செவ்வாய், 23 ஏப்ரல், 2024

சூரத்தில் நடந்தது பேரமா? போட்டியில்லாமல் பாஜக வென்றது எப்படி?

minnambalam.com - vivekanandhan : குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை அடுத்த இரண்டாவது மிகப் பெரிய மாநகரம் சூரத் ஆகும்.
அப்படிப்பட்ட முக்கியமான சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
 இது நாடு முழுக்க பரபரப்பான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரை வேட்பாளராக முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் குளறுபடி இருக்கிறது என்று சொல்லி தேர்தல் அலுவலர் அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்தார்.
நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிந்துள்ள  மூன்று பேரும் மனு பரிசீலனையின்போது, நாங்கள் இந்த கையெழுத்தை போடவில்லை என்று மறுத்துவிட்டதாகச் சொல்லி தேர்தல் அலுவலர்  வேட்புமனுவை ரத்து  செய்திருக்கிறார்.

நிலேஷ் கும்பானி தனது வேட்புமனுவில் தன்னை முன்மொழிபவர்களாக குறிப்பிட்ட அந்த மூவருமே அவருடைய நெருங்கிய உறவினர்கள் தான். வேட்புமனு ரத்து செய்யப்பட்டது குறித்து சூரத்தில் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியதற்கு, ”என்னை முன்மொழிந்த மூவருமே எனது உறவினர்கள் தான். அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறேன். மேலும் நேரில் சென்று பார்ப்பதற்கும் ஆட்களை அனுப்பியுள்ளேன். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று அவர்களை தலைமறைவாகி இருக்க வேண்டும் அல்லது கடத்தப்பட்டிருக்க வேண்டும்” என்று நிலேஷ் கும்பானி கூறினார்.

வேட்பாளரை முன்மொழிவதற்கு கட்சியிலிருந்து ஏன் ஆட்களை தயார் செய்யவில்லை என்ற கேள்விக்கு சூரத் காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் வாய் திறக்காமல் மவுனம் காக்கிறார்கள்.

இதுபோல எதிர்பாராமல் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், கட்சி சார்பில் அடுத்து இன்னொருவரை நிறுத்துவதற்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் மாற்று வேட்பாளரும் மனு தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுரேஷ் பாத்சாலாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 8 இதர வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதன் காரணமாக பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக சூரத் தொகுதியில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் நாட்டில் முதல் தாமரை மலர்ந்துவிட்டதாக பாஜக கொண்டாடி வருகிறது. எதிர்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி சூரத் தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறது.

ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி போட்டியிலிருந்து விலகுவதற்கு பாஜகவுடன் ஒரு மறைமுக ஒப்பந்தம் போட்டுவிட்டார் என்று சூரத்தின் அரசியல் வட்டாரங்களில் சொல்கிறார்கள். இதனை தி இந்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

மேலும் மற்ற வேட்பாளர்களைப் பொறுத்தவரை வேட்புமனுவை திரும்பப் பெற வெளிப்படையாகவே கட்டாயப்படுத்தப்பட்டார்கள், இதுதவிர பணமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

தற்போது நிலேஷ் கும்பானியை ஊடகங்கள் மட்டுமல்ல காங்கிரஸ் தலைவர்களுமே தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர் காங்கிரசில் யாருடனும் தொடர்பில் வரவில்லை. மேலும் நிலேஷ் கும்பானி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. பூட்டப்பட்ட அவரது வீட்டின் முன்பு,  துரோகி என்று பதாகையை கையில் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

யார் இந்த நிலேஷ் கும்பானி?

குஜராத்தில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் லேண்ட் புரோக்கரேஜ் தொழில் செய்து வருபவர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலேஷ் கும்பானி. இவர் குஜராத்தின் நில உடைமை சமூகமான பட்டிடார் சமூகத்தைச் சேர்ந்தவர். குஜராத்தின் அரசியலை நீண்ட காலம் கட்டுப்படுத்திய உயர் சாதிகளில் பட்டிடார் சமூகமும் ஒன்று. பட்டிடார் சமூகத்தினருக்கு கல்வியிலும் அரசு வேலையிலும் OBC பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கேட்டு ஹர்திக் படேல் போராடிய போது அவருடன் இருந்தவர் இந்த நிலேஷ் கும்பானி.

2015 இல் இந்த போராட்டம் தொடங்கிய போது சூரத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மிகப் பெரிய பேரணியை பட்டிடார் சமூகத்தினர் நடத்திய போது, அந்த பேரணியை ஒருங்கிணைத்ததில் ஒருவராக நிலேஷ் கும்பானி பார்க்கப்பட்டார்.

அதே ஆண்டு நடைபெற்ற சூரத் மாநகராட்சி தேர்தலில் பட்டிடார் இடஒதுக்கீடு போராட்ட அமைப்பினர் காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, பல வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தினர். அப்போது வெற்றி பெற்றவர்களில் நிலேஷ் கும்பானியும் ஒருவர். அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசில் தனக்கு ஒரு சீட்டு வாங்கும்படி ஹர்திக் படேலை நிர்பந்தித்தார் நிலேஷ். ஆனால் காங்கிரஸ் அதற்கு தயாராக இல்லை.

சூரத்தில் நடந்த அடுத்த மாநகராட்சி தேர்தலில் நிலேஷ் கும்பானி தோல்வி அடைந்தார். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு பட்டிடார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக வார்டு உறுப்பினராக இருந்த நிலேஷ் கும்பானிக்கு எம்.பி சீட்டு கொடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

இப்போது  அவரது வேட்பு மனு, அவரது மாற்று வேட்பாளரான  நிலேஷின் நெருங்கிய உறவினர் சுரேஷ் இரண்டு வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இப்போது நிலேஷ், சுரேஷ் இருவருமே காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இருந்து தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டனர்.

டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி,

“காங்கிரஸ் வேட்பாளர்களை முன்மொழிந்த 4 பேரும் ஒரே நேரத்தில் ஒரே குரலாக இது எங்கள் கையெழுத்து இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இது இயல்பாக நடந்தது இல்லை. நிலேஷ் கும்பானி பல மணி நேரங்களுக்கு காணாமல் போய்விட்டார். அவர் வெளியே வரும்போது மற்ற வேட்பாளர்கள் எல்லோரும் போட்டியிலிருந்து விலகிவிட்டனர்”  என்று கூறியுள்ளார்.

சூரத் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நைஷாத் தேசாய் இன்னமும்  நிலேஷ் கும்பானி மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.

“நிலேஷ் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரியின் முடிவுக்கு எதிரான மனுவை வரும் நாட்களில் தாக்கல் செய்வார். ஒருவேளை நிலேஷ் கும்பானி அப்படி செய்யவில்லை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் நைஷாத்.

நிலேஷ் கும்பானி, சுரேஷ் பாத்சாலா இருவரும் காங்கிரஸ் தலைவர்களிடம் பெரிதாக தொடர்பில் இல்லை என்பதை அவர்களே தெரிவித்துள்ளனர். மேலும் ஜெய்ராம் ரமேஷ் மேட்ச் பிக்சிங் என்று குறிப்பிட்டிருப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. பாஜக தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து போட்டியில்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்களா என்ற கேள்வி தற்போது நாடு முழுதும் பரபரப்பான பேசுபொருளாகி வருகிறது.

விவேகானந்தன்

கருத்துகள் இல்லை: