மின்னம்பலம் - Aara :அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன், இபிஎஸ் – ஓபிஎஸ், ஓபிஎஸ் என்று தொடர்ந்து முகாம் மாறிய பெங்களூரு புகழேந்தி விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இதன் மூலம் சசிகலாவிடமும் ஜெயலலிதாவிடம் நல்ல நெருக்கத்தை பெற்றிருந்தார்.
ஜெயலலிதா காலமான பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்படத் தொடங்கினார் புகழேந்தி. சசிகலா சிறை சென்றதும் டிடிவி தினகரனுடன் இருந்தார். ஒரு கட்டத்தில் தினகரனிடம் இருந்து வெளியேறி ஓபிஎஸ் – இபிஎஸ் அணியில் இணைந்தார். பாமக குறித்து கடுமையாக பேசியதற்காக அதிமுகவில் இருந்து புகழேந்தியை நீக்கினார் எடப்பாடி. கடைசியாக ஓபிஎஸ்சுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார்.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில் வேட்பு மனு பரிசீலனை நாள் வரை ராமநாதபுரத்தில் இருந்த பெங்களூரு புகழேந்தி, அதன் பின் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஒரு முறை கூட பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. ஓ. பன்னீரும் அவரை அழைக்கவில்லை என்கிறார்கள்.
தேர்தல் பரப்புரை கால கட்டங்களில் தேனி திமுக வேட்பாளரும் புகழேந்தியின் பழைய நண்பருமான தங்க தமிழ்செல்வன், ‘அண்ணே… அதிமுகவுல எல்லாருக்காகவும் உழைச்சீங்க. ஆனா உங்களுக்கு உரிய உயரம் கெடக்கலை. திமுகவுக்கு வாங்க… தேனியில எனக்காக பிரச்சாரம் பண்ணுங்க. உங்களை நான் பாத்துக்குறேன்’ என்று உரிமையோடு அழைத்திருக்கிறார். தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்ட நிலையில், அவருக்கு எதிராகவும், தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய அழைப்பு வந்தபோதும் யோசித்திருக்கிறார் புகழேந்தி.
ஏப்ரல் 19 ஆம் தேதி கிருஷ்ணகிரி தொகுதி ஓசூரில் வாக்களித்த புகழேந்தி அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“இந்தியா என்கின்ற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இந்த நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற திராவிட இயக்கத் தலைவர்களின் வழியில் மதச் சார்பற்ற ஜனநாயகத்தை எப்போதும் போல தழைக்கச் செய்ய இன்று வாக்களித்துள்ளேன்” என்று பேட்டியளித்தார்.
இது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் சின் தீவிர ஆதரவாளராக இப்போது வரை அறியப்படும் புகழேந்தி பாஜகவுக்கு எதிராக வாக்கு செலுத்தியதை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் தங்க தமிழ்செல்வன் மூலமாக விரைவில் புகழேந்தி திமுகவில் இணையலாம் என்ற தகவல்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மத்தியில் விவாதமாகியிருக்கிறது.
புகழேந்தியிடம் அவரது நெருக்கமான நண்பர்கள் சிலர் இதுகுறித்து கேட்டபோது, ‘கூப்பிடுறாங்க. ஆனா இவ்வளவு பெரிய அம்மா மோதிரத்தை எப்படி கழற்றிப் போடுறது’ என்று பதிலளித்திருக்கிறார் புகழேந்தி.
ஆயினும் ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஜெயலலிதா புகழ் பாடிய பலர் திமுகவில் இணைந்த வரிசையில்… புகழேந்தியையும் விரைவில் திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் தங்க தமிழ் செல்வன் என்கிறார்கள்.
–வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக