திங்கள், 9 மே, 2022

இலங்கை கலவரம் - மேயர் வீட்டுக்கு தீவைப்பு... ஆளுங்கட்சி எம்.பி உயிரிழப்பு... Breaking News (09-05-2022) newsfirst lk

 நக்கீரன் செய்திப்பிரிவு    :  இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே என்ன முடிவெடுப்பார் என்ற யூகங்கள் அங்கு கிளம்பியுள்ளது.  நாளை அல்லது நாளை மறுநாள் புதிய இடைக்கால அரசு நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசிற்கு எதிராக போராடியவர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் குண்டர்களை வைத்து தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்  படுகாயமடைந்துள்ளனர். மஹிந்த ராஜபக்சே ராஜினாமாவைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடிப்பதால் தாக்குதல், துப்பாக்கிச் சூடு என கூடுதல் பதற்றம் கண்டுள்ளது இலங்கை.
 
இந்நிலையில் அண்மை தகவலாக, நடைபெற்ற கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்ததாக ஏ.எஃபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கலவரம் முற்றிய நிலையில் ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காகவே ராணுவம் களத்தில் இறங்கியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் மக்கள் ராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மொரட்டுவை மேயர் வீட்டிலும் தாக்குதல் நடந்துள்ளது. இப்படி இலங்கையில் பல்வேறு இடங்களில் கலவரம் தொற்றியுள்ளது.

 

 
Related

கருத்துகள் இல்லை: