புதன், 14 ஜனவரி, 2026

ரூட் எடுக்க முடியாமல் திணறும் தமிழ்நாடு காங்கிரஸ்! அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா?

 tamil.oneindia.com  - Rajkumar R :  சென்னை: தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. 
நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இடம்பெற்று வந்தாலும், அதிகாரத்தில் நேரடி பங்கு கிடைக்காத நிலை காங்கிரஸ் தலைமைக்கும், தமிழகத் தலைவர்களுக்கும் உள்ளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்தச் சூழலில்தான் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முன்வைக்கும் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற அரசியல் வாக்குறுதி, காங்கிரஸை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என தொடர்ந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைத்திருந்தாலும், தற்போது அந்த உறவில் விரிசல் தென்படத் தொடங்கியுள்ளது. திமுக அதிக தொகுதிகளையும், ஆட்சியில் முக்கிய இடத்தையும் வழங்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.



இதனால் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிட்டு ஆட்சியில் பங்கேற்கலாம் என்ற கணக்கே காங்கிரஸ் கட்சியின் எண்ணமாக உள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமான சில தலைவர்கள், இந்த சட்டப்பேரவைத் தேர்தலை பயன்படுத்தி காங்கிரஸை தமிழகத்தில் மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் அல்லது தவெகவுடன் 75 தொகுதிகள் கிடைத்தால், தற்போதைய நிலையை விட அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என்றும், குறைந்தது 10 சதவீத வாக்கு வங்கியை நிரூபிக்க முடியும் என்றும் காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இதன்மூலம் 2029 மக்களவைத் தேர்தலில், தற்போது உள்ள 10 எம்.பி.க்கள் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தலாம் என்பதே அவர்களின் அரசியல் கணக்கு. ஆனால் இதற்கு எதிராக, ப.சிதம்பரம், சு.திருநாவுக்கரசர், கு.செல்வப்பெருந்தகை போன்ற மூத்த தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதே பாதுகாப்பானது என்றும், அதுவே வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read
திமுக ஐந்தாண்டு திராவிடமாடல் ஆட்சியில் விளைநிலங்கள் செழித்து..அன்புமணிக்கு அமைச்சர் எம்ஆர்கேபி பதில்
திமுக காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் வெற்றி பெறுவது கடினம் என்பதும் கடந்த தேர்தல் அனுபவங்களில் தெளிவாகியுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற அனுபவம் காங்கிரஸுக்கு உள்ளது. அதே நேரத்தில், திமுகவுடன் இணைந்த போது வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்ததும் உண்மை. இருப்பினும், திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டு, வெற்றி வாய்ப்புக் குறைந்த இடங்களை காங்கிரஸுக்கு வழங்குகிறது என்ற மனக்குறை காங்கிரஸ் தரப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகள் வழங்கப்பட்டு அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றாலும், வரும் தேர்தலில் அந்த எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்ற அச்சம் காங்கிரஸுக்கு உள்ளது. கூடுதல் கட்சிகள் கூட்டணியில் சேரும் பட்சத்தில், தங்களுக்கான இடங்கள் மேலும் குறையலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அதனால்தான் அமைச்சரவையில் பங்கு கிடைத்தால்தான் கட்சியினரை திருப்திப்படுத்த முடியும் என்ற எண்ணம் காங்கிரஸில் வலுப்பெற்றுள்ளது.
தவெக காங்கிரஸ் கூட்டணி

மற்றொரு புறம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொகுதிகளில் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் திமுக தரப்பில் உள்ளது. இதனால் கூட்டணிக்குள் உரசல் ஏற்பட்டாலும், காங்கிரஸை முற்றிலும் கைவிடும் எண்ணம் திமுக தலைமையிடம் இல்லை. தொடர்ந்து டெல்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், கேரள காங்கிரஸ் தலைமை, தமிழகத்தில் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறது.
நடிகர் விஜய்

நடிகர் விஜய்க்கு கேரளத்தில் உள்ள ரசிகர் ஆதரவும், எல்லைப் பகுதிகளில் அது தேர்தல் பலனளிக்கும் என்ற நம்பிக்கையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. கேரளத்தில் இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸுக்கு இருப்பதால், அந்த கோணத்திலும் தமிழக அரசியல் பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் கணக்குகளுக்கிடையே, நடிகர் விஜய்யும் தனித்து அரசியல் பயணம் செய்வது கடினம் என்பதை படிப்படியாக உணரத் தொடங்கியுள்ளார்.
ராகுல் காந்தி - விஜய்

அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகள் அவருக்கு தற்போது சாத்தியமில்லாத நிலையில், திமுகவுடன் இணைவதும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்தச் சூழலில், காங்கிரஸ் ஆதரவே விஜய்க்கு எஞ்சியிருக்கும் ஒரே அரசியல் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் சமீபத்திய ஆதரவு, காங்கிரஸ் - தவெக உறவுக்கு ஒரு தொடக்கமாக அமையுமா, அல்லது விஜய் தனித்துப் போட்டியிட்டு 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வாரா என்பதே இப்போது தமிழக அரசியல் களத்தில் நிலவும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை: