திங்கள், 4 ஜூலை, 2022

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆலோசனைக் கூட்டம்!

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! 

மின்னம்பலம் : திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது.  பெரும்பான்மையாக திமுக வெற்றிபெற்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு மேயர், தலைவர், துணைத் தலைவர் யார் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  


சில இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தார்.
ஆனால், திமுக தலைவர் அறிவித்ததற்கு எதிராக திமுகவினரே தனது ஆதரவாளரை போட்டியிட வைத்ததால் திமுக தலைமை சிலர் மீது கட்சி ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்தது . அதேநேரம் இந்த வகை புகார் கூறப்பட்ட  பலர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் கைவிட்டது திமுக தலைமை.

அப்படிதான் கடலூர் மாநகர மேயராக, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான நகர  செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை அறிவித்தது திமுக தலைமை.  கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் ஆதரவாளரான திமுக கவுன்சிலர் கீதா குணசேகரனுக்குப் பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுகள் இருந்தும் அவரை தலைமை அறிவிக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ. ஐயப்பன், தனது ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார்.  தனது ஆதரவாளரான கீதாவை மேயராக்க வேண்டும் என்று அவர் முயற்சித்தார்.   ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்   போலீஸ் உதவியுடன் எம்.எல்.ஏ ஆதரவு கவுன்சிலர்களை வாக்களிக்கவிடாமல் தடுத்து தலைமை அறிவித்த வேட்பாளரை மேயராக்கினார்.  அதுமட்டுமல்ல, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கடலூர் எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளவும் காய் நகர்த்தி வெற்றி கண்டார் அமைச்சர்.

ஐயப்பன் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு நான்கு மாதம் கடந்தும் இன்று வரையில் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜூலை 2ஆம் தேதி, கடலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஐயப்பன் எம்.எல்.ஏ. தனது ஆதரவு கவுன்சிலர்கள் 12 பேர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள திமுக கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் திடீரென்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

அதில் சில கவுன்சிலர்கள்,  “எத்தனை நாள் நாம் அமைதியாக இருப்பது?  நீங்கள் உடனடியாக ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்” என்று ஐயப்பனிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.  ’இன்னும் கொஞ்சம் நாட்கள் அமைதியாக இருங்கள். நிச்சயம் நல்ல முடிவை எடுப்போம்’ என்று பதில் தந்துள்ளார் எம்.எல்.ஏ.அந்தக் கூட்டத்தில் சில நிர்வாகிகள்,    “நீங்கள் அமைதியாக இருப்பதால்தான் கட்சித் தலைமையும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யாமல்  அமைதியாக இருக்கிறார்கள்.  நாம் பாஜகவுக்குப் போனால் உங்கள் குமுறல்களை மேடைபோட்டு மக்கள் மத்தியில் பேசலாம்.  மாநகராட்சியில் நடக்கும் ஊழல்கள் அட்டகாசங்களை மக்களிடம் சொல்லலாம். அப்புறம் உங்களைப் பார்த்து அமைச்சர் பன்னீரே பயப்படுவார்.  விரைவில் தெளிவான ஒரு முடிவை எடுங்கள்”  என்று  ஐயப்பனிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால் ஐயப்பனின் வட்டாரத்தில் நிலவும் அதிருப்தியை அறிந்து  பாஜக தலைமையே  ஐயப்பன் எம்.எல்.ஏ.வை அணுகியிருப்பதாகவும் கடலூர் அரசியலில் ஒரு தகவல் அலையடிக்கிறது.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: