minnambalam.com - Pandeeswari Gurusamy : காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரிஜினல் பராசக்தி திரைப்படத்திற்கு 130 கட் கொடுக்கப்பட்டதாக ஜனநாயகன் பட விவகாரம் குறித்த ராகுலின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்தார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “தாமரை கோலத் திருவிழா” என்ற பெயரில் கோலப் போட்டிகள் நடைபெற்றது. இதைப் பார்வையிட்ட பா.ஜ.க. தேசிய மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஜனநாயகன் படத்தில் பிரதமர் தலையீடு இருப்பதாக ராகுல் காந்தி இன்று குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரிஜினல் பராசக்தி திரைப்படம் வந்தது. கலைஞர் வசனத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்திற்கு இரண்டு நாட்கள் மவுண்ட் ரோட்டில் உள்ள திரையரங்கில் சென்சார் செய்து 130 கட் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட பாரம்பரியத்தை வைத்திருக்கும் ராகுல் காந்தி, எமர்ஜென்சியைக் கொண்டு வந்து குரல் வளையை நெறித்த கட்சியின் ராகுல் காந்தி, ஜனநாயகன் படத்தைப் பேசுகிறார்.
ஜனநாயகன் படத்திற்கு கட் கொடுக்கப்பட்டிருக்கிறது; இது நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது எனத் தெரிந்தும், வேண்டுமென்றே ஏதாவது ஒரு வழியில் பா.ஜ.க.-வைக் குறை சொல்ல வேண்டும் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி இன்று காலை தனது எக்ஸ் பதிவில், “ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுப்பதற்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலாகும். மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக