செவ்வாய், 27 டிசம்பர், 2022

மறுக்கப்படும் மடிக் கணினிகள்! ஏக்கத்தில் மாணவர்கள்!

aramonline.in : அதிமுக ஆட்சியில் பிளஸ் 2, மற்றும் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இலவசமாக லேப் – டாப்கள் வழங்கப்பட்டன! திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், புதிய லேப்டாப்களும் தரவில்லை, அதிமுக ஆட்சியில் தேங்கிய 56,000 லேப்டாப்களையும் தரவில்லை. இவற்றை முடக்கி வைத்துள்ளதன் பின்னணி என்ன?
தமிழக அரசின் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் செப்டம்பர்  2011 முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. அதிமுக ஆட்சியில் 38 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.


2019 ஆம் ஆண்டு  28 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்திருந்தார்.
மேலும், ‘6,7,8 வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும்’ என்றும் தெரிவித்து இருந்தார்! 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டது. மேலும், ‘அனைத்து ஆசிரியர்களுக்கும் பாகுபாடில்லாமல் இலவச லேப்டாப் வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.
மடிக் கணினி மாணவர்களுடன் ஜெயலலிதா!

அதிமுக ஆட்சியில் கடைசி காலகட்டத்தில் நீட் தேர்வு மற்றும் பல நுழைவு தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்காக முன் கூட்டியே 70,000 மடிக் கணினிகள் வழங்கப்பட்டன! இப்படியாக தாறுமாறாக அள்ளி வழங்கப்பட்ட லேப்டாப்களை பயன்படுத்துவது தொடர்பாக பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து, ஒவ்வொரு பள்ளியிலும் 20 முதல் 30 கம்யூட்டர்களைக் கொண்ட கம்யூட்டர் லேப்களும் இயங்கின!

இதற்கிடையே அப்போது கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா தீடீரென்று ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, ‘ப்ளஸ் டூ முடித்த அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் தர வேண்டாம் என்றும், அவர்களில் மேல் படிப்புக்கு செல்வோர்களாகப் பார்த்து தேர்ந்தெடுத்து தந்தால் போதும்’ என்றும் அவர் சர்க்குலர் அனுப்பினார்.

இதன் காரணமாக தமிழக அரசு பள்ளிகளில் மட்டும் 55,819 லேப்டாப்கள் தேங்கிவிட்டன! 2020 ஆம் ஆண்டு கொரானா காரணமாக இந்த லேப்டாப்களை மாணவர்களுக்கு வழங்க இயலாமல் போனது. 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்த நிலையில், தேங்கிக் கிடந்த இந்த லேப்டாப்களை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கி இருந்தால் சென்ற ஆண்டே அவர்களுக்கு மிகவும் பயன்பாடாக இருந்திருக்கும். ஆனால், தரவில்லை. ஒருவேளை அதில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது காரணம் என்றால், அதை அகற்றிவிட்டேனும் தந்திருக்கலாம். ஆனால், என்ன காரணத்தாலோ தரப்படவில்லை.
ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மடிக் கணினிகள்!

தற்போது 2022 ஆம் ஆண்டும் முடியவுள்ள தருவாயில் கடந்த மூன்றாண்டுகளாக தேங்கி கிடக்கும் அந்த லேப்டாப்கள் பயன்படுத்ததக்க நிலையில் தான் உள்ளனவா? என்று கூட தெரியவில்லை. ஏனெனில், எலக்ரானிக் பொருட்களை நீண்ட காலம் பயன்பாடோ, பராமரிப்போ இல்லாமல் இருந்தால் செயல் இழந்துவிட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இதை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், பலனின்றி போய்விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத சில தலைமை ஆசிரியர்களிடம் பேசியதில், ”இந்த கம்யூட்டர்களை பராமரிப்பது ஒரு சவாலாக உள்ளது. பள்ளியில் எப்படி பாதுகாத்தாலும் எப்படியாவது ஒரு சில லேப்டாப்கள் திருடு போய்விடுகின்றன! இந்த திருடப்பட்ட லேப்டாப்களுக்கான பணத்தை தலைமை ஆசிரியர் தன் சொந்த பொறுப்பில் கட்டியே ஆக வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், அவர்கள் ஓய்வு பெறும் போது ‘நோ அப்சக்ஸன்’ சான்றிதழ் கிடைக்காது! இந்தப்படியாக இது வரை பல தலைமை ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் தங்கள் கைப்பணத்தை இழந்துள்ளனர். காரணம், அரசு பள்ளிகளுக்கு காவலர்கள் கிடையாது. இதை தனியாக ஒரு பெரிய இடம் எடுத்து மொத்தமாக வைத்து பாதுகாக்க அரசு ஆணையிட்டும் அதை கல்வித்துறை அதிகாரிகள் இது வரை செய்யவில்லை. இது விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருணை காட்டி, உடனடியாக மாணவர்களுக்கு இருக்கும் மடிக் கணினிகளை வழங்க வேண்டும்” என்றனர்.
மறுக்கப்பட்ட மடிக் கணினிகள் குறித்து மறு பரிசீலனை செய்வாரா முதல்வர்?

”இதை பாதுகாப்பது என்பது ஒரு மன உளைச்சலாகவே மாறிவிட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் இது போல 70 முதல் 100 லேப் டாப்கள் வரை உள்ளன! செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமே சுமார் 10,000 லேப்டாப்கள் உள்ளன! இதை மாணவர்களுக்கு வழங்க அனுமதி கோரி நாங்கள் விண்ணப்பித்து ஓய்ந்து போய்விட்டோம். இன்னும் கொஞ்ச காலத்தில் அவை யாருக்குமே பயனின்றி குப்பைக்கு தான் செல்லக் கூடுமோ என்னவோ..! மக்கள் வரிப்பணம் சுமார் 160 கோடிகள் வீணாகின்றது” என வருத்தப்பட்டனர்.

இது மட்டுமின்றி , ”பள்ளிகளின் ஸ்மார்ட் கம்யூட்டர் வகுப்புக்கு தரப்பட்ட கம்யூட்டர்களில் பல பழுதுபட்டு பயன்படாமல் உள்ளன என்றும், அவற்றை பழுது பார்க்க காண்டிராக்ட் தரப்பட்ட நிறுவனங்களுக்கு பல முறை தகவல் தந்தாலும் அவர்கள் பழுது பார்த்து தருவதில்லை” என்றும் தலைமை ஆசிரியர்கள் வருத்தப்பட்டனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, புதிய லேப்டாப்கள் வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், அந்த டெண்டரை எடுக்க எந்த ஒரு தனியார் நிறுவனமும் முன் வரவில்லை என்பது கவனத்திற்குரியது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: