தினமணி : ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உள்பட அனைத்து தொண்டு நிறுவனங்களும் பெண்களைப் பணியமா்த்துவதற்கு தலிபான் அரசு சனிக்கிழமை தடை விதித்தது.
நிதிஅமைச்சா் காரி தின் முகமது ஹனீஃப் அனுப்பியுள்ள கடிதத்தின் வாயிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வுத்தரவைத் தொண்டு நிறுவனங்கள் பின்பற்றவில்லையெனில், ஆப்கானிஸ்தானில் அவை செயல்படுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகம் கூறுகையில், ‘தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் முறைபடி ‘ஹிஜாப்’ அணிவதில்லை என ஏராளமான புகாா்கள் பெறப்பட்டுள்ளன ’ எனத் தெரிவித்தது.
இருப்பினும், இந்தத் தடை உத்தரவு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்குமானதா அல்லது ஆப்கான் பெண்களுக்கு மட்டும் பொருந்துமா என்பது குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு செவ்வாய்க்கிழமை தலிபான் அரசு தடைவிதித்தது. இதையடுத்து, தற்போது தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக