செவ்வாய், 27 டிசம்பர், 2022

(கோவை தென் சென்னை) கமல் ஹாசன் 2 தொகுதிகளில் களம் இறங்குகிறார் கை சின்னத்தில் போட்டியா? அப்போ மநீம!

 tamil.oneindia.com  -  Vishnupriya R  : சென்னை: 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே அவர் காங்கிரஸுடன் கூட்டணிக்கு செல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மிகப் பெரிய ஆளுமைகளுடன் நன்கு பழக்கம் கொண்டவர் கமல்ஹாசன். அரசியல் ரீதியில் இல்லாவிட்டாலும் திரைத்துறையில் இவர்களுடன் பயணம் செய்தவர். ஜெயலலிதா இறந்தபிறகு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
2018 ஆம் ஆண்டு கட்சித் தொடங்கிய நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட மக்கள் நீதி மய்யம் வெல்லவில்லை. இந்த கட்சி அவ்வப்போது கரைந்து வருகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் , ஆண்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற கொள்கையுடன் கமல்ஹாசன் பயணித்து வருகிறார்.

சட்டசபை தேர்தல்
கடந்த சட்டசபை தேர்தலில் ஐஜேகே மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தார். 3 கட்சிகளுமே தோல்வி அடைந்தன. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸுடன் கூட்டணியா
இதனால் காங்கிரஸுடன் கூட்டணியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய ஒற்றுமைக்காக இந்த யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறாரே தவிர கூட்டணி என்றெல்லாம் கிடையாது என மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன், தன்னை காந்தியின் பேரன் என்றும் ராகுலை நேருவின் பேரன் என்றும் புகழ்ந்திருந்தார்.

டெல்லியில் ராகுல் வீடு
அது மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள ராகுலின் வீட்டிற்கும் சென்றிருந்தார் என கூறப்படுகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்களிடம் கேட்ட போது கமல்ஹாசனின் நிலைப்பாடு அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதே ஆகும். எனவே காங்கிரஸுடன் வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ராகுலின் ஜோடோ யாத்திரையில் கூட தனது தந்தை காங்கிரஸ்காரர் என கமல் கூறியிருந்தார்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களை திமுக ஒதுக்கியது என்றால் அதில் ஓரிரு இடங்களை மக்கள் நீதி மய்யத்திற்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் கை சின்னத்திலேயே மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும் என கமல்ஹாசன் நிர்பந்திக்கப்படலாம். காரணம் தமிழகத்தில் இத்தனை தொகுதிகளில் கை சின்னம் வென்றது என சொல்லிக் கொள்ளலாம். அதுதான் காங்கிரஸுக்கு பெருமையும் கூட!

திமுக, அதிமுகவுக்கு செல்ல வேண்டாம்
திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக காங்கிரஸுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை கமல்ஹாசன் எடுக்கலாம். இந்த ஜோடோ யாத்திரையில் ராகுல், சோனியாவுடன் இதுகுறித்து கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஏற்கெனவே இரு மூன்று தேர்தல்களை சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம் இந்த முறை எப்படியாவது ஒரு இடத்திலாவது வெற்றி வாகை சூட விரும்பும். அதனால் நிச்சயம் காங்கிரஸுடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்றனர்.

கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி
ஒரு வேளை காங்கிரஸுடன் கூட்டணிக்கு சென்றால் ஒரு சீட்டு கமல்ஹாசனுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. அந்த ஒரு தொகுதி எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து மூத்த அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது கமல்ஹாசன், நிச்சயம் கோவை தொகுதியிலோ அல்லது தென் சென்னை தொகுதியிலோ போட்டியிட வாய்ப்புகள் உள்ளன.

இரு தொகுதிகள்
எதற்கான இந்த இரு தொகுதியில் வாய்ப்பிருக்கிறது என்றால் முதலில் கோவை தொகுதி, கமல்ஹாசனுக்கு நல்ல பரிட்சயம் ஆன தொகுதி. கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் வானதியும் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிட்டனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் 2ஆவது இடத்தை பிடித்தார். எனவே அவர் இந்த 2021 தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரை கமல்ஹாசன் மூன்றாவது இடத்திற்கு தள்ளினார்.

கடும் போட்டி
கடைசி வரை வானதிக்கும் கமலுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதி கட்டத்தில் வானதி வென்றார். கமல்ஹாசன் ஆயிரத்து சொட்சம் வாக்குகளிலேயே தோல்வி அடைந்தார். எனவே கமல்ஹாசன் இந்த நூலிழையில் இழந்த வெற்றியை தற்போது அறுவடை செய்ய முயற்சிக்கலாம். மற்றொரு தொகுதியான தென் சென்னை தொகுதி, கமல்ஹாசன் அந்த தொகுதிக்குள்பட்ட ஆழ்வார்பேட்டையில்தான் வசித்து வருகிறார்.

எந்த தொகுதிகள்
அது போல் திநகர், மயிலாப்பூர் ஆகிய இரு சட்டடசபை தொகுதிகளும் இந்த தென் சென்னையில் வருகிறது. இங்கிருக்கும் கமல் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை குறி வைத்தும் அவர் களமிறங்கலாம் என தெரிகிறது. மக்கள் நீதி மய்யமும் காங்கிரஸும் கூட்டணி அமைப்பது என வெளியிட்டால் திமுகவிடம் பேசி தென் சென்னை தொகுதியை காங்கிரஸ் கேட்டு பெறும் என தெரிகிறது. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்.

உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் கோவை மேயர் பதவியை திமுக தன் வசப்படுத்தியது போல் கோவை லோக்சபா தொகுதியை திமுக உரித்தாக்கிக் கொள்ள விரும்புகிறது. எனவே தென் சென்னையா கோவையா என வந்தால் திமுக கோவையைத்தான் தக்க வைக்க முயற்சிக்கும். கோவை எம்பி தொகுதியை திமுக வெற்றி பெற்றால் அடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் கோவை மண்டலத்தையே தட்டித் தூக்கலாம். எனவே காங்கிரஸ் கட்சிக்கு தென் சென்னை தொகுதியை திமுக விட்டுக் கொடுக்கும். காங்கிரஸ் அந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கலாம் என தெரிகிறது என மூத்த அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்ட போது கூட்டணி பற்றிய அறிவிப்புகளையும் தொகுதி பற்றிய அறிவிப்பையும் கமல்ஹாசன்தான் வெளியிடுவார், ஆனால் அவர் காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிடுவார் என சொல்வது அபத்தமாக உள்ளது. வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதற்காகவா இத்தனை கஷ்டப்பட்டு ஒரு கட்சியை தொடங்கினார்? இதற்கு பேசாமல் அவர் ஏற்கெனவே உள்ள ஏதேனும் ஒரு அரசியல் கட்சிகளில் சேர்ந்திருக்கலாமே? எனவே எந்த கட்சியுடன் கூட்டணி என்றாலும் எங்கள் சின்னத்திலேயே நிற்போம் என்றனர்.


Loksabha election 2024: Will Kamal Haasan contest in Coimbatore Loksabha constituency or South Chennai? Will Makkal Needhi Maiam go alliance with Congress?

கருத்துகள் இல்லை: