புதன், 11 மே, 2022

அரவிந்தரின் மறுபக்கம் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் மனைவியை கைவிட்டு பிரெஞ்சு பெண்ணோடு குடும்பம் நடத்தியவர் ....

பேராசிரியர் சுப வீரபாண்டியன் : வரலாற்றாசிரியர் ஆர்.ஆர். திவாகர் எழுதியுள்ள ‘மகாயோகி’ (Mahayogi) என்னும் ஆங்கில நூலும், பிரேம் நாத் பசாஸ் எழுதியுள்ள நூலின் தமிழாக்கமான ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ யும் அரவிந்தர் பற்றிய ஏராளமான செய்திகளை நமக்குத் தருகின்றன.
அரசு மருத்துவரும், சிறந்த பகுத்தறிவாளருமான கிரு­ஷ்ணதாஸ் கோஷ் மகனாக அரவிந்தர் (1872 - 1950) கல்கத்தாவில் பிறந்தார். ஆறாவது வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அவர் படித்தது முழுவதும் ஐரோப்பாவில்தான். மேலை நாட்டுக் கல்வி, மேலை நாட்டுப் பண்பாடு என்னும் சூழலில்தான் அவர் வளர்ந்தார். லண்டனில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில், குதிரையேற்றப் பயிற்சியில் தோற்றதால், அப்பட்டத்தைப் பெற முடியவில்லை. ஆங்கிலேயர்களின் அந்தத் தேர்வு முறையின் மீது அவர் கடுங்கோபம் கொண்டார்.


21 ஆம் வயதில்தான் இந்தியா திரும்பினார். பரோடா சமஸ்தானத்திலும், அங்கிருந்த மாநிலக் கல்லூரியிலும் பணியாற்றினார். 1901 ஆம் ஆண்டு, மிருணாளினி என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
1905 முதல் 1908 வரை தீவிர அரசியலில் ஈடுபட்டார். அகிம்சை அரசியலில் நம்பிக்கையற்றவராக இருந்த அவர், பவானி கோயில் திட்டம் என்னும் ஆயுத அரசியலை முன்னெடுத்தார்.
திலகரின் அரசியல், பிள்ளையார் அரசியல். அரவிந்தரின் அரசியல் பவானி அரசியல்.
1908 ஆம் ஆண்டு, அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, ஓர் ஆண்டு சிறையில் இருந்தார். மேலை நாட்டில் வாழ்ந்து பழகிய அவரை, இந்தியச் சிறை வாட்டியது. அவருடைய குடும்ப வாழ்வும் பல்வேறு பிணக்குகளுக்கு உள்ளாகியது.
சிறையில் இருக்கும்போதே, அவருடைய மனம் மாறத் தொடங்கியது. கீதை, உபநிடத நூல்கள், ஆகியனவற்றைச் சிறையில் படித்துவரும் தான், ஆன்மீகப் பயணத்தைத் தொடங்க விரும்புவதாகச் சிறையிலிருந்த போதே அறிவித்தார். இந்த வழக்கில் தான் விடுவிக்கப்பட்டால், அரசியலை முழுமையாகக் கைகழுவிவிட்டு ஆன்மீகத்திற்குச் சென்றுவிடுவேன் என்று அரசுக்குத் தெரிவித்தார்.
அந்த வழக்கில், அவருடன் குற்றம்சாட்டப்பெற்ற குதிராம் போஸுக்குத் தூக்குத் தண்டனையும், அரவிந்தருக்கு விடுதலையும் கிடைத்தது. அரவிந்தர் கல்கத்தாவை விட்டு வெளியேறி, சந்திரநாகூர் (அதுவும் பிரெஞ்சுக் காலனி) வழியாகப் புதுவை வந்து சேர்ந்தார்.
14 ஆம் வயதிலேயே தனக்கு ஆன்மீகத்தில் நாட்டம் வந்துவிட்டதால், இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை என்றும், அதனால்தான் உன்னை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்றும், தன்னை மறந்துவிடுமாறும் மனைவி மிருணாளினிக்குக் கடிதம் எழுதினார். “14 வயதிலேயே ஞானம் பெற்ற நீங்கள், எதற்காக 29 வயதில், 15 வயதுப் பெண்ணான என்னைத் திருமணம் செய்து கொண்டீர்கள்?” என்று மிருணாளினி கேட்ட கேள்விக்கு அரவிந்தரிடம் இறுதிவரை விடையில்லை.
அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்ட கடிதங்களைத் திவாகர் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.
1917 ஆம் ஆண்டு, காந்தியார், சி.ஆர்.தாஸ், ரவீந்தரநாத் தாகூர் மூவரும், மீண்டும் அரசியலுக்கு வருமாறு அரவிந்தரை அழைத்தபோது, தான் உலக முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அரசியலுக்குத் திரும்ப இயலாது என்றும் அவர் விடையளித்தார்.
1914 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்த பால் ரிச்சர்ட் என்னும் அம்மையார் அவரைச் சந்தித்தார். தாய்நாடு திரும்பிய அவர், 1920களில் மீண்டும் புதுவைக்கு வந்து, அரவிந்தரின் சிஷ்யையாகத் தன்னை அர்ப்ப ணித்துக் கொண்டார்.
1926 இல் அரவிந்தர் மடம் நிறுவப்பட்டது தொடங்கி ‘அன்னை’ என்று அழைக்கப்படும் பால் ரிச்சர்ட்தான் ஆசிரமத்தைப் பார்த்துக் கொண்டார். தன் வாழ்நாளின் கடைசி 25 ஆண்டுகள், அரவிந்தர் பக்தர்களைக் கூடப் பார்க்கவில்லை. தனிமையில் வாழ்ந்து மறைந்தார்.
“திலகர், அரவிந்தர், லஜபதிராய் போன்றவர்கள், இந்து மத எழுச்சியின் ஒரு பகுதியாகவே அரசியலை ஆக்க முனைந்தனர்” என்கிறார் வரலாற்றறிஞர் ஆர்.சி.மஜும்தார்.
அது உண்மைதான் என்பதை, அரவிந்தரின் எழுத்துகள் நமக்கு உறுதி செய்கின்றன. ‘பகுத்தறிவும் அதற்கு அப்பாலும்’ (Reason and beyond reason) என்னும் தன் நூலில், “பகுத்தறிவின் ஒரே எதிரி, மத நம்பிக்கை. நம்பிக்கையின் முன்பு பகுத்தறிவு கைகட்டி நிற்க வேண்டியுள்ளது. பகுத்தறிவால் ஓர் எல்லைக்கு மேல் செல்ல முடியாது” என்று எழுதி மகிழ்கிறார் அரவிந்தர். பகுத்தறி வாளரின் மகனாகப் பிறந்து, மதவாதியாக மாறிவிட்ட அவர் கதை இதுதான்!
- பேராசிரியர் Suba Veerapandian
(கருஞ்சட்டைத் தமிழர், 16.08.2010)

கருத்துகள் இல்லை: