செவ்வாய், 23 ஏப்ரல், 2024

திமுகவின் மத்திய அமைச்சர்கள் யார் யார்? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!

7 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

 மின்னம்பலம் - Aara :   அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை கூட்டணிக் கட்சியினர், திமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் சந்தித்த படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அதன் பிறகு திமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து கடுமையான தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்தார்கள்.


அதேபோல திமுகவின் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்களும் முதலமைச்சரை சந்தித்து தங்களது தொகுதியில் வாக்குப்பதிவு பற்றிய விஷயங்களை தெரிவித்துள்ளார்கள்.

கட்சி நிர்வாகிகளையும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் நடந்த வாக்குப்பதிவு குறித்து தனக்கு வந்த ரிப்போர்ட்டுகளை ஆராய்ந்திக்கிறார்.

அதில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று நம்பகமான தகவல்கள் கிடைக்க உற்சாகமாகியிருக்கிறார் ஸ்டாலின்.

அதேபோல இங்கே தமிழ்நாடு மட்டுமல்லாமல் முதல் கட்ட தேர்தல் நடந்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்தியா கூட்டணிக்கே வெற்றி முகம் என்று ஸ்டாலினுக்கு தகவல்கள் வந்துள்ளன. இந்த அடிப்படையில் மேலும் உற்சாகமானார்.

தன்னை சந்தித்த அமைச்சர்களிடமும் மாவட்ட செயலாளர்களிடமும் வெற்றி பெற்று விடுவோமா என்று கேட்காமல், வித்தியாசம் எவ்வளவு வரும் என்றுதான் முதல் கேள்வியாக கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஸ்வீப் செய்யும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின்.

இன்று ஏப்ரல் 23ஆம் தேதி தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தர்மபுரி மாவட்ட செயலாளர்களான பழனியப்பன், சுப்பிரமணியன், வேட்பாளர் மணி உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்தார்கள்.

அப்போது ஏற்கனவே தன்னை சந்தித்த நிர்வாகிகளிடம் கேட்டது போலவே நமது வெற்றி வித்தியாசம் எவ்வளவு என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு வேட்பாளர் மணி, ’ஒன்னரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்போம் தலைவரே’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்புகளுக்கு இடையே கடந்த ஓரிரு நாட்களாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது மாப்பிள்ளை சபரீசன் உடன் ஒரு முக்கியமான ஆலோசனையை நடத்தி இருக்கிறார். அதாவது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது தான் முதலமைச்சருக்கு கிடைத்திருக்கிற ரிப்போர்ட்.

தனது வெளி மாநில சோர்ஸுகள் மூலமும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார் சபரீசன். அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், அதனால்தான் மோடி இந்து-முஸ்லிம் என வெளிப்படையாக பிரச்சாரக் கூட்டத்தில் பேசத் துணிந்துவிட்டதாகவும் ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றுள்ளன.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று அடுத்த மத்திய அரசை அமைக்கும் என்ற வலிமையான நம்பிக்கை கொண்டுள்ள ஸ்டாலின், அமையப் போகும் புதிய அரசில் திமுக சார்பில் இடம்பெறக்கூடிய மத்திய கேபினட் அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் யார் யார் என்ற ஆலோசனையைதான் சபரீசனுடன் மேற்கொண்டிருக்கிறார்.  அந்த அமைச்சரவையில் இளைஞரணியின் பிரநிதித்துவமும் இருக்க வேண்டும் என்பது வரை அந்த ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது.

மத்தியில் திமுக பங்கேற்கும் புதிய அரசு அமையும் அதே நேரம் இங்கே தமிழ்நாட்டில் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவது பற்றியும் முடிவெடுக்கப்படும் என்கிறார்கள் திமுக தலைமையில் நடப்பதை அறிந்த கட்சியின் சீனியர்கள்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: