திங்கள், 26 டிசம்பர், 2022

கமல் ஹசன் தி.மு.க. கூட்டணியில் .. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் போட்டி

Maalaimalar  :  சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன் தேர்தல் களத்தில் இன்னும் ஒரு வெற்றியை கூட ருசிக்காமலேயே உள்ளார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது.
பாரதிய ஜனதா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட ப.வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.
தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு கமல்ஹாசனால் வெற்றி பெற முடியவில்லை. இது அக்கட்சியினர் மத்தியிலும் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் கவனமும் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்துள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாகி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ந்தேதி நடைபயணத்தை தொடங்கிய ராகுல் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

டெல்லியில் ராகுலுடன், கமல்ஹாசன் நடைபயணம் மேற்கொண்டார். இதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன்மூலம் தி.மு.க., காங்கிரஸ் கூட்ட ணியில் இணைவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டும், யூனியன் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் புதிதாக இணைய உள்ளது. கமல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அக்கூட்டணி மூலம் வலுப்பெறலாம் என்கிறார்கள் கமல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாகும் நிலையில் இதுவரை வெற்றி பெறாமலேயே உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதற்கு முடிவு எழுத உள்ளோம்.

2024-ம் ஆண்டு எங்களது வெற்றிக் கணக்கை நிச்சயம் தொடங்குவோம். அதற்கேற்ற வகையில் தான் எங்களது தலைவர் செயல்பட்டு வருகிறார். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் குரல் நிச்சயம் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: