வியாழன், 7 ஜூலை, 2022

சென்னை சங்கமத்தை தூத்துக்குடியில் மீட்டெடுத்த நெய்தல்: கலக்கிய கனிமொழி

 மின்னம்பலம் : கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை சங்கமம் என்ற பெயரில் நாட்டுப்புற கலை விழாக்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டன. அதை அப்போது ஒருங்கிணைத்து நடத்தி, தனது தந்தையாரும் அப்போதைய முதல்வருமான கலைஞரிடம் பாராட்டு பெற்றார் கனிமொழி.
இந்த நிலையில் இப்போதைய திமுக ஆட்சியில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் அரசு சார்பில் கலை விழாக்கள் நடத்தப்பட்டன. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனிப்பில் நடத்தப்பட்ட அந்த விழாக்களில் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற பேச்சுகள் எழுந்தன. அந்த விழாக்கள் சென்னை சங்கமம் போல பெயர் பெறவும் இல்லை.
இந்த நிலையில்தான், தனது 'ஏரியா'வான தூத்துக்குடியில் சென்னை சங்கமம் போலவே நெய்தல் கலை விழா என்ற பெயரில் பிரம்மாண்ட கலை விழாவையும், உணவுத் திருவிழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறார் கனிமொழி எம்பி. 

ஸ்பிக் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு இன்று (ஜூலை 7) முதல் 10 ஆம் தேதி வரை தூத்துக்குடி வ உ சி கல்லூரி மைதானத்தில் மிகப்பெரும் அளவில் நெய்தல் கலை விழாவை நடத்துகிறார் கனிமொழி. இதற்கு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

நெய்தல் கலைவிழாவில் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் பல்வேறு கலை குழுவினர் வந்து தங்களது கலைகளை அரங்கேற்றி பார்வையாளர்களை அசத்தினார்கள்.

நெய்தல் கலை விழாவில் தலைமை உரையாற்றிய கனிமொழி எம்பி, “ நெய்தல் விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அண்ணன் முதல்வர் தளபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த நெய்தல் விழா தூத்துக்குடியில் ஏன் நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள்.
ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று கேட்கிறார்கள். மண் சார்ந்த கலை வடிவங்கள், மக்களின் கலை வடிவங்கள் நம் வாழ்வின் பொக்கிஷம். இவை நம் வாழ்வை வரித்துக் கொள்கிறது. வேறு கலை வடிவங்கள் மதம் சார்ந்த, இறை சார்ந்தவற்றை பிரதிபலிக்கும் சூழலிலே இந்த நாட்டுப்புற கலை வடிவங்கள்தான் நம் வாழ்வை பிரதிபலிக்கின்றன.

இந்த கலைகளில்தான் கேள்விகள் இருக்கின்றன. நம்முடைய சமூகத்தின் மீதான கேள்விகளை முன் வைக்கின்றன கானா பாடல்கள். தொடர்ந்து நம்முடைய வாழ்க்கையுடன் பயணிக்கும் மண் சார்ந்த கலை வடிவங்கள், அடுத்த தலைமுறையை நோக்கியும் பயணிக்கின்றன. அடுத்த தலைமுறைக்கான பாடல்களும் வந்துகொண்டிருக்கின்றன. நம்முடைய கேள்விகளை, நம் அரசியலை முன் வைக்கும் கலை வடிவங்கள் இவை.

இவற்றை நம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால்தான் தலைவர் கலைஞர் இதை தன் ஆட்சியில் நடத்திட ஊக்கப்படுத்தினார். தளபதி அவர்களும் இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நம் பண்பாட்டில் உணவும் சேர்ந்ததுதான். கலைகளும், உணவும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள். அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று பேசினார் கனிமொழி எம்பி.

விழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். -வேந்தன்

கருத்துகள் இல்லை: