வியாழன், 6 மார்ச், 2025

பாடகி கல்பனா குணமடைகிறார் “தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை..தூக்கம் வராததால் அதிக மாத்திரை எடுத்தேன்”..

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  : ஹைதராபாத்: தூக்கம் சரியாக வராததால் தான் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல பின்னணிப் பாடகி கல்பனா, போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் வீட்டின் உள்ளே இருந்து யாரும் கதவைத் திறக்கவில்லை.



இதையடுத்து, பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினர் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது சுயநினைவற்ற நிலையில் அவர் இருப்பதைக் கண்டனர். போலீசார் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி உள்ளதாகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகி கல்பனா அதிகளவிலான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டது ஏன் என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை முயற்சி தொடர்பாக போலீசார், பாடகி கல்பனாவிடம் விசாரித்தனர். அப்போது, சரியாக தூக்கம் வராத காரணத்தால் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். முதலில் 8 எட்டு மாத்திரைகளை எடுத்தும் தூக்கம் வராததால் அதிக மாத்திரைகளை எடுத்தேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கல்பனா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாடகி கல்பனாவின் மகள் அளித்துள்ள பேட்டியில், "அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய தாய் தந்தை இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். மன அழுத்தம் காரணம் அம்மா, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரை ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை.

Also Read
ஆபத்தான கட்டத்தை தாண்டிய பின்னணி பாடகி கல்பனா.. வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

மற்றபடி எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, என் அம்மா, நான் மற்றும் என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள், அது சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார்" எனக் கூறி உள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர். இவருடைய தந்தை டிஎஸ் ராகவேந்தர் நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர். கல்பனாவின் அம்மா சுலோச்சனாவும் பின்னணி பாடகர். பாடகி கல்பனா 1500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.

கருத்துகள் இல்லை: