ஞாயிறு, 11 ஜனவரி, 2026

பராசக்தி தினமணி விமர்சனம்! தீ பரவியதா?

தினமணி : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதை நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்) ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒரு மாணவர் படையையே வழிநடத்துகிறார். அம்மாணவர்கள் வேறுவேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், இவர்களின் போராட்டங்கள் பேசப்படுகிறது. அப்படியான சூழலில், மாணவர் சேனையை வழிநடுத்தும் செழியனுக்கு ஒரு இழப்பு ஏற்பட, அக்குழு சத்தமில்லாமல் கலைகிறது.



தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து கல்லூரி மாணவரான செழியனின் தம்பி சின்னத்துரை (அதர்வா) ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல்கொடுத்து அவர் ஒரு குழுவை வழிநடத்துகிறார். இந்த எதிர்ப்பெல்லாம் வேண்டாம் என ஒதுங்கியிருக்கும் செழியன் தம்பியின் செயலைக் கண்டிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் என்னென்ன நடக்கிறது என்பதே பராசக்தியின் கதை.

இயக்குநர் சுதா கொங்கரா தமிழகத்தில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தைத் திரைப்படமாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானபோதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காரணம், இன்றுவரை அந்நிகழ்வுகள் அனைத்தும் மொழிப்போராகவே பார்க்கப்படும் வேளையில் முக்கியமான வரலாற்று சம்பவத்தை எப்படி எடுக்கப்போகிறார்கள்? எடுத்தாலும் இன்றைய அரசியல் சூழலில் முறையாகத் திரைக்கு வருமா? என்றெல்லாம் பல கேள்விகள் படத்தைச் சூழந்து சுழன்றுகொண்டே இருந்தன. அக்கேள்விகளுக்கு, “மொழி என்பது வெறும் பேசுவதற்கான விஷயம் மட்டுமல்ல, அது பல உரிமைகளைச் சுமந்திருக்கிறது” என்கிற பதிலை வலுவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

சுதா கொங்கராவின் பிற படங்களை ஒப்பிட கருத்தியல் ரீதியாக அழுத்தமான விஷயத்தைத் தொட்டிருக்கிறார். மணிரத்னத்தின் உதவியாளராக இருந்ததால் ஆயுத எழுத்து போல மாணவர்களின் எழுச்சியைப் பேசும் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். அப்படி, இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கையிலெடுத்தவர் அதனை வீணடிக்கவில்லை. 1965-ல் பொள்ளாச்சியில் மொழித்திணிப்புக்கு எதிராக போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆவணமாக்கியது முக்கியமானது.

அன்றைய காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும் மக்களை வதைத்துக்கொண்டிருந்த சூழலில் ஹிந்தி மொழித் திணிப்பு எவ்வளவு கொந்தளிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை பராசக்தியின் சில காட்சிகள் உணர்வுப்பூர்வமாக கடத்துகின்றன. 

கருத்துகள் இல்லை: