செவ்வாய், 29 நவம்பர், 2022

அமைச்சர் பிடிஆர் செய்வது சரியல்ல.. அதிமுக அரசை விட மோசம்.. முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கடிதம்!

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  : சென்னை : இன்றைய தமிழக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, முந்தைய அதிமுக அரசை விட மோசமாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் நோக்குடனும் செயல்படுவதாகவும் நியாயமான கோரிக்கைகளை கூட உதாசீனப்படுத்துவதாகவும் அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அதே கால இடைவெளிகளில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அரசு ஊழியர்‌, ஆசிரியர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ தொடர்பாக நிதி அமைச்சர்‌ தொடர்ந்து தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அகவிலைப்படி


சேலம் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தவணைகளில் வழங்க வேண்டிய அகவிலைப்படியினை கொரோனா பெருந்தொற்று காரணமாக முடக்கி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கும் மேற்கண்ட மூன்று தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வை முடக்கி வைக்க தமிழக அரசும் முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை 2020 ஏப்ரல் மாதம் வெளியிட்டது. முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படியினை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக 11 சதவீதம் உயர்த்தி கடந்த 01.07.2021 முதல் ரொக்கமாக தனது ஊழியர்களுக்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

பட்ஜெட் உரையில்
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 01.07.2022 முதல் 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை பெற்று மொத்தம் 31 சதவீதமாக அகவிலைப்படி பெற்று வந்தனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு 01.04 .2022 முதல் தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது அறிவித்தார். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தொடர் போராட்டங்களை அறிவித்து நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர் போரட்டங்கள் காரணமாக அகவிலைப்படி உயர்வு 01.01.2022 முதல் வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்ற விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

ஆறு மாதங்கள் தாமதமாக
தமிழக முதல்வர் அறிவித்தபடி தமிழக அரசு ஊழியர்கள் 01.07.2022 முதல் பெற வேண்டிய அகவிலைப்படி உயர்வினை ஆறு மாதங்கள் தாமதமாக உயர்த்திப் பெற்றனர். அதன் பின்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 01.01.2022 முதல் மேலும் 3 சதவீத அகவிலைப்படி அதாவது 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு ரொக்கமாக வழங்கப்பட்டது. இந்த உயர்வினையும் தமிழக அரசு 01.01.2022 முதல் வழங்காமல் ஆறு மாத காலம் தாமதமாக 01.07.2022 முதல் மட்டுமே வழங்குவதாக அறிவித்தது. இந்த நிர்வாக உத்தரவும் கூட, புதிய நடைமுறையாக தமிழக முதலமைச்சர் அவர்களது சுதந்திர தின உரையின் போது அறிவிக்கப்பட்டது.

எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது
தற்சமயம் மத்திய அரசு கடந்த 01.07.2022 முதல் தனது ஊழியர்களுக்கு 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கியுள்ளது. இந்த உயர்வினை தமிழக அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளிவரும் என தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி அறிவிப்பு வெளிவரும் என்ற ஊழியர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. கடந்த 1970 காலகட்டத்தில் இதே தி.மு.க அரசு எட்டு தவணைகள் அகவிலைப்படியை வழங்க மறுத்ததால் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டதை ஒப்பிட்டு பார்க்கும் சூழல், தற்சமயம் உருவாகி உள்ளது.

3 மாத ஊதியத்தை இழந்துள்ளோம்
கடந்த இரு ஊதியக் குழுக்களில் முறையே 12 மாதம் மற்றும் 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை வழங்கப்படாத நிலையில், தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு உரிமை முடக்கப்பட்டு ஒவ்வொரு அரசு ஊழியரும் சுமார் 3 மாதங்கள் நிகர ஊதியத்தை இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மட்டும் இழந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களது விலைவாசியும் மிகக் கடுமையாக உயர்ந்து வரும் இன்றைய சூழலில், தமிழக அரசின் இத்தகைய உரிமை முடக்க நடவடிக்கைகளால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொதுமக்களும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

அதிமுக அரசை விட மோசமாக
முந்தைய அ.தி.மு.க அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும், போராட்டங்களையும் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது. அரசு ஊழியர்களின் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து, அதன் மூலம் அரசு ஊழியர்களின் மிகப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசின் தற்போதைய அணுகுமுறை, தான் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிர்மறையாகச் செயல்படுவதாக உள்ளது. இன்றைய தமிழக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, முந்தைய அ.தி.மு.க அரசை விட மோசமாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் நோக்குடனும் செயல்படுவதாகவும் நியாயமான கோரிக்கைகளை கூட உதாசீனப்படுத்துவதாகவும் கருத வேண்டிய நிலை ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

மிகுந்த வேதனை
கடந்த 07.05.2021 தேதியில் ஆட்சிப் பொறுப்பேற்ற தற்போதய தமிழக அரசு, தனது முதல் நிதி நிலை அறிக்கையில்‌, நிதி வருவாயில்‌ ஒரு ரூபாயில்‌ 19 பைசா ஊதியத்திற்காகவும்‌, 8 பைசா ஓய்வூதியத்திற்காகவும்‌ செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு, அதன் பின் ஊடகங்களில்‌ 1 ரூபாயில்‌ 65 பைசா ஊதியம்‌, ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற தவறான விவரங்களைப் பொது வெளியில்‌ தெரிவித்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க இன்றைய தமிழக அரசும், நிதியமைச்சரும் முயன்று வருவது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. இன்றைய உலகமயமாக்கல்‌ சூழலில்‌ அதிகரித்துவரும்‌ விலைவாசி உயர்வு, பணவீக்கம்‌ ஆகியவற்றோடு சமீபத்திய பேரிடர் காலத்தில்‌ ஏற்பட்ட இழப்புகள், அரசு ஊழியர்‌களையும் ஆசிரியர்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

நிதி அமைச்சர் உண்மைக்கு மாறாக
ஊழியர்களுக்கான நிவாரணங்களை சரியான நேரத்தில் வழங்க வேண்டிய நிதியமைச்சரோ அகவிலைப்படி உயர்வால் அரசின் நிதி நிலை மேலும்‌ மோசமாகும் என்று ஊடகங்களில்‌ உண்மைக்கு மாறான கருத்துத் திணிப்பினை தொடர்ந்து செய்து வருகிறார். மத்திய அரசிடமிருந்து கூடுதல்‌ நிதி பெறுவது, அதைத்‌ தொடர்ந்து முறையாக வரி வசூலிப்பது, மற்றும்‌ தமிழக அரசின்‌ நிதி நிலைமையைச் சீராக்க சாத்தியமான வழிவகைகளை ஆராய்வது என்பதற்கு மாறாக அரசு ஊழியர்‌, ஆசிரியர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ தொடர்பாக நிதி அமைச்சர்‌ தொடர்ந்து தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல. மேலும் தமிழக அரசுத் துறைகளின் வாளாயமான செலவுகளுக்குக் கூட சரிவர நிதி ஒதுக்கீடு உரிய காலங்களில் செய்வதில்லை என அறிய வருகிறோம்.

திசை திருப்பும்‌ நிதியமைச்சரின் செயல்
நிதியமைச்சர்‌ தொடர்ந்து குறிப்பிடுவதைப் போல் தமிழ்நாட்டின்‌ நிதிச்சுமை மற்றும்‌ அளவற்ற கடன்‌ சுமைக்கு எவ்வகையிலும்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்கள்‌ காரணமுமல்ல. அரசு ஊழியர்களின் கைகளுக்குச் செல்லும் நிதி அவர்களிடமே முடங்கி விடுவதுமில்லை. மாறாக, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வுதியத் தொகை மட்டுமே பொதுச்சமூகம் முழுமைக்கும் மறுபகிர்மானம் செய்யப்பட்டு அதன் விளைவாக மாநிலத்தின் பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதாரம் செழுமையடைந்து, நுகர்வு அதிகரித்து தொழில் வளம் பெருகும் என்பதே யதார்த்தமான உண்மையாகும். எனவே இதுபோன்று தவறான இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப் பரப்பி மக்களை அரசு ஊழியர்களுக்கு எதிராக, திசை திருப்பும்‌ நிதியமைச்சரின் செயல் ஏற்புடையதல்ல. இது, இந்த அரசின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்களையும், மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.

அரசியல் ரீதியான அணுகுமுறை
மத்திய அரசின்‌ தவறான பொருளாதாரக் கொள்கைகளும்‌, நிதிப் பங்கீடும்‌ மாநில அரசுகள்‌ நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்‌ நிலைமைக்கு ஆட்படுத்தியுள்ளன என்பதை அரசு ஊழியர்‌, ஆசிரியர்கள்‌ நன்கு உணர்ந்தே உள்ளனர். அதே சமயம், அரசு ஊழியர்‌, ஆசிரியர்களுக்கான ஊதியச்‌ செலவு அரசின்‌ நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ வளர்ச்சித்‌ திட்டங்களை மக்களிடம்‌ கொண்டு செல்வதற்கான முதலீட்டுச்‌ செலவு என்ற அடிப்படையில்‌ ஊதியச் செலவிற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு பெறுவதற்கான நிர்வாகம்‌ மற்றும்‌ அரசியல்‌ ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.‌ அதுவே, சரியான அரசியல் ரீதியான அணுகுமுறையாகும்.

வெட்டிச் சுருக்கி
மேலும் சமீப காலமாக வெளியிடப்படும் அரசாணைகள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட அரசுப் பணியிடங்களை எல்லாம் வெட்டிச் சுருக்கி, புற ஆதார முறை பணி நியமனங்களுக்கான வாசலை திறந்துவிட்டுள்ளது. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குள் ஊடுருவி, கொள்ளை லாபம் பெற சமீபத்தில் வெளிவந்த அரசாணைகள் வழிவகுத்துள்ளது. அரசுப் பணிகளை முறையாக நியமனம் செய்யாமல் புற ஆதார முறையில் நியமனம் செய்ய முடிவெடுத்ததன் மூலம் இந்த அரசு இதுவரை பின்பற்றி வந்த சமூக நீதி கொள்கையினை காற்றில் பறக்கவிட முடிவெடுத்து விட்டதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கருதவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

​தொடர் போராட்டம்
அரசின் இத்தகைய ஊழியர் விரோத அணுகுமுறைகளுக்கு எதிராகவும், மத்திய அரசு வழங்கியுள்ளது போல் அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர்களுக்கும், உரிய கால இடைவெளிகளில் வழங்கிட வேண்டும் எனக் கோரியும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு உரிமையினை உடன் திரும்ப வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நவம்பர் 24ஆம் தேதி கருப்பு உடையுடன் பணிபுரிந்து, ஆர்பாட்டம் நடத்தி இந்த முறையீடு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக தமிழக முதல்வர் அவர்களது கவனத்திற்கு அனுப்பப்படுகிறது.

நியாயம் வேண்டும்
இம்முறையீட்டிலுள்ள நியாயங்களை உணர்ந்து, உரிய கால இடைவெளிகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் போன்ற நிதிப் பலன்களை உடனுக்குடன் உரிய காலங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் 2023 தமிழர் திருநாளாம் தைத் திருநாளினை கருப்பு பண்டிகை தினமாக அனுசரிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதையும் முதலமைச்சர் அவர்களுக்கு கவலையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

TN Government Employees has alleged that DMK government is refusing to fulfill its promises and is acting worse than the previous AIADMK government to threaten the government employees and neglecting even their reasonable demands.

கருத்துகள் இல்லை: