சனி, 3 டிசம்பர், 2022

குஜராத் தேர்தலை உற்று நோக்கும் திமுக தலைவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்?

மாலைமலர் : சென்னை:கடந்த 1-ந்தேதி குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. நாட்டின் மேற்கு பகுதியில் மும்முரமாக வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் தெற்கு பகுதியான சென்னையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள்.
தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குஜராத் தேர்தலை பற்றியும், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை பற்றியுமே அதிக நேரம் விவாதித்து இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தொடர்பான தீர்மானம் மட்டுமே வெளியிடப்பட்டது.
குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் மத்தியிலும் ஆட்சி நடக்கிறது. மீண்டும் குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அது பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.
2024-ம் ஆண்டு தான் தேர்தல் நடைபெறும். அதற்கு முன்னதாகவே கூட அதாவது அடுத்த ஆண்டு (2023) தொடக்கத்திலோ அல்லது பிற்பகுதியிலோ தேர்தல் வரலாம். எனவே இப்போதே தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

பூத் கமிட்டிகளை உடனடியாக அமையுங்கள். கமிட்டி விபரங்களை உடனடியாக கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் பணிகளை தொடங்குவதற்கு முன்பு கூட்டணி கட்சியினரிடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கு தேவையான பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் உடனே தொடங்கிவிடுமாறு மாவட்ட செயலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: