tamil.goodreturns.in : பெங்களூரு: துபாயில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் எப்படி அவர் இந்த வழக்கில் சிக்கினார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் ரன்யா ராவ். 32 வயதான இவர் கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள். கன்னடம் ,தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் ரன்யா ராவ் நடித்துள்ளார். தமிழில் இவர் வாகா என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த போது 14.8 கிலோ தங்க நகையை மறைத்து எடுத்து வந்து வருவாய் புலனாய்வு இயக்குனர் அதிகாரிகள் சோதனையில் சிக்கினார். இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மார்ச் 18 ஆம் தேதி வரை காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த பிரத்யேக தகவலின் பேரில் தான் மார்ச் 3ஆம் தேதி வருகை தந்த பயணிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அப்பொழுதுதான் 14.8 கிலோகிராம் தங்க நகையை ரன்யா ராவ் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 12.56 கோடி ரூபாயாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெங்களூருவில் இருக்கும் ரன்யா ராவின் வீட்டில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 2..6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் 2.67 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இவரிடமிருந்து 17.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அங்கு அமைக்கப்பட்ட தங்க கடத்தல் நெட்வொர்க்குடன் இணைந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும் இவர் நான்கு முறை துபாய்க்கு சென்று வந்திருக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் 30 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். இது தான் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் சந்தேகத்தை வலுப்படுத்தி இருக்கிறது. எனவே தான் விமான நிலையத்திலேயே வைத்து அவரிடம் சோதனை நடத்தினர். மேலும் அவர் எப்பொழுதெல்லாம் துபாய்க்கு பயணம் செய்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஒரே ஆடையை அணிந்து சென்று வந்திருக்கிறார். விமான நிலையத்தில் அவர் விஜபிக்கள் செல்லும் வழியாக வெளியே சென்றிருக்கிறார்.
தன்னுடைய தந்தை காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதால் அதனை பயன்படுத்தி அவர் விமான நிலையத்தில் பரிசோதனைகளில் இருந்து தப்பி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது அவரிடம் தீவிரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தனியாக செயல்பட்டாரா அல்லது இது ஒரு இந்தியா மற்றும் துபாயில் இயங்கக்கூடிய மிகப்பெரிய நெட்வொர்க்கா என தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன .
அவர் ஒவ்வொரு முறை துபாய்க்கு சென்று வரும்போதும் தன்னுடைய பெல்ட் மற்றும் உடைகளில் தங்கம் கடத்தி வந்ததாக தெரிகிறது. இவர் கடத்தி வந்த ஒவ்வொரு கிலோ தங்கத்துக்கும் 1 லட்சம் ரூபாய் ரொக்கம் என ஒவ்வொரு முறை துபாயில் இருந்து வரும் போதும் தங்கம் கடத்தி வந்து 12-13 லட்சம் வரை வருமானம் பார்த்ததாக தெரிகிறது.. விமான நிலைய சோதனைகளில் இருந்து தப்பிக்க உதவும் வகையில் ஆடையை வடிவமைத்து பயன்படுத்தியுள்ளார். இதனால் தான் ஒவ்வொரு முறையும் ஒரே ஆடையில் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே ரன்யா ராவின் தந்தை டிஜிபி ராமச்சந்திரன் தனக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். தன்னுடைய வளர்ப்பு மகளுக்கும் தனக்கும் இடையே நான்கு மாதங்களாக எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என்றும் திருமணம் நடந்த பிறகு அவர் தங்களுடன் பேசுவதையே விட்டு விட்டார் என்றும் கூறியுள்ளார். இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் அரசியல் வாதிகள், காவல்துறையினர் என பலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Story Written: Devika
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக