மின்னம்பலம் - indhu : அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? என பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 23) உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
சென்னையில் சில நாட்களுக்கு முன் ஓடும் பேருந்தில் ஒரு பள்ளி மாணவன், ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி, ஸ்கேட்டிங் செய்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, ஆபத்தான முறையில் பயணம் செய்த அந்த மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞர்களின் நலன் கருதி தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து கடந்த 2013ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்தது. பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் மீண்டும் இன்று (ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை.
ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள். பல இடங்களில், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி தமிழகத்தில் பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது.? என்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக