செவ்வாய், 10 மே, 2022

பிரதமர் மகிந்த ராஜபக்சே தப்பியோட்டம்?: நேற்று நடந்த கலவரத்தில் 7 பேர் பலி; 231 பேர் படுகாயம்

 தினகரன் : கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர் பலியானதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் அங்கு பதட்டநிலை நீடிக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில, இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்தது.
பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில்,



ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் களம் இறக்கப்பட்டதால் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் பொலன்னருவாவை சேர்ந்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா, போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது பாதுகாவலரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவர்கள் இருவரின் உடலும் மீட்கப்பட்ட நிலை யில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்பு உள்பட பல இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை சம்பவங்களால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதில் மொத்த வீடும் தீயில் எரிந்து எலும்புக்கூடானது.

ஆளுங்கட்சியை சேர்ந்த பல எம்பிக்கள், மேயர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளும் தொடர்ந்து தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவும் வன்முறை நீடித்தது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதில், நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் நடந்த கலவரத்தின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இமதுவா பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமாரின் வீட்டை வன்முறையாளர்கள் தாக்கியதில், படுகாயமடைந்த அவர், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு இறந்தார். மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக நேற்றிரவு அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியிட்ட அறிவிப்பில், நேற்றிரவுடன் முடிந்த அவசரநிலை பிரகடனம் நாளை (மே 11) காலை 7 மணி வரை மீண்டும் (3வது முறை) நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் அந்த சொகுசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே, வேறு ஒரு ரகசிய இல்லத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேற திட்டமிட்டு இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. கலவரத்துக்கு காரணமான ராஜபக்சே, தப்பிச் செல்லும்போது பொதுமக்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அவரது நடவடிக்கைகள் ரகசியமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கலவர சம்பவங்கள், பிரதமர் பதவி விலகல், மக்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இலங்கையில் பதற்றம் நீடிப்பதால், அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் போராட்டமும், வன்முறையும் அதிகரித்து வருவதால் இலங்கையில் பீதி நிலவுகிறது.

அடுத்த ‘டார்கெட்’ கோத்தபய
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து விவாதிக்க, இந்த வாரமே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், அதிபருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக ஒப்புதல் பெறப்படும். அதிபர் கோத்தபயவால் பிறப்பிக்கப்படும் அவசர நிலை பிரகடனத்திற்கு, முறையாக நாடாளுமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அரசியலமைப்பின்படி அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்படவேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறப்படாத பட்சத்தில், 10 நாட்களில் அந்த அவசரநிலை சட்டம் தானாகவே ரத்தாகிவிடும். வரும் 17ம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ளதால், 16ம் தேதி வரையான 10 நாட்களுக்கு அவசர நிலை சட்டத்தின் மூலமான அதிகாரத்தைத் தன்னிடம் வைத்திருக்க கோத்தபய திட்டமிடுகின்றார்’ என்றார்.

உடனே நாடாளுமன்றத்தை கூட்டுங்க!
இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி, புதிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஆராய நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நாட்டின் காவல் துறை தலைவர் விக்ரமரத்ன மற்றும் இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோ

கருத்துகள் இல்லை: