவரும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை மக்கள் ஏற்பாடு செய்து சி.எம்.ஆரை மீண்டும் மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். இதற்காக வேண்டுமானால் நாங்கள் ஸ்ரான் அன்ரணியின் பேரால் போடப்பட்ட 250,000 டொலர்களையும் திருப்பிக் கொடுக்கவும் தயார்.
தமிழ்த் தேசியத்தியன் சொத்துக்களை தனிநபர்கள் கைப்பற்றுவதைத் தடுக்க மக்களே புறப்படுங்கள். இனிப் போராட்டம் என்பது எங்களின் பணத்தில் எங்களின் உழைப்பில் வாங்கிய சொத்துக்களை தனிநபர்கள் திருடிச் செல்வதைத் தடுப்பது தான்!! இதற்கு ஏனைய வானொலிகள், தொலைக்காட்சிகள், ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும். தயவு செய்து உங்களின் ஆதரவைத் தாருங்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக