ஞாயிறு, 27 நவம்பர், 2022

திருச்சி - 5 கொலைகள்...கள்ளக்காதல்.. சாமியார் கண்ணன்-கள்ளக்காதலி யமுனாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கண்ணன் -யமுனா

கண்ணன் -யமுனா

tamil.news18.com :  திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் அருகே அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி நகர். இந்த நகரின் முகப்பிலேயே, ஓணான் கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் பாழடைந்த பங்களா  வீட்டை பகல் வேளையிலும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர் அப்பகுதி மக்கள். குழந்தைகள் கூட 'பேய் வீடு' என்று அந்த வீட்டிற்கு அருகே செல்லக் கூட அச்சப்படுகின்றனர்.
இந்த வீட்டில் பிள்ளைகள் வாழ்ந்தற்கு சாட்சியாக வீட்டு வாசலில் இரண்டு சைக்கிள்கள் உருக்குலைந்த நிலையில் கிடக்கின்றன. உண்மையிலேயே 'மயான' அமைதி மண்டிக் கிடக்கும் இந்த வீட்டில் தான், கடந்த, 2013ம் ஆண்டுக்கு முன்பு, ஆனந்தம் விளையாடும் வீடாக மகிழ்ச்சியான ஒரு குடும்பம் வசித்து வந்தது    

  திருச்சி மாநகரப் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. வைர வியாபாரியான இவர்,
வியாரத்தில் கொடிக் கட்டிப் பறந்தபோது, அவர் பார்த்து, பார்த்து கட்டியதுதான் இந்த பங்களா வீடு.
அழகான மனைவி யமுனா. ஆசைக்கொரு மகளாக சத்யாதேவி, ஆஸ்திக்கு ஒரு மகனாக செல்வக்குமார் என அளவான குடும்பம். நிறைவாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், தங்கவேலின் தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் மூலமாக விதி தனது விளையாட்டை துவங்கியது.


சாமியார் வந்தது எப்படி
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி சரி செய்வது என்று ஆராய்ந்திருந்திராத தங்கவேலு,
பூஜை, புனஸ்காரங்களில் தீவிரமாக ஈடுபட துவங்கினர்.
 இந்நேரத்தில் தான் சாமியார் கண்ணன் அவருக்கு அறிமுகமானார். திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி நகரை சேர்ந்தவர் கண்ணன் (எ) சாமியார் கண்ணன்.
கொல்லன் பட்டறையில், கொத்தனார்கள் பயன்படுத்தும் மணியாஸ் என்கிற மணிக்கரண்டிகள் தயாரித்து, விற்பது தான் இவரது தொழில்.
ஆனால், திருமணம் செய்துக் கொள்ளாத இவரின் நாட்டம் முழுவதும் மந்திரம், மாந்தீரிகம், பில்லி, சூன்யம் என்பதிலேயே இருந்தது. வர்மக்கலையும் கற்றுத் தேர்ந்திருந்தார். கட்டுமஸ்தான உடலுடன், ஆஜானுபாகுவான தோற்றம் உடைய சாமியார் கண்ணனை, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பரிகாரம் செய்வதற்காக தங்கவேலு நாடிச் சென்றார். சாமியார் கண்ணன், தனது குலத்தை அழிக்க வந்த கோடாரிக்காம்பு என்பதை அறியாமல், தங்கவேலு அவரை முழுமையாக நம்பினார். அவர் சொல்லிய வண்ணம் செய்தார்.

அமாவாசை நள்ளிரவில் வீட்டில் ஒரு பூஜை செய்ய வேண்டும் என்று சாமியார் கண்ணன் சொன்னதை கேட்டு, அவரை தனது வீட்டிற்கு அன்போடு அழைத்துச் சென்றார் தங்கவேலு. அன்றிரவுதான் தங்கவேலுவின் மனைவி யமுனாவை கண்ணன் நேருக்கு நேர் சந்தித்தார். பூஜையில் பற்றிய தீ, யமுனாவின் மீதான காமத்தீயாக மாறி, கண்ணன் உடம்பெல்லாம் தகிக்க துவங்கியது.

'காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக' தங்கவேலுவின் தொழிலில் சற்று ஏற்றம் ஏற்பட்டது. கண்ணனின் பரிகார பூஜையின் பலன் என்று நம்பிய தங்கவேலு, 'நான் ஊரில் இல்லாவிட்டாலும் சாமியார் வீட்டுக்கு வந்தால் மரியாதையோடு நடத்தவேண்டும். பூஜையறையை திறந்துவிட வேண்டும்' என்று மனைவிக்கு உத்தரவிட்டார். தொழிலை மேம்படுத்த தங்கவேலு அடிக்கடி வெளியூர் செல்ல, கண்ணனோ யமுனாவின் வீட்டையே சுற்றி, சுற்றி வந்தார். கரைப்பார் கரைக்க கல்லும் கரையும் என்பதை போல யமுனா, கண்ணன் வசமானார்.

முதல் கொலை

மிகத்தாமதமாக இவர்களது கள்ளத்தொடர்பை கண்டறிந்த தங்கவேலு, இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த தங்கவேலுவை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவெடுத்தனர். இவர்களின் திட்டப்படி, கடந்த, 2006ம் ஆண்டுவாக்கில் ஒருநாள் இரவு தங்கவேலுவிற்கு யமுனா அதிக மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். நள்ளிரவில் வீட்டிற்கு வந்த கண்ணன், அவரது தலையில் இரும்புக் கம்பியால் அடித்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இருவரும் சேர்ந்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, சமயபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டு வந்துவிட்டனர். அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு விட்டதால், தங்கவேலு உடல் குறித்த ஒரு தடயமும் தட்டுப்படவில்லை. கடன் தொல்லையால் தனது கணவர் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக' யமுனா சொல்லியதை கேட்டு, உறவினர்களும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் நம்பிவிட்டனர்.

இரட்டைக் கொலை

தங்கவேலுவை கொன்ற பிறகு, யமுனா தனது பாதுகாப்பிற்காக தனது தாய் சீதாலெட்சுமியை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். கைக்குழந்தைகள், கண்ணனுடன் கள்ள உறவு என்று போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், அடுத்த கொலை அத்தியாயம், பைனான்சியர் வடிவத்தில் துவங்கியது.

திருச்சி மாநகரம் கிராப்பட்டி அன்பு நகரைச் சேர்ந்தவர் துரைராஜ். பிரபல பைனான்சியர். இவரிடம், தங்கவேலு  தனது தொழில் நஷ்டத்தின் போது வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். அவரை தேடி அவ்வப்போது வீட்டிற்கு வரும் துரைராஜ், அவர் காணாமல் போன பிறகு (கொலையான பிறகு) அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தார்.

அவருக்கும், தனிமையில் இருக்கும் யமுனா ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். இருவரின் நடத்தையும் கண்ணனுக்கு சற்று சந்தேக தீயை மூட்டியது. ஒரு பூஜை மூலம் மீண்டும் யமுனாவை தன்வசப்படுத்திய கண்ணன் அடுத்த கொலைக் கணக்கை துவக்கினார்.

துரைராஜ், கண்ணன்

கடந்த, 2007ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி துரைராஜை வீட்டுக்கு வரும்படி யமுனா போனில் அழைத்தார். தனது காரில் யமுனா வீட்டிற்கு வந்த துரைராஜை, கண்ணனும், யமுனாவும் வீட்டிற்குள் வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றனர். அவருடைய டிரைவர் சக்திவேலையும் வீட்டுக்கு நைசாக அழைத்து வந்து, இரும்புக் கம்பியால் பின்னந்தலையில் அடித்து கொலை செய்தனர்.

பின்னர் இரண்டு உடல்களையும் அவர்களது காரில் ஏற்றிச் சென்று, திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி அருகே காரோடு சேர்த்து வைத்து எரித்துவிட்டனர். இவர்களுக்கு, திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்த சரவணன், மேலக் கொண்டயம்பேட்டையை சேர்ந்த முத்துகாத்தானும் கூட்டாக இருந்தனர். வழக்கை கண்டறியும் முன்பே முத்துக்காத்தான் இறந்துவிட, வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது சரவணன் உயிரிழந்துவிட்டார். இவர்கள் இருவரின் மரணமும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது. தொழிலதிபர் கொலை வழக்கை வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரித்தனர்.

அதன்பிறகே சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அப்போதே, சாமியார் கண்ணனை அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து உள்ளனர். ஆனால், சாமியார் என்ற போர்வையில் இருந்த கண்ணன் அளித்த சாதுர்யமான பதில்களால், அவர் மீது சந்தேகம் கொள்ளாமல் சிபிசிஐடி போலீசார் அவரை விடுவித்து  விட்டனர். தற்போது இவ்வழக்கில் கண்ணனுக்கும், யமுனாவிற்கும் இரட்டை ஆயுள் தண்டனையை திருச்சி நீதிமன்றம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சிக்க வைத்த டிரம்

மீண்டும், கண்ணன்- யமுனா உறவு தொடர்ந்த நிலையில், அரும்பு மீசை முளைத்த யமுனா மகன் செல்வக்குமார், தாயை கேள்வி கேட்கத் துவங்கினார். வீடு, நிலம், பணப் பரிவர்த்தனையில் துவங்கி, இருவருக்கும் இடையேயான உறவிலும் சிக்கலை ஏற்படுத்தினார்.

எல்லாவற்றிக்கும் உச்சமாக, தனது தந்தை எங்கே சென்றார்? அல்லது எப்படி இறந்தார்? என்று அடிக்கடி கேட்கத் துவங்கினார். 'கண்ணன் தனது வீட்டிற்கு வரக்கூடாது' என்று சண்டையும் பிடித்தார். நிலைமை எல்லை மீறவே, மீண்டும் தனது கொலைப் புத்தியை கூர் தீட்ட துவங்கினார் கண்ணன்.

யமுனாவின் சம்மதத்தோடு கடந்த, 2013 அக்டோபர் மாதம் காலை, சத்யாதேவி வெளியே சென்றிருந்தார். அப்போது, கண்ணன் வீட்டிற்குள் வந்தார். தூங்கி எழுந்து பாத்ரூம் செல்ல வந்த செல்வக்குமாரின் பின்னந்தலையில் இரும்புக் கம்பியால் ஓங்கி அடித்தார். சுருண்டு விழுந்த செல்வக்குமாரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அருகிலேயே யமுனாவும், சீதாலெட்சுமியும் கண்டும் காணாதபடி நின்றுள்ளனர்.

பின்னர், அவரது உடலை சாக்குப் பையில் கட்டி, இரவோடு இரவாக, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புலிவலம் காட்டுப்பகுதியில் உள்ள ஓடையில் வீசிவிட்டு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து கடும் துர்நாற்றம் காரணமாக, அப்பகுதி மக்கள் செல்வக்குமாரின் உடல் குறித்து  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

'யமுனா' என்று தனது தாயின் பெயரை செல்வக்குமார் பச்சை குத்தியிருந்தது மட்டுமே ஒரே துப்பாக இருந்தது. எங்கும், யாரையும் காணவில்லை என்று புகார் எதுவும் இல்லாததால் போலீசார் குழம்பி போயினர்.

அதேநேரத்தில், யமுனாவின் வீட்டில், 'பத்திரிக்கைகளில் பச்சை குத்திய வாலிபர் கொலை' என்ற செய்தியை படிக்க நேரிட்ட சத்யாதேவி, 'தனது தம்பி எங்கே? எங்கே? என்று அடிக்கடி கேட்க துவங்கினார். 'நீங்கள் இருவரும் தான் கொலை செய்தீர்கள். உங்களை போலீசில் சொல்லப் போகிறேன்' என்று யமுனாவையும், கண்ணனையும் மிரட்டியுள்ளார்.

அதே அக்டோபர் மாதம், 15ம் தேதி சத்யாதேவிக்கு நாள் குறித்தார் கண்ணன். செல்வகுமாரை கொன்றதை போலவே பாத்ரூம் அருகில் வைத்து, இரும்புக் கம்பியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் சத்யாவை கொலைச் செய்தார். இந்த கொலை நடந்து முடியும் வரை, யமுனாவும் அவரது தாயாரும் அறையை விட்டு வெளியே வரவில்லை.

பின்னர், ஒரு டிரம்மில் போட்டு சத்யாதேவியின் உடலை அடைத்து, குட்டியானை ஆட்டோவில் ஏற்றிச் சென்று புலிவலம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் வீசினார். டிரம்மில் இருந்து வந்த துர்நாற்றம் குறித்து பொதுமக்கள் தகவல் சொல்ல, அடுத்தடுத்த கொலைகளால் அதிர்ந்து போனது திருச்சி மாவட்ட போலீஸ்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை போல பளிச்சிட்டது, சத்யாதேவியின் உடல் இருந்த டிரம்மின் ஓரத்தில் இருந்த ஒரு கடையின் முகவரி. உடனே, திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோட்டிற்கு விரைந்த போலீஸ் ஆயில் டிரம் விற்றவரை அள்ளியது. அவரிடம் பெற்ற தகவலை வைத்து ஆட்டோ டிரைவர் சண்முகத்தை பிடித்து விசாரித்தனர்.

அதையறிந்த, கண்ணன், யமுனா, சீதாலெட்சுமி ஆகியோர் ஆந்திராவிற்கு தப்பியோடினர். ஆனால், போலீசார் அவசரப்பட்டு அவர்களை துரத்தாமல், ஆதாரங்களை மட்டும் இங்கு அமைதியாக திரட்டிக் கொண்டிருந்தனர்.

'போலீஸ் தங்களை தேடவில்லை' என்று நினைத்துக் கொண்ட மூவரும் ஒரு நாள் அதிகாலை வேளையில் வீட்டிற்குள் நுழைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவர்களை கைது செய்து, போலீசார் ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.

யமுனாவின் மகன், மகள் கொலையினை வைத்து, கண்ணனை தட்டித் தூக்கிய போலீஸ், தங்கவேலுவின் கொலையையும் உறுதிச் செய்தது. அதைத்தொடர்ந்து, கண்ணனை காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார், தொழிலதிபர் துரைராஜ், டிரைவர் சக்திவேல் இரட்டைக் கொலை வழக்கிற்கு முடிவுரை எழுதியது.

தற்போது இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதன் மூலம் போலீசாரின் விசாரணை சரியானதே என்று நீதிமன்றமும் உறுதிச் செய்துள்ளது. கண்ணனும், யமுனாவும், தங்களின் மரணத்திற்குண்டான தண்டனையை பெறுவதற்கு முன்பே பெற்ற இரட்டை ஆயுள் தண்டனையை செல்வக்குமாரும், சத்யா தேவியும் கொண்டாடுகிறார்களோ என்னவோ.. பாழடைந்த அந்த வீட்டு வாசலில் ஆலமரச் செடியும், மாடியில் வேப்ப மரச் செடியும் தழைத்து தலையாட்டுகின்றன.

ஒரு பெண்ணின் தவறான நடத்தை குடும்பத்தை எப்படி நிர்மூலமாக்கும் என்பதற்கு மெளன சாட்சியாக, பயம் காட்டியபடியே நிற்கிறது அந்த பாழடைந்த பங்களா..

 

கருத்துகள் இல்லை: