புதன், 28 டிசம்பர், 2022

புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலப்பு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

மின்னம்பலம் - Prakash :   குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், “இரட்டைக்குவளை, தாழ்த்தப்பட்டோரை கோயிலில் அனுமதிக்காதது மற்றும் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
”இது மிகவும் முக்கிய பிரச்சனை. இதில், குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது” என குறிப்பிட்ட நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் இவ்வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை: