வெள்ளி, 26 ஏப்ரல், 2024

மோடிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? – ஸ்டாலின் கணிப்பு! (100 to 150)

 மின்னம்பலம் Aara தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையோடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த க்ரூப் போட்டோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள்.



அதேபோல திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளும் முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து நன்றி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 25) காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டில் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகிய 10 பேரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார்கள்.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செல்வப் பெருந்தகையை சந்தித்து, தேர்தலை சந்தித்த அனுபவம் பற்றியும் வாக்குப்பதிவு சதவீதம் பற்றியும் ஆலோசித்தனர்.

இதன் பிறகு அனைவரும் சேர்ந்து அறிவாலயத்துக்கு புறப்பட்டனர். அறிவாலயத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் வேட்பாளர்கள் தனது அறைக்குள் வந்ததுமே, ’வாங்க… வாங்க… வெற்றியாளர்களே’ என்று தான் சொல்லி ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.

’இந்தியாவே ரொம்ப சூடா இருக்கு, அதனால காபி டீ வேணாம் கூல்டிரிங்ஸ் சாப்பிடுங்க’ என்று முதலமைச்சரே சொல்லி பழச்சாறு அளித்திருக்கிறார்.

இதன் பிறகு செல்வப் பெருந்தகை மக்களவைத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்த உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அடிப்படை ஆயத்த செலவுகளை கூட செய்ய தயங்குகிறார்கள் என்று திமுக தலைமைக்கு அந்தந்த தொகுதிகளில் இருக்கும் திமுக நிர்வாகிகளிடம் இருந்து புகார்கள் வந்தன.

இதை ஒட்டி ’பென்’ அமைப்பு சார்பில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்த ரிப்போர்ட் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட நிலையில், ’திமுக கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் நமது வேட்பாளர்கள்தான். எனவே செலவு செய்வதற்கு அவர்களால் இயலவில்லை என்றால் நாமே செலவு செய்ய வேண்டும்’ என்று மாவட்ட செயலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டார் ஸ்டாலின்.

இதை சுட்டிக் காட்டும் வகையில்தான், எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்த உங்களுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை.

பரஸ்பர நலன் விசாரிப்புகளுக்கு பிறகு இந்திய அரசியல் சூழ்நிலை பற்றியும் மோடியின் தற்போதைய வெறுப்பு பிரச்சாரம் பற்றியும் ஸ்டாலின் செல்வப் பெருந்தகையிடம் பேசி இருக்கிறார்.

’மோடி பிஜேபிக்காக பிரச்சாரம் பண்ணலை, இந்தியா கூட்டணிக்காக பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கார். ஒன்னும் கவலை வேண்டாம் தமிழ்நாடு மாதிரியே பிற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி தான் ஜெயிக்கும். அப்படித்தான் எனக்கு ரிப்போர்ட் வந்துட்டு இருக்கு’ என்று முதலமைச்சர் தெரிவிக்க…

’முதலில் நானூறு சீட்டுகள் ஜெயிப்போம் என்றார்கள். இப்போது கிடைக்கிற தகவல்களை எல்லாம் வைத்து பார்த்தால் பாஜக கூட்டணி 100 லிருந்து 150 இடம் கூட வெற்றி பெற மாட்டார்கள் போலிருக்கிறது’ என்று சொல்ல… ‘தினமும் வெளி மாநிலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி விசாரித்து கொண்டிருக்கிறேன். 100 இல் இருந்து 150 தான் மோடி வருவார். இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும்’ என்று கூறி இருக்கிறார் ஸ்டாலின்.

இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட இன்னொரு முக்கியமான விஷயம்… ஸ்டாலின் தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வது பற்றி தான்.

ஏற்கனவே கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய முடியுமா என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கேரளாவில் முக்கியமான எதிரிகளாக நேருக்கு நேராக மோதிக் கொண்டிருக்கிறார்கள் .

அதுமட்டுமல்ல கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட நண்பராகவும் இருக்கிறார். இந்த சூழ்நிலைகளை வைத்து கேரளாவில் பிரச்சாரம் செய்ய தவிர்த்தார் ஸ்டாலின். கர்நாடகாவில் மேகதாது விவகாரத்தால் பரப்புரை செய்வது பற்றி யோசித்தார்.

ஆனால், அடுத்தடுத்த கட்ட தேர்தல்களில் தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது பற்றி இன்று செல்வப் பெருந்தகை ஸ்டாலினிடம் விவாதித்துள்ளார். அதற்கு ஸ்டாலினும் நல்ல பதிலை அளித்துள்ளார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: