திங்கள், 28 நவம்பர், 2022

ஈரான்: ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! ‣ மக்கள் அதிகாரம்


makkalathikaram.com  நந்தன்  :  ஈரானில் கடந்த செப்டம்பர் 16 அன்று மஹ்சா அமினியின் மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்க்கு எதிரான போராட்டமானது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போராட்டத்தின் தொடக்கம்
ஈரானின் morality police அதாவது ஒழுக்கத்தை காப்பாற்றும் காவல்துறை, பணியில் ஈடுபட்டிருந்த போது 22 வயதான மஹ்சா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்றும், உடலோடு ஒட்டிய ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார்.


Morality போலிசால் கடுமையாக தாக்கப்பட்டு அமினி கோமா நிலைக்கு சென்று பின்பு இறந்து விட்டார். இவர் ஈரானிய மகாணமான குர்திஸ்தானை சேர்ந்தவர். குர்திஸ் நகரில், அமினியின் சொந்த ஊரான சாகேஸில் காவல் மரணத்தை (custody death) கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டகாரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் திவான்தாரேவில் நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கொல்லப்பட்டனர்.

அமினி தாக்கப்பட்டதாலும், தலையில் பலமுறை அடித்ததாலும் இறந்ததாக, அமினியின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அரசாங்கமும் காவல்துறையும் இதனை மறுக்கிறது.

ஈரானின் தடயவியல் அமைப்பு, அவரின் மரணம் ஒரு அடிப்படை நோயின் காரணமாகவே நிகழ்ந்தது என கூறுகிறது.

போராட்டத்தை நடத்துபவர்கள் யார்?

ஈரான் அரசு சொல்லும் காரணத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோபத்தை தூண்டியது. தலைநகரம் தெஹ்ரான் உட்பட குர்திஸ் பிராந்தியங்களில் போராட்டங்கள் கொளுந்துவிட்டு எரிந்தன. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

அனைத்து வயதினரும், இனத்தவரும், பாலின வேறுபாடு பாராமல் ஈரானியர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். முக்கியமாக இளைய தலைமுறையினர் தெருக்களில் இறங்கினர்.

மனித உரிமைகளுக்கான ஹெங்காவ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ரம்யர் ஹசானி கூறுகையில், “பெண்கள் தான் முதலில் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் மற்ற அனைவரும் தங்களை போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர். பெண்களும், ஆண்களும் இணைந்தே போராடினர். ஈரான் அனைத்தும் ஒன்று சேர்ந்தது.

“இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் ஈரானின் வரலாற்றில் முதன்முறையாக இனங்களிடையே இந்த தனித்துவமான ஒற்றுமை நிலவுகிறது. அனைவரும் ஒரே முழக்கத்தை எழுப்புகிறார்கள். அவர்களின் கோரிக்கையும் ஒன்று தான்.

அடுத்த கட்டத்தை எட்டியிருக்கும் போராட்டம்

133 நகரங்கள் மற்றும் 122 பல்கலைகழகங்களில் நடந்த போராட்டங்களில் 253 மாணவர்கள் உட்பட 14,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக Hrana நிறுவனம் கூறுகிறது.

அமினியின் கொலையை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் சமீபத்தில் போலிசால் கைது செய்யப்பட்ட ‘ஈரானின் ஜேமி ஆலிவர்’ என அழைக்கப்படும் 19 வயதான பிரபல சமையல்காரர் (chef) மெஹர்சாத் ஷாகிதி காவலர்களால் தாக்கப்பட்டு போலிஸ் காவலில் (cusdotial death) கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட பிரபல சமையல்காரர் (chef) மெஹர்சாத் ஷாகிதி

மெஹர்சாத் ஷாகிதி கொல்லப்பட்டது குறித்து அவர் உறவினர் கூறுகையில் “எங்கள் மகன் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது தலையில் பலமாக போலிசார் தாக்கியதன் விளைவாகவே அவர் இறந்தார். ஆனால் அவர்களோ மாரடைப்பால் இறந்ததாக கூறுகிறார்கள்” என்றார்.

செப்டம்பர் 16 அமினியின் காவல் கொலைக்கு பின்னர் வெடித்த போராட்டம், தற்போது மெஹர்சாத் ஷாகிதியின் காவல் கொலைக்கு பின்னர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஷாகிதியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் கலந்துக் கொண்டனர். அவர்கள் மத அடிப்படைவாத அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

காவல் கொலைகளுக்கு அரசபயங்கரவாதம் என்ன காரணத்தை, ( நமது நாட்டில் சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெபராஜ் கொலையின் போது) கூறினார்களோ, அதே காரணத்தை தான் ஈரானில் அமினி, ஷாகிதி மரணத்தின் போதும் கூறி தப்பிக்க முயற்சித்தார்கள். ஆனால் இங்கு தீர்மானிக்கும் இடத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

போராட்டத்தை திசை திருப்ப முயற்சிக்கும் மத அடிப்படைவாதிகள்

இஸ்லாமிய குடியரசின் மூத்த தலைவரான அலிகமேனி கூறுகையில், மேற்கத்திய நாடுகள் ஈரானிய இறையாட்சிக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுகின்றன என்றார். அமெரிக்காவும், இஸ்ரேலும் தான் காரணம் என்றும் கூறுகிறார். தாங்கள் அமினியின் மரணத்திற்கு வருந்துவதாகவும் அதே வேளையில் வெளிநாட்டினர் ‘ஈரானிய துரோகிகள்’ உதவியுடன் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் கார்ப்பரேட் – காவிபாசிசத்திற்கு  எதிராக போராடும் மக்களை இந்துமத வெறியர்கள் ‘தேசத்துரோகிகள்’ என்று அழைப்பது போல், ஈரானிய மத அடிப்படைவாதிகள் ஹிஜாப்பிற்கு எதிராக போராடுபவர்களை ஈரானிய துரோகிகள் என்கிறார்கள்.

போராட்ட வடிவங்கள்

ஈரானில் ஏறக்குறைய அனைத்து வகையான ”அமைதியான, வன்முறையற்ற” எதிர்ப்புகளை மக்கள் பயன்படுத்தினர் என்று ஹசானி கூறுகிறார்.

ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் தங்கள் ஹிஜாப்பை எரித்தனர். பெண்கள் நடனமாடியும் ,தங்கள் தலைமுடியை வெட்டி எரிந்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பள்ளிகள், பல்கலைகழகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவங்களில் வேலைநிறுத்தங்கள் நடந்ததாக பதிவாகியுள்ளது.

சிலமுறை வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன. எதிர்ப்பாளர்கள் பாதுகாப்பு படையினரின் கட்டிடங்களை எரித்தனர்.

வெளிநாடுகளிலும் போராட்டம்

ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. ஸ்வீடனின்  ஸ்டாக்ஹோம் முதல் கிரீஸின் ஏதென்ஸ்  வரை பெண்கள் தங்களது ஆதரவை ஈரானியர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர். பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டத்தின் மூலம் தங்களது ஆதரவை ஈரான் மக்களுக்கு தெரிவித்தனர்.
சுவீடனில் தலைமுடியை வெட்டியெறிந்து ஈரானிய மக்களுக்கு ஆதரவளிக்கும் போராட்டகாரர்கள்

ஈரான் அரசின் அடக்குமுறை

போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே, குறிப்பாக குர்திஸ்தான் மற்றும் பலுதிஸ்தான் போன்ற பகுதிகளில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களை (குர்திஸ் இன மக்கள்) பாதுகாப்பு படையினர் ”மிகவும் கடுமையாக” ஒடுக்கினர்.

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக கார்களின் ஹாரன் அடிக்கப்பட்டதற்காக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான பத்திரிக்கையாளர்கள் (அமினியின் மரணத்தை முதலில் தெரிவித்தவர்கள் உட்பட), வழக்கறிஞர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் கைது செய்யப்பட்டதாக Iranwire தெரிவித்துள்ளது.

ஈரானின் மனித உரிமைகள் தொடர்பான hrana செய்தி நிறுவனம், அக்டோபர் 29 நிலவரப்படி போராட்டக்களத்தில் 44 சிறுவர்கள் உட்பட 283 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கூறுகிறது.

குர்திஸ்தானில் சில பகுதிகளில் பொதுமக்கள் மீது 50 calibre machine gun பயன்படுத்தியதாகவும் தெரிய வருகிறது. இந்த வகை ஆயுதம் பொதுவாக போர்களில் எதிரி நாட்டின் மீது பயன்படுத்தப்படுபவை.

ஈரானின் உயர்மட்ட நீதிபதி ”கலவரங்களின் முக்கிய கூறுகளுக்கு” கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் “தேவையற்ற அனுதாபங்களை” தவிர்க்க வேண்டிய நேரமிது என்றும் கூறியுள்ளார்.

மக்களின் கோபம்

அரசாங்கத்தின் இஸ்லாமியக் கொள்கைகள், குறிப்பாக ஆடைக்கட்டுபாடுகள் மீது ஈரானில் ஆழ்ந்த கோபம் உள்ளது. 1983-ல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்ட போதும் எதிர்ப்புகள் கிளம்பின. அன்று தணிந்திருந்த நெருப்பு ‘மஹ்சா அமினியின் கொலையை ‘ஒட்டி பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

2021-ல் மதஅடிப்படைவாதியான இப்ராஹிம் ரைசி பதவியேற்ற பிறகு பெண்களின் ஆடை கட்டுபாடுகளை அதிகப்படுத்த தொடங்கினார். அப்போதிலிருந்தே மக்களிடையே ஒருவித எதிர்ப்பு தொடங்க ஆரம்பித்து விட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளான ஹசன் ரவுஹானி மற்றும் முகமது கடாமி ஈரானில் சமூக கட்டுப்பாடுகளை குறைக்கவும், மேலும் ‘ஜனநாயக’ சுதந்திரங்களை கொண்டு வரவும் கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன.

ஈரானில் சமீபத்திய காலங்களில் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதே நேரத்தில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. ஈரானியர்களுக்கு எதிர்காலம் இருக்குமா என்ற சூழ்நிலையில், இளைஞர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆடம்பர வாழ்க்கையை பார்க்கிறார்கள். இதுவும் அவர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்து தோல்வியுற்றதும் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, தெஹ்ரான் அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்துவதாக கூறி 2018-ல் ஈரான் மீது சர்வதேச பொருளாதார தடைகளை விதித்தார். இதனால் ஈரானின் பணவீக்கம் அதிகரித்தது. பணவீக்கம் அதிகரித்தால் நமது நாட்டில் என்ன நடக்குமோ அதே தான் ஈரானிலும் நடந்தது. பொருளாதார சுமைகளை மக்கள் சுமக்கும் நிலை ஏற்பட்டது. இதுவும் அவர்களின் கோபத்திற்கு முக்கியமான காரணம்.

உலகமயமாக்கத்தின் விளைவாகவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாகவும் அங்குள்ள இளைஞர்களும், பெண்களும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் இங்கு நமக்கு இல்லையே என்று கருதுகிறார்கள்.

ஈரானில் கட்டாய மத வகுப்புகளுக்கு பெண்கள் செல்ல வேண்டும். பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களில் ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் பாலின பிரிவினையுடன் இஸ்லாமியம் குறித்த கட்டாய வகுப்புகளில் கலந்துக் கொள்ளவும் வேண்டும்.சுதந்திரமற்ற,இந்த கட்டுப்பாடுகள் எரிகின்ற,தீயில் எண்ணெய் ஊற்றுவதை போல்,மக்களின் கோபத்தை மேலும் அதிகமாக்கி விட்டன.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போதைய போராட்டங்கள் முற்றிலும் வேறுபட்டவை

கடந்த 2009ம் ஆம் ஆண்டு நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சினையை மையப்படுத்தி தான் போராட்டங்கள் நடந்தன. ஆனால் 2019-ல் சமுதாயத்தின் ஏழைபிரிவினர் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தை நடத்தியதாகவும் தெரிவிக்கிறார்கள்.

ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமினிக்காக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். கடந்த கால போராட்டங்களில் இருந்து இந்த எதிர்ப்புகளை வேறுபடுத்துவது என்னவென்றால் மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய குடியரசு அதன் முக்கிய ஆதரவாளர்களிடையே நம்பிக்கையை இழந்து விட்டதையும் காட்டுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் முதல் முறையாக, கோம் மற்றும் மசாத் போன்ற பாரம்பரிய மற்றும் பழமைவாதம் அதிகம் நிறைந்த நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது.

மாற்றத்தை உருவாக்கிய போராட்டம்

ஈரானில் ஹிஜாப்பை எதிர்த்த போராட்டங்கள் வீரியமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் தென்கொரியாவில் நடக்கும் தடகள போட்டியில் ஈரானின் ஆடைக்கட்டுப்பாட்டு சட்டதை மீறி ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுள்ளார் ஈரான் வீராங்கனை இல்னா ரெகாபி. அவரின் இந்த முடிவுக்கு ஈரானிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப்பிற்கு எதிரான, ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமானது மதஅடிப்படைவாதிகளுக்கு எதிரானதாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.

ஈரானிய மக்களின் இந்த போராட்டம் இந்தியாவில் உள்ள இந்துத்துவ பாசிஸ்ட்டுகளையும் அச்சம் கொள்ள வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் ஈரானிய மக்கள் அனைவரும் இன அடையாளங்களை கடந்து மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தது போல, இந்திய மக்களும் கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக ஓரணியில் சாதி, மதம் கடந்து ஒன்றிணைய வேண்டும். இதையே ஈரானிய மக்களின் போராட்டம் உணர்த்துகிறது.

    நந்தன்


கருத்துகள் இல்லை: