புதன், 24 ஏப்ரல், 2024

ஸ்டாலின் “சூறாவளி”.. வட இந்திய மாநிலங்களில் ரெடி ஆகிறது dmk ஷெட்யூல்! பலே பிளான்!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  மீண்டும் ஸ்டாலின் “சூறாவளி”.. வடக்கிலும் கால் பதிக்கும் திமுக.. ரெடி ஆகிறது ஷெட்யூல்! பலே பிளான்!
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


Stalin plans to campaign in north india in support of India bloc candidates

சூறாவளியாக சுழன்ற ஸ்டாலின்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே, தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், தினந்தோறும் 2 லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். காலையில் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிப்பது, மாலையில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஓட்டு சேகரிப்பது என தேர்தல் முடியும் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வரை 20 பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார். தேர்தல் தமிழ்நாட்டில் நிறைவடைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பல தரப்பினரிடமும் பேசி வருகிறார் ஸ்டாலின்.

உற்சாகத்தில் ஸ்டாலின்: நடந்து முடிந்துள்ள தேர்தல் தொடர்பாக, பல்வேறு ரிப்போர்ட்களையும் பெற்றுள்ளாராம் ஸ்டாலின். எங்கெல்லாம் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும், எங்கெல்லாம் இழுபறி சூழல் இருக்கும் என்பதை கேட்டறிந்து வருகிறாராம். இந்த ரிப்போர்ட்களை பொறுத்தவரை, திமுக கூட்டணி 40க்கு 40 எனச் சொல்வதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

இந்நிலையில், அடுத்தகட்டமாக, இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த பிரச்சார பயணத்திற்கான தேதிகள், இடங்கள் என ஷெட்யூல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கசிந்த விஷயம்: முதல்வர் ஸ்டாலினை, திமுக நிர்வாகிகள் பலர் சந்தித்துப் பேசி வரும் நிலையில், வட மாநிலங்களுக்கும் தான் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள தகவலை அவர் அவர்களிடம் பகிர்ந்துள்ளாராம். அப்படியாக, இந்த விஷயம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவியுள்ளது.

ஒரு கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் 89 லோக்சபா தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. அடுத்ததாக மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடையும்.

மூன்றாம் கட்ட தேர்தலில் கர்நாடகா, மாகாராஷ்டிரா மாநிலங்களிலும், நான்காம் கட்டத் தேர்தலில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும், ஐந்தாம் கட்டத்தில் மீண்டும் மகாராஷ்டிரா, ஆறாம் கட்டத்தில் டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் தான் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் திமுகவுக்கு முக்கிய இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதற்காக வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக வரும் தகவல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை: