புதன், 28 டிசம்பர், 2022

திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து CID விசாரணை!

 hirunews.lk : திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து CID விசாரணை!
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த 9 பேர் தொடர்பிலும், நாட்டின் அனைத்து காவல்துறை நிலையங்களில் இருந்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்களில் இருவரான சி.குணசேகரன், பூங்கொடி கண்ணா ஆகியோர் துபாய், பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அடிக்கடி பயணம் செய்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஹாஜி சலீமுடன் தொடர்பில் இருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர்களும் சலீமும் இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகளை புத்துயிர் பெறச் செய்ததாக இந்திய புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிம்புலா எலே குணா என்ற சி.குணசேகரன், பூங்கொடி கண்ணா என்ற புஸ்பராஜா, முகமது அஸ்வின், கொட்ட காமினி என்ற சுனில் காமினி பொன்சேகா, பம்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, அதுருகிரிய லடியா, வெல்லே சுரங்கா, மொஹமட் அஸ்மின், திலீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இந்த ஒன்பது இலங்கையர்களும் தொடர் குற்றங்களுக்காக இலங்கை காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.

அதுருகிரியே லடியா என அழைக்கப்படும் நளின் சத்துரங்க, பாதாள உலக உறுப்பினர் சமயன் கொலையின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராவார்.

கிம்புலா எலே குணா எனப்படும் சி.குணசேகரன் சுனில் மெண்டிஸின் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்.

கொழும்பில் வடக்கில் இடம்பெற்ற 10 தனியான கொலைகளில் ஈடுபட்டமைக்காக பூங்கொடி கண்ணா என அழைக்கப்படும் புஷ்பராஜ் தேடப்பட்டு வருகிறார்.

வெல்லே சுரங்கா நாட்டில் 10 கொலைகள் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்.

கொட்ட காமினி என்றழைக்கப்படும் சுனில் காமினி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பம்மா என்றழைக்கப்படும் ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ ஒரு தொழில்முறை துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பல குற்றங்களுக்காக இலங்கை காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.

எனினும் மொஹமது அஸ்மின், மொஹமது அஸ்வின் மற்றும் திலீபன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை: